TN election 2021: அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குப்பதிவும் கருத்தும்!
``திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்’’ என நம்பிக்கை தெரிவித்தார் வைகோ.
தமிழகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிவருகிறார்கள். குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்த தலைவர்கள், வாக்களித்துவிட்டு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி``

தமிழக முதல்வரும், சேலம் மாவட்ட எடப்பாடி சட்டமன்ற வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் சிலுவம்பாளையம் தொடக்கநிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது, ``தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்" எனப் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குரத வீதி செவன்த் டே நர்சரிப் பள்ளியில் வாக்களித்தார். அப்போது, ``அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" எனப் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி கல்லூரியில் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார். அப்போது ``பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். மே 2-ம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது” எனப் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:

சென்னை, அடையாறு தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார் டி.டி.வி.தினகரன். அப்போது, ``தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும். மக்கள் அதை உருவாக்குவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன்:

அரியலூர் மாவட்டம், அங்கனூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது, ``தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்குச் சேவை செய்யும் நிறுவனம்" எனக் கடுமையாக கருத்து தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அப்போது, ``பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான்" என்றார்.
சி.பி.ஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது, ``ஒரு மாதம் வாக்குப் பெட்டியை பாதுகாப்பது என்ன நடக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" எனப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது, ``திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்:

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கைச் செலுத்தினார். அப்போது, ``எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது" எனப் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.