Published:Updated:

நெல்லை: `மாநகராட்சிப் பணியாளர் கை துண்டிப்பு!’ - கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

நெல்லை மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர் குப்பை பிரிக்கும் இயந்திரத்தில் பணியாற்றியபோது இயந்திரத்தில் சிக்கி கை துண்டானது. அதற்கு நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. 

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். அவர் மாநகராட்சி சார்பாக நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். 

நெல்லை மாநகராட்சிப் பணியாளர் பாக்கியலட்சுமி
நெல்லை மாநகராட்சிப் பணியாளர் பாக்கியலட்சுமி

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் அவரது கை சிக்கியது. அதில் அவரது வலது கை சிதைந்து துண்டானது. அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இயந்திரத்தை இயக்கும் வேலை கொடுத்ததால் அவர் விபத்தில் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Vikatan

பாக்கியலட்சுமியைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு, ஒப்பந்தப் பணியாளரான பார்வதி என்பவரும் விபத்தில் சிக்கியதில் நடக்க முடியாமல் படுக்கையில் உள்ளார். பணிப் பாதுகாப்பு இல்லாத நிலையில், வேலை செய்யச் சொல்லும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர்

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “நெல்லை மாநகராட்சி சார்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான பாக்கியலட்சுமி, பார்வதி ஆகியோருக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இருவரையும் நிரந்தரப் பணியாளராக்க வேண்டும். அனைவருக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்
4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்

எங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால். அனைத்துக் கட்சியினரைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு