Published:Updated:

மதுபோதை... காதல் ஜோடிகளுக்குக் குறி.. இப்போது பாலியல் வன்கொடுமை!

போலீஸ் முருகன்..
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் முருகன்..

இதே வேலையாகத் திரிந்த போலீஸ் முருகன்..

மதுபோதை... காதல் ஜோடிகளுக்குக் குறி.. இப்போது பாலியல் வன்கொடுமை!

இதே வேலையாகத் திரிந்த போலீஸ் முருகன்..

Published:Updated:
போலீஸ் முருகன்..
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் முருகன்..

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய காக்கிச்சட்டை அணிந்த காவலர் ஒருவனே கயவனாக மாறி, ஏழைப் பெண்ணை விடுதியில் அடைத்துவைத்து விடிய விடியப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். மதுரையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட அவன் கடந்த காலங்களில் இதே வேலையாகத் திரிந்திருக்கிறான் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் அவனைப் பற்றி நன்கறிந்த போலீஸார்!

மதுரையில் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக மாநகரம் முழுவதும் இரவு பகலாக போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி இரவுப் பணியில் ஈடுபட்ட போலீஸ் முருகன், பைப் கடையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் கடை ஊழியர்களுடன் சினிமா இரவுக் காட்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தோம்...

மதுபோதை... காதல் ஜோடிகளுக்குக் குறி.. இப்போது பாலியல் வன்கொடுமை!

வயதான தாயுடன் வசிக்கும் அந்த ஏழைப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது குடும்பமே நிலைகுலைந்துபோயிருந்தது. வயதான தாயும், அந்தப் பெண்ணும் பேசும் திராணியற்று இருந்தார்கள். அவர்கள் சார்பாக நம்மிடம் பேசியவர்கள், ‘‘மதுரையில மகேஷ்ங்கிறவரோட பைப் கடையிலதான் அந்தப் பொண்ணு வேலை பார்த்துச்சு. ரொம்ப ஏழ்மையான குடும்பங்க... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி, புருஷனோட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிஞ்சு அம்மா வீட்டுக்கே வந்துட்டாங்க. அந்தப் பொண்ணோட வருமானத்துலதான் குடும்பமே நடக்குது. போன நவம்பர் 27-ம் தேதி கடையில வேலை பார்க்குறவங்க எல்லாம் சேர்ந்து நைட் ஷோ சினிமாவுக்குப் போயிருக்காங்க. அந்தப் பொண்ணும் அவங்களோட போயிருக்காங்க.

படம் முடிஞ்சதும் கடை ஓனர் மகேஷ், அந்தப் பொண்ணை வீட்டுல விடுறதுக்காக பைக்குல அழைச்சுக்கிட்டுப் போயிருக்கார். கூடவே கடை ஊழியர் ஒருத்தரும் இன்னொரு பைக்குல போயிருக்கார். பெரியார் பஸ் ஸ்டாண்டுகிட்ட வந்தப்ப போலீஸ்காரர் முருகனும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருத்தரும் மகேஷ் வந்த பைக்கை நிறுத்தி விசாரிச்சிருக்காங்க. அப்ப முருகன், ‘ரெண்டு பேரு மேலயும் பிராத்தல் கேஸ் போடுவேன்’னு மிரட்டி, மகேஷ்கிட்ட இருந்த 11,000 ரூபாய், மொபைல்போன், ஏடிஎம் கார்டு எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டான். கார்டு பின் நம்பரைக் கேட்டவன், ‘நாளைக்கு வந்து உன் பொருளை வாங்கிக்கோ. அந்தப் பொண்ணை விசாரிச்சுட்டு ஆட்டோவுல அனுப்பிடுறேன். நீ போ’னு விரட்டியிருக்கான்.

பிரேம் ஆனந்த் சின்ஹா
பிரேம் ஆனந்த் சின்ஹா

மகேஷும் அவரோட வந்த இன்னொருத்தரும் போனதும், கூட இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரையும் இன்னொரு இடத்துக்குப் போகச் சொல்லிட்டான். அந்தப் பொண்ணுகிட்ட ‘பிராத்தல் கேஸ் போட்டு மானத்தை வாங்கிடுவேன்’னு மிரட்டி, வலுக்கட்டாயமா பைக்குல ஏத்தி பக்கத்துல இருக்குற லாட்ஜுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான். அங்கவெச்சு அந்தப் பொண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செஞ்சவன், அதிகாலையில அனுப்பிவைக்கும்போது, ‘மறுபடி நான் எப்ப கூப்பிட்டாலும் வரணும்’னு மிரட்டியிருக்கான்.

நடந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாம தவிச்ச அந்தப் பொண்ணு, மறுநாள் வேலைக்குப் போகாம தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செஞ்சுருக்காங்க. அதுக்குப் பின்னாடிதான் இந்த விவகாரம் கடை ஓனருக்குத் தெரிஞ்சிருக்கு. இதுக்கு நடுவுல மகேஷோட ஏடிஎம் கார்டுல இருந்து 30,000 ரூபாயை முருகன் எடுத்திருக்கான். அதிர்ச்சியடைஞ்ச மகேஷ், பாதிக்கப்பட்ட பொண்ணோட போய் திலகர் திடல் ஸ்டேஷன்ல புகார் செஞ்சாரு. ஆனா, போலீஸ்காரங்க புகாரை வாங்கலை. அப்புறம்தான் அவங்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாகிட்ட புகார் செஞ்சாங்க. கமிஷனர் தலையிட்ட பிறகே முருகனைக் கைது செஞ்சிருக்காங்க’’ என்றார்கள்.

காவலர் முருகன் பற்றி அவர் பணி செய்த காவல் நிலையங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அத்தனையும் மோசமாகவே இருந்தன... ‘‘முருகன் நைட் ரவுண்ட்ஸுல போதையிலதான் இருப்பான். ராத்திரி 11 மணிக்கு மேல ஜோடியா வர்றவங்களை மிரட்டி, பணம் பறிக்குறதுதான் அவனோட வழக்கம். அதேபோல லாட்ஜுல ரூம் போடுற ஜோடிகளை மிரட்டி காரியம் சாதிச்சுக்குவான். திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷன்ல முருகன் டூட்டி பார்த்தப்ப, குடிச்சுட்டு மொபைல் கடையில் தகராறு செஞ்ச புகார்லதான் திலகர் திடல் ஸ்டேஷனுக்கே மாத்துனாங்க. அப்பவும் அவன் திருந்தலை.

சில மாசத்துக்கு முன்னாடி சென்னையிலிருந்து ஒரு காதல் ஜோடி வீட்டுக்குத் தெரியாம மதுரைக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அந்த ஜோடிகிட்ட பணத்தையும், மொபைல்போனையும் பிடுங்கியிருக்கான். அந்தப் பெண்ணோட பெற்றோர், ‘பொண்ணைக் காணோம்’னு சென்னை போலீஸ்ல புகார் செஞ்சிருந்ததால, போலீஸ் போன் சிக்னல் மூலம் பொண்ணைத் தேடியிருக்காங்க. ஆனா, செல்போனை முருகன் வெச்சிருந்ததைப் பார்த்து சென்னை போலீஸ்காரங்க கடுப்பாயிட்டாங்க. அவங்ககிட்ட எதையோ சொல்லி சமாளிச்சு, தப்பிச்சுட்டான். அவனால பாதிக்கப்பட்ட பெண்களோட எண்ணிக்கை அதிகம். எல்லாருமே தைரியமா வந்து புகார் கொடுக்கணும்’’ என்றார்கள்.

மதுபோதை... காதல் ஜோடிகளுக்குக் குறி.. இப்போது பாலியல் வன்கொடுமை!

“இவ்வளவு புகார்கள் இருந்தும் முருகனை பணியில் தொடர அனுமதித்தது ஏன்?” என்று மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் கேட்டோம். ‘‘முருகனின் மீதான பழைய புகார்களை விசாரித்துவருகிறோம். தற்போது புகார் வந்தவுடனேயே முருகனைக் கைதுசெய்திருக்கிறோம். இரவு நேரங்களில் ரோந்து போலீஸாரைக் கண்காணிக்க அந்தந்தப் பகுதி உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர்கள் ரவுண்ட்ஸ் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இனி இது போன்ற தவறுகள் நடக்காது” என்றார்.

இரவு நேரங்களில் காவலர்களை நம்பித்தான் மக்கள் வெளியே வருகிறார்கள்... இனி யாரை நம்புவது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism