Published:Updated:

பாலியல் தொழிலில் பார்ட்னர்ஷிப்! - காவலர்கள் மீது பகீர் புகார்...

ஸ்பா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பா

விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய மற்றொரு இன்ஸ்பெக்டர் ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து இளம்பெண்களை மீட்டிருக்கிறார்

பாலியல் தொழிலில் பார்ட்னர்ஷிப்! - காவலர்கள் மீது பகீர் புகார்...

விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய மற்றொரு இன்ஸ்பெக்டர் ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து இளம்பெண்களை மீட்டிருக்கிறார்

Published:Updated:
ஸ்பா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பா

சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் வீடுகளில் சமீபத்தில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், பாலியல் புரோக்கர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் கைதுசெய்தனர். இந்த நிலையில்தான், சென்னையிலுள்ள 151 ஸ்பாக்களில் போலீஸார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர்கள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸார்!

இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்... ‘‘இன்ஸ்பெக்டர்கள் கைதுசெய்யப்பட்ட வழக்கை விசாரித்தபோது சென்னையில் சில ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் லைசென்ஸ் இல்லாமல் செயல்படுவதுடன், அங்கு பாலியல் தொழில் நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதில் போலீஸார் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒரே நேரத்தில் அனைத்து ஸ்பாக்களிலும் ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. காவல் நிலையங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தால், ஸ்பா உரிமையாளர்களுக்கு விஷயம் கசிந்துவிடும் என்பதால், ரெய்டு நடத்துவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே தகவல் தெரிவித்தோம். அதன்படி தனிப்படையினரும் காவல் நிலைய போலீஸாரும் ஒரே நேரத்தில 151 ஸ்பாக்களில் ரெய்டு நடத்தினோம்.

இந்தச் சோதனையில் கீழ்ப்பாக்கத்திலுள்ள ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு செல்வி என்பவரைக் கைதுசெய்து, ஐந்து பெண்களை மீட்டிருக்கிறோம். எங்கள் சோதனையில் 63 ஸ்பாக்கள் அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திடீர் ரெய்டில் காவல்துறையினர் சிலரும் மறைமுகமாக ஸ்பாக்கள் நடத்துவது தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். சேலையூர் பகுதியில் பணியாற்றும் காவலர் ஒருவரும், வளசரவாக்கம் பகுதியிலிருந்து பனிஷ்மென்ட்டில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர் ஒருவரும் பினாமி பெயர்களில் ஸ்பாக்களை நடத்திவருகிறார்கள். ஏற்கெனவே அந்த ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடந்துவந்த நிலையில், ஸ்பா உரிமையாளர்களை மிரட்டி தாங்களும் தொழிலில் பார்ட்னர்கள் ஆகியிருக்கிறார்கள்.

பாலியல் தொழிலில் பார்ட்னர்ஷிப்! - காவலர்கள் மீது பகீர் புகார்...

சென்னை விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்போது டெல்டா மாவட்டத்தில் டி.எஸ்.பி-யாக இருக்கிறார். இவருக்கும், ஸ்பா பிசினஸில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டரின் செல்வாக்கால் அந்த ஸ்பாவில் பாலியல் தொழில் தங்கு தடையின்றி நடந்தது. இந்தத் தகவல் உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றதும், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு, பிறகு பதவி உயர்வும் பெற்றுவிட்டார். ஆனால், அவரது செல்வாக்கால் இன்னமும் அந்த ஸ்பாவில் பாலியல் தொழில் நடக்கிறது.

கடந்த ஆட்சியில் விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், ஸ்பாவில் பாலியல் தொழில் செய்த நடிகை ஒருவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அந்த நடிகையின் செல்போனில் அப்போதைய ஆளுங்கட்சி ‘வாசனை’ பிரமுகருடன் நடிகை எடுத்துக்கொண்ட படங்கள் இருந்தன. சில நிமிடங்களில் அந்த அரசியல் பிரமுகர் தரப்பிலிருந்தே அந்த நடிகையை விடுவிக்கும்படி பெண் இன்ஸ்பெக்டருக்கு போன் வந்தது. இதையடுத்து, அந்த நடிகையை விடுவித்த பெண் இன்ஸ்பெக்டர், அதன் பிறகு இந்தத் தொடர்புகளைவைத்தே ஸ்பாக்களில் மாமூல் வாங்கி சில கோடிகளை சம்பாதித்துவிட்டார்.

விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய மற்றொரு இன்ஸ்பெக்டர் ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து இளம்பெண்களை மீட்டிருக்கிறார். ஆனால், அவர்களை வழக்கில் சேர்க்காமல் திருமங்கலம் காவல் சரகத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தனியாகப் பாலியல் தொழிலை நடத்தியிருக்கிறார். அங்கு அரசியல் பிரமுகர்கள் தொடங்கி காவல்துறை உயரதிகாரிகள் வரை சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். ஸ்பாக்களில் பாலியல் தொழில் செய்பவர்களிடம் நடத்திய விசாரணையில் `டபுள்’, `123’, `ஃப்ரெஷ்’ என்றெல்லாம் ரகசிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தொழில் நடத்தியிருக்கிறார்கள். அதன் அர்த்தங்களை இங்கு விவரித்தால், அதை நீங்கள் அச்சில் ஏற்ற முடியாது” என்று முடித்தார்.

காவல்துறையில் களையெடுக்கவேண்டிய நேரம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism