Published:Updated:

பாலியல் புரோக்கர்களுடன் கூட்டணி... களைகட்டிய ஈ.சி.ஆர் கொண்டாட்டம்...

‘போட்டுக்கொடுத்து’ மாட்டிக்கொண்ட இன்ஸ்பெக்டர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ஒரே பேட்ச்சில் தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து, நெருங்கிய நண்பர்களாக வலம்வந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களின் வசூல் மோகம் அவர்களின் நட்பில் விரிசலை ஏற்படுத்தவே... இருவரின் லஞ்ச விவகாரங்கள் அம்பலமாகி, விஜிலென்ஸ் ரெய்டு வரை வந்திருக்கிறது.

பொதுவாகவே ‘வளம் கொழிக்கும்’ பிரிவு என்பதால் சென்னை விபசார தடுப்புப் பிரிவில் பணிபுரிய கடும் போட்டி நிலவுகிறது. அப்படித்தான் கடந்த 2018-ல் இந்தப் பிரிவின் யூனிட் 1, யூனிட் 2 ஆகிய இரண்டு இன்ஸ்பெக்டர் பதவிகளுக்குப் பலரும் முட்டிமோதினார்கள். இதில் நண்பர்களான இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் யூனிட் 1-க்கும், இன்ஸ்பெக்டர் சரவணன் யூனிட் 2-க்கும் பணியமர்த்தப்பட்டனர். யூனிட் 1 கட்டுப்பாட்டில் சென்னை நகரமும், யூனிட் 2-ல் புறநகர்ப் பகுதியும் வரும். நகரப் பகுதியில் முறைகேடாக நடக்கும் மசாஜ் நிலையங்கள், ஸ்பாக்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு வசூல் அதிகம். யூனிட் 2-ல் அது கொஞ்சம் சுமார்தான். அதனால், பதவியேற்ற இரண்டு வாரங்களிலேயே சரவணன் அன்றைய கொங்கு அமைச்சர் ஒருவர் மூலம் யூனிட் 1-க்கு மாற, சாம் வின்சென்ட் யூனிட் 2-க்கு மாற்றப்பட்டார்.

சரவணன்
சரவணன்

இங்கிருந்துதான் பிரச்னையே தொடங்கியது. நண்பர்கள் எதிரிகளானார்கள். யார், யாரிடமிருந்து எவ்வளவு மாமூல் கைமாறுகிறது, பாலியல் தொழில் புரோக்கர்களுடன் இருக்கும் தொடர்புகள் பற்றியெல்லாம் ஒருவர்மீது ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், கமிஷனர் அலுவலகத்துக்கும் மொட்டைக் கடிதங்களை அனுப்பவே... இருவருமே விபசார தடுப்புப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டனர். தற்போது சாம் வின்சென்ட் சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சரவணன் சைதாப்பேட்டை சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்துவரும்நிலையில், அவர்கள் அனுப்பிய பழைய புகார்களே இருவர் வீட்டிலும் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு காரணமாகியிருக்கின்றன.

இவர்களைப் பற்றி நன்கு அறிந்த போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சாம் வின்சென்ட், 1997-ல் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ-யாகச் சேர்ந்தார். சென்னையிலுள்ள முக்கிய காவல் நிலையங்களில் பணியாற்றியவர், கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது கான்வாயில் முதல் நபராக பைக்கில் வலம்வரும் அளவுக்கு வளர்ந்தார். சென்னையைச் சேர்ந்த சரவணனும் 1997-ல்தான் எஸ்.ஐ-யாக தமிழக காவல்துறையில் சேர்ந்தார். அ.தி.மு.க-வில் தொடர்புடைய சரவணன், கொங்கு மண்டல அமைச்சர் ஒருவருக்கு விசுவாசமாக இருந்தார்.

சாம் வின்சென்ட்
சாம் வின்சென்ட்

ஒரே பேட்ச்மேட்களான சாம் வின்சென்ட், சரவணன், சதுப்புநிலப் பகுதியில் பணியாற்றும் மற்றொரு மூன்றெழுத்து இன்ஸ்பெக்டர் மூவரும் இணை பிரியாத ‘ஜிகிரி தோஸ்துகள்.’ இவர்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. வார விடுமுறை நாள்களில் சென்னை அசோக் பில்லர் அருகிலிருக்கும் ஒரு பங்களாவிலும், ஈ.சி.ஆர் சாலையின் ரிசார்ட்டிலும் இவர்களின் கொண்டாட்டம் களைகட்டும். அதுவும், விபசார தடுப்புப் பிரிவிலிருந்தபோது பாலியல் புரோக்கர்களுடன் கைகோத்துக்கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டம் ‘வேறு லெவலில்’ இருந்தது. இந்த நிலையில்தான் புறநகர்ப் பகுதியில் வசூல் குறைவு என்பதால், நகரப் பகுதிக்கு சரவணன் மாற்றலாகிவரவே... இருவரின் நட்பும் உடைந்துபோனது. ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுக்க... இருவரின் உள்விவகாரங்களும் தெரியவரவே, இருவருமே இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களின் மேலதிகாரியான உதவி கமிஷனரும் இடமாறுதல் செய்யப்பட்டார்” என்றவர்கள், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் விவரித்தார்கள்...

“இவர்கள் போட்டுக்கொடுத்த தகவல்களை வைத்தே லஞ்ச ஒழிப்புத்துறை சில ஆதாரங்களைச் சேகரித்தது. இது தொடர்பாக ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரும் புகார் அளிக்கவே... இன்ஸ்பெக்டர்கள் இருவர்மீதும் நவம்பர் 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்தார். மறுநாளே கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பில் தங்கியிருக்கும் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட், புழுதிவாக்கம் காவல் குடியிருப்பில் தங்கியிருக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

பாலியல் புரோக்கர்களுடன் கூட்டணி... களைகட்டிய ஈ.சி.ஆர் கொண்டாட்டம்...
பாலியல் புரோக்கர்களுடன் கூட்டணி... களைகட்டிய ஈ.சி.ஆர் கொண்டாட்டம்...

அப்போது இவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது சென்னையில் கோலோச்சிய பாலியல் புரோக்கர்கள் ‘பூங்கா’ வெங்கடேசன், ‘டெய்லர்’ ரவி ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு அவர்களின் தொழிலைத் தடையின்றி நடத்த உதவியதும் தெரியவந்தது. இந்த ரெய்டில் சாம் வின்சென்ட் வீட்டிலிருந்து 17 ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். சரவணன் வீட்டிலிருந்து எட்டு ஆவணங்களையும், 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சேமிப்பு பத்திரங்களையும், இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறோம். இந்த வழக்கில் சாம் வின்சென்ட் முதல் குற்றவாளியாகவும், சரவணன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றவர்கள், கடைசி ‘ட்விஸ்ட்’ஆக ஒரு தகவலையும் கிசுகிசுத்தார்கள்...

“ஏற்கெனவே இவர்களின் பெயர் ஹிட் லிஸ்ட்டில் இருந்தாலும், இவர்கள்மீதான நடவடிக்கை மட்டும் கிடப்பில் இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஒருவர் வீட்டில் நடந்த ரெய்டில் டைரி ஒன்று சிக்கியது. அதில் இவர்கள் இருவரின் பெயரிலும் சில வரவு கணக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே, இவர்கள் விவகாரம் இப்போது தோண்டியெடுக்கப்பட்டிருக்கிறது. இருவரிடமும் நடத்தவிருக்கும் விசாரணையில் பாலியல் தொழில் விவகாரத்தில் சில வி.ஐ.பி-களின் பெயர் வெளியே வந்தாலும் ஆச்சர்யமில்லை” என்றார்கள்!

தமிழக காவல்துறைக்கு மற்றொரு களங்கம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு