Published:Updated:

போலீஸ் எஸ்.ஐ டு செம்மர பிசினஸ்... தொழிலதிபர் மூசா கடத்தப்பட்டது ஏன்?

கடத்தப்பட்ட மூசா, சென்னை மாதவரம் காவல் சரகத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றியவர். அப்போது செம்மரக்கடத்தல் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறி பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிரீமியம் ஸ்டோரி

அக்டோபர் 5-ம் தேதி இரவு 9:30 மணி... மழை கொட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் நடந்தது அந்த அதிர்ச்சிகரமான சம்பவம். எழும்பூர் மாண்டியத் சாலை சிக்னலில் வேகமாகச் சென்ற கார் ஒன்றின் பேனட்டைப் பிடித்தபடி ஒருவர் தொங்கிக்கொண்டிருந்தார். காரின் முன்பகுதியில் பைக் ஒன்று சிக்கியிருக்க... அதையும் இழுத்துக்கொண்டே வேகமாகச் சென்றது கார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்கள், பைக்கில் சென்றவர்கள் அந்தக் காரைத் துரத்திச் சென்றார்கள்.

வேகமாகச் சென்ற கார், அங்கிருந்த கூவம் ஆற்றின் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியதும், பைக் அங்கே விடுபட்டது. அப்போதும் நிற்கவில்லை கார். காரை சில அடிகள் ரிவர்ஸ் எடுத்த டிரைவர், ஆயிரம் விளக்குப் பகுதியை நோக்கிப் பறந்தார். விடாமல் துரத்திச் சென்ற பொதுமக்கள் ஆண்டர்சன் சாலையில் காரை மடக்கினார்கள். காரில் தொங்கிக்கொண்டிருந்தவர், அவசரமாக இறங்கி காரின் பின்கதவைத் திறக்கவும், அவரைத் தள்ளிக்கொண்டு ஒருவர் தப்பி ஓடினார். பொதுமக்கள் டிரைவரை காரிலிருந்து வெளியில் இழுத்தார்கள். காரில் தொங்கிக்கொண்டிருந்தவர், தான் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் சரவணக்குமார் என்ற விவரத்தைக் கூறிக்கொண்டிருக்கும்போதே சைரன்வைத்த போலீஸ் வாகனங்கள் அங்கு வந்தன.

மூசா - சுதர்சன் - அறுப்புகுமார்
மூசா - சுதர்சன் - அறுப்புகுமார்

சினிமா காட்சிகளைப்போலவே நடந்த இந்தச் சம்பவம் பற்றி கீழ்ப்பாக்கம் போலீஸார் நம்மிடம் விவரித்தார்கள்... “சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மூசா. 73 வயதாகும் இவரை ஒரு கும்பல் அக்டோபர் 3-ம் தேதி காரில் கடத்தியதாக அவரின் மூத்த மகன் பஷீர், கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் சுதர்சன் மேற்பார்வையிலான டீம் மூசாவைத் தேடிவந்தது. அப்போது, மூசாவின் இளைய மகன் ஷெரீப்புக்கு போன் செய்த கடத்தல் கும்பல், மூன்று கோடி ரூபாய் கேட்டிருக்கிறது. ‘அவ்வளவு பணத்தை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாது’ என்று ஷெரீப் கூறியதும், மூசாவையே மகனிடம் போனில் பேசவைத்திருக்கிறார்கள். அப்போது மூசா `முதல் தளம்’, `ஹோம்’ என கோட் வேர்டுகளுடன் தன்னை அடைத்திருக்கும் இடத்தைக் கூறியதோடு, மண்ணடியிலுள்ள நண்பர் மூலம் பணத்தை ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தார்.

பிறகு மூசாவின் நண்பருக்கே போன் செய்த கடத்தல் கும்பல் பேரத்தை ஆரம்பித்தது. மூன்று கோடியில் தொடங்கிய பேரம் கடைசியில் 25 லட்சம் ரூபாய் என முடிவானது. இதையடுத்து பணத்துடன் மூசாவின் நண்பரை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வரும்படி கடத்தல் கும்பல் கூறியது. அக்டோபர் 5-ம் தேதி இரவு 8:30 மணிக்கு மேல் 25 லட்சம் ரூபாய் பணத்துடன் அந்த நபர் எழும்பூர் பகுதியில் காத்திருந்தார். அப்போது அவரிடம் போனில் பேசிய மூசா, ‘777’ என்ற ரகசிய எண்ணைக் கூறுபவரிடம் பணத்தைக் கொடுக்கும்படி தெரிவித்தார்.

அதன்படி சிவப்பு நிற பைக்கில் வந்தவர், மூசாவின் நண்பர் அருகில் நிறுத்தி ‘777’ என்று கூறியதும் அவர் பணத்தைக் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரிலிருந்து மூசா இறக்கிவிடப்பட்டார். இன்னொரு பக்கம் அந்த காரை உதவி கமிஷனர்கள் சுதர்சன், ரமேஷ், இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட், தலைமைக் காவலர் சரவணக்குமார், காவலர் மகேஷ் அடங்கிய படை ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது. மூசா இறக்கிவிடப்பட்ட பிறகு, சற்று தூரத்தில் காரின் வேகம் குறைய, அதிலிருந்து பிரபல ரௌடி அறுப்புகுமார் இறங்க முயன்றார். வேகமாகச் சென்ற போலீஸ் படை அவரைச் சுற்றிவளைத்தது. அதேசமயம் காவலர் சரவணக்குமார், கார் முன்பு பைக்கைப் போட்டு, காரை நிறுத்த முயல... பைக் மீது மோதிய கார், அதை இழுத்துக்கொண்டே பறந்தது. அதன் பிறகு நடந்ததுதான் அந்த சேஸிங்” என்றவர்கள் கடத்தலின் பின்னணி குறித்தும் விவரித்தார்கள்...

“கடத்தப்பட்ட மூசா, சென்னை மாதவரம் காவல் சரகத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றியவர். அப்போது செம்மரக்கடத்தல் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறி பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், செம்மர பிசினஸில் பிஸியாகி கோடீஸ்வர் ஆனார். எஸ்.ஐ-யாக மூசா இருந்தபோது கொலை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரௌடி அறுப்பு குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. செம்மர பிசினஸிலும் அறுப்புகுமாரை மூசா பயன்படுத்தியிருக்கிறார். மூசாவிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட அறுப்புகுமார், மூசாவைக் கடத்தி, போரூரில் ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் அடைத்துவைத்திருக்கிறார். விசாரணையின்போது, “மூசாவின் செம்மர பிசினஸுக்குப் பல வகையில் உதவி செய்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை ஒரு வேலைக்காரன்போலவே பயன்படுத்திவந்தார். அதனால்தான் பணத்தைப் பறிக்க, அவரைக் கடத்தினேன்’’ என்று அறுப்புகுமார் கூறியிருக்கிறார்.

போலீஸ் எஸ்.ஐ டு செம்மர பிசினஸ்... தொழிலதிபர் மூசா கடத்தப்பட்டது ஏன்?

உதவி கமிஷனர் சுதர்சனிடம் பேசினோம். ‘‘மூசா தன் மகனிடம் சொன்ன ‘கோட் வேர்ட்’டை வைத்து, கடத்திவைக்கப்பட்டிருந்த இடத்தை ஓரளவு யூகித்துவிட்டோம். ஆனால், மூசாவை உயிரோடு மீட்க வேண்டும் என்பதற்காக, பணத்தைக் கொடுத்த பிறகு கடத்தல் கும்பலை வளைக்கத் திட்டமிட்டோம். ஸ்பெஷல் டீமிலுள்ள போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டு மூசாவையும் பணத்தையும் மீட்டிருக் கிறார்கள். கடத்தல் கும்பலைச் சேர்ந்த அறுப்புகுமார், டிரைவர் பிரகாஷ், காந்தியின் மனைவி சங்கீதா ஆகியோரைக் கைதுசெய்துவிட்டோம். இன்னும் காந்தி, மணி, சதீஷ், வினோத் ஆகியோரைத் தேடிவருகிறோம்’’ என்றார்.

சமீபத்தில்தான் ‘ஆபரேஷன் டிஸ் ஆர்ம்’ என்கிற பெயரில் 3,325 ரெளடிகளை கைதுசெய்தது காவல்துறை. அப்படியிருந்தும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. ரெளடிகளை ஒடுக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு