Published:Updated:

`6 பஸ் ரூட்; 90 ரூட் தலைகள்!' - சென்னை போலீஸ் போடும் ஸ்கெட்ச்

ராம் பிரசாத்

சென்னை பேருந்துகளில் பிரச்னை செய்யும் 90 ரூட் தலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூட் தலைகள்
ரூட் தலைகள்

சென்னையில் சமீப காலமாகச் சில கல்லூரி மாணவர்கள் புத்தகமும் கையுமாகச் சுற்றுவதைத் தவிர்த்து பட்டாக்கத்திகளுடன் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ரயிலில் பயணம் செய்த மாணவர்கள் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் கத்தியைத் தேய்த்து பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டனர். சமூக வலைதளத்தில் வெளியான இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

ரயிலில் கத்தியுடன் பயணிக்கும் மாணவர்கள்
ரயிலில் கத்தியுடன் பயணிக்கும் மாணவர்கள்

இந்தப் பரப்பு அடங்குவதற்குள் பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் கும்பலாக மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் பயணம் மேற்கொண்டு கீழே விழுந்தது, பட்டாக்கத்தியுடன் பேருந்தில் செய்யும் அட்ராசிட்டிகள் என அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் காவல்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில்தான் ரூட் தலைகள் பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது. சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காட்டுக்கு 27 E வழித்தடப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அங்கே பேருந்து நிறுத்தத்தில் இருந்த சில மாணவர்கள் வேகமாகப் பேருந்துக்குள் நுழைந்தனர். அவர்களின் கைகளில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். பேருந்துக்குள் ஏறிய சில நிமிடங்களில், அங்கு அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களை அரிவாளால் வெட்டத்தொடங்கினர். பயணிகள் கண்முன்னே இச்சம்பவம் நடந்தது.

கத்தியுடன் வலம் வரும் மாணவர்கள்
கத்தியுடன் வலம் வரும் மாணவர்கள்

இதில் ஈடுபட்டவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பச்சையப்பன் கல்லூரி முதல்வரை காவல்துறை இணை ஆணையர் சுதாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை இணை ஆணையர் சுதாகர், கல்லூரி மாணவர்கள் என்பதால் சாஃப்ட்கார்னர் இருந்தது. இன்றுவரைக்கும் இவர்களை மாணவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்தோம். அரிவாளை எடுத்துக்கொண்டு போவது ரவுடியின் செயல்போல் இருக்கிறது... இனிமேல், மாணவர்கள் மீதான சாஃப்ட்கார்னர் இருக்காது. இவர்கள்மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இந்த நிலையில் சென்னை பேருந்துகளில் பிரச்னை செய்யும் 90 ரூட் தலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பச்சையப்பன், மாநிலக் கல்லூரி, நியூ கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து அறிவுரை கூறவும், ரூட் தலை மாணவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் முன்னாள் மாணவர்களைக் கண்டறிய போலீஸ் முடிவு செய்துள்ளது.

காவல்துறை இணை ஆணையர் சுதாகர்
காவல்துறை இணை ஆணையர் சுதாகர்

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களிடம் 6 மாதத்துக்கு எந்தத் தவறும் செய்ய மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் டிராஃபிக் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது. சென்னையில் பிரச்னைக்குரிய 6 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வழித்தடங்களில் பணிபுரியும் மாநகரப் பேருந்து ஓட்டுநர்களிடம் காவலர்கள் ஆலோசனையில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.