தேனியைச் சேர்ந்த பிரேமா என்ற பெண் காவல்துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டாம் நிலை காவலர் பயிற்சியில் சேர்ந்த நேரத்தில் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் விவாதமாக வெடித்துள்ளது.
`அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு கைதானவர்’ என்பதுதான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம். சீருடைப் பணியில் ஒருவர் தேர்ச்சி பெற்றால் மாநில உளவுத்துறை, க்யூ பிராஞ்ச், ஸ்பெஷல் இன்டலிஜென்ட் யூனிட் (SIU) உள்ளிட்ட போலீஸ் உளவு அமைப்புகள் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் விசாரிப்பது வழக்கம். `அப்படியெனில், பிரேமா விவகாரத்தில் போலீஸ் உளவு அமைப்புகள் கோட்டைவிட்டு விட்டனவா?’ என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇது தொடர்பாக மாநில உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ `மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து, கடந்த 2017-ம் ஆண்டு இரண்டு முறையும், 2018-ம் ஆண்டு ஒரு முறையும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகியிருக் கிறார் பிரேமா. கைதாகும்போதெல்லாம் தனது பெயரை `கலைமணி’ என்றும், `கலைவாணி’ என்றும் மாற்றி மாற்றிக் கூறியிருக்கிறார். முகவரி, கணவர் பெயர் என அனைத்தையும் மாற்றிக் கூறியிருக்கிறார். இதுதான் அவரை உடனே கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணம்.

இரண்டு ஆண்டுகளாக அவர் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள வில்லை. ஆனாலும், அவர்மீதான சந்தேகத்தில் மீண்டும் விசாரணை செய்தபோது அனைத்து உண்மை களும் தெரியவந்தன. அதற்கான ஆதாரங்களைத் திரட்டி ரிப்போர்ட் செய்வதற்குள், ஒரு மாதம் காவலர் பயிற்சியை முடித்திருந்தார் பிரேமா. எங்களது ரிப்போர்ட் அடிப்படையில், அவருக்கு வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.

இது குறித்து பிரேமாவிடம் பேசினோம். ‘‘என் உறவினர்கள் போராட்டங்களுக்குச் செல்வார்கள். அவர்களுடன் நானும் செல்வேன். `போலீஸாக வேண்டும்’ என்பது என் கனவு. மாற்றுத்திறனாளி கணவர், இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படு கிறேன். `எப்படியாவது முன்னேறிவிட வேண்டும்’ என்றுதான் போலீஸ் வேலையில் சேர்ந்தேன். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால், போராட்டங்களுக்கே சென்றிருக்க மாட்டேன்’’ என்றார் கண்ணீருடன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில், அரசுக்கு எதிரான மக்கள் உரிமைப் போராட்டங்கள் அதிகரித்துவரும் சூழலில், `போராட்டங்களில் கலந்துகொண்டு கைதானால், போலீஸ் ஆக முடியாதா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சம்பவம். இது குறித்து ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர், கருணாநிதியிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் மக்களின் தேவைக்காக நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலும் காவல்துறையின் சமரசத்தாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையாலும் முடிவுக்கு வந்துவிடும். அப்படி முடிவுக்கு வராமல் சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுப்பதுதான் தண்டனைச் சட்டத்துக்கு உட்பட்ட குற்றம். அப்படிச் செய்தால்தான் அவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். அப்படித்தான் அந்தப் பெண் கைதாகியிருக்க வேண்டும். எப்போது செய்திருந்தாலும் குற்றம் குற்றமே. இதற்கு ஒரே வழி, நீதிமன்றத்தில் முறையிட்டு, தன்மீது எந்தத் தவறும் இல்லை என நிரூபித்து வழக்குகளிலிருந்து வெளியே வர வேண்டும்” என்றார்.
‘‘வழக்குகளை மறைக்கக் கூடாது!’’
“இந்த நடவடிக்கை சட்டரீதியானதா, பிரேமா நீதிமன்றத்துக்குச் சென்றால் பலன் கிடைக்குமா?” சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.ரமேஷிடம் கேட்டோம். “காவல்துறையில் வேலைக்குச் சேரும்போதே தன்மீது வழக்கு இருந்தால் அதைத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இவர் அதை மறைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன் பெயரை மாற்றிச் சொல்லி அடையாளத்தையும் மறைத்திருக்கிறார். இவை இரண்டுமே சீருடைப் பணியாளர் விதிகளுக்கு எதிரானவை. இதுபோல் தங்கள் மீதான சின்னச் சின்ன வழக்குகளை மறைத்த புகாரில் இதற்கு முன்னர் காவல்துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலுவையிலுள்ள அல்லது முடித்துவைக்கப்பட்ட எந்தவொரு வழக்கையும் மறைக்கக் கூடாது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் சீருடைப் பணியாளர் விதிகள் அவர்களுக்கு எதிராகவே இருக்கும்” என்றார்.
இன்னும் சில காவலர்கள்!
2017, ஜனவரி 20-ம் தேதி, மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் சீருடையோடு கலந்துகொண்டார் காவலர் மாயழகு. ஆறு மாதங்கள் கழித்து, விளக்கம் கேட்டு காவல்துறை தரப்பில் மாயழகுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பத்தாவது மாதம், சீருடைப் பணியாளர்கள் விதி 3B-ன் கீழ் மாயழகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு வருடச் சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது, மதுரை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிவருகிறார் மாயழகு.
ஜெயலிதாவை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாகப் பேசினார் என்பதற்காக, சீருடையில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்தவர் காவலர் வேல்முருகன். காவல்துறையால் கண்டிக்கப்பட்டு பணியைத் தொடர்ந்தார். பின்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, காவலர் சீருடையில் மொட்டையடித்துக்கொண்டதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னரும் அவர் அடங்கவில்லை... குச்சனூர் கோயிலில் கும்பாபிஷேகக் கல்வெட்டில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பெயருக்குப் பின்னால் `எம்.பி’ எனப் பொறித்து சர்ச்சையில் சிக்கினார்.