Published:Updated:

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலப்பாளையம் மத குருவிடம் விசாரணை; வீட்டையும் சோதனை செய்த காவல்துறை

மேலப்பாளையம் பகுதியில் போலீஸ் சோதனை

கோவையில் மத குருவாக இருந்த அவர், தற்போது மேலப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதானவர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலப்பாளையம் மத குருவிடம் விசாரணை; வீட்டையும் சோதனை செய்த காவல்துறை

கோவையில் மத குருவாக இருந்த அவர், தற்போது மேலப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதானவர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.

Published:Updated:
மேலப்பாளையம் பகுதியில் போலீஸ் சோதனை

கோவை மாநகரப் பகுதியில், உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ம் தேதி அதிகாலை ஒரு காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவர் சென்ற கார் வெடித்ததன் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறார்கள்.இதனிடையே, இந்த கார் வெடிப்பு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் அமைதியை நிலைநாட்டும் வகையில், டி.ஜி.பி சைலேந்திர பாபு அங்கேயே முகாமிட்டு காவல்துறையினரின் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று இஸ்லாமிய பிரசார பேரவை மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் என்பவரிடம் கோவை மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

சோதனை நடந்த வீடு
சோதனை நடந்த வீடு

அதைத் தொடர்ந்து நெல்லை மாநகர எல்லைக்கு உள்பட்ட மேலப்பாளையம் ஏ.கே கார்டன் பகுதியில் வசித்து வரும் முகமது உசேன் என்பவரிடம் ஆய்வாளர் ரவீந்திரன், ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவரின் வீட்டில் இருந்த பொருள்கள் உள்ளிட்டவற்றை போலீஸ் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சோதனை காரணமாக மேலப்பாளையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

விசாரணைக்கு உள்ளான முகமது உசேன் ஏற்கெனவே கோவையில் மத குருவாக பணியாற்றியுள்ளார். மேலப்பாளையம் பகுதியில் தங்கியுள்ள அவர் டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அதே சமயம் தொடர்ந்து மதப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொழில் விஷயமாக அவர் அண்மையில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. அதனால் அவரிடம் விசாரணை நடத்த நெல்லை மாநகர காவல்துறை திட்டமிட்டு விசாரணை நடந்தது.

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனை

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அனிதா தலைமையில் நடந்த இந்த விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை சோதனையிட்டனர். ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை. சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக மேலப்பாளையம் பகுதியில் நீடித்த இந்த சோதனையில் சந்தேகத்துக்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை. அதனால் போலீஸார் அவரின் வீட்டில் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.