Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

Published:Updated:
கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

“எப்படி வெளியில தலைகாட்ட முடியும்?”

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, ஊட்டியில் நடைபெற்ற ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா’வில் பங்கேற்க வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, அ.தி.மு.க கட்சிக்கொடி தாங்கிய இரும்பு பைப்புகளைச் சாலையோரம் நெடுகிலும் நட்டுவைத்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். அந்த இரும்புக்குழாய் ஒன்றில், மின்சாரம் பரவி ஏற்பட்ட விபத்தில், கோடப்பமந்து பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதல்வரை வரவேற்க சாலையோரங்களில் இரும்பு பைப்புகளைப் பதித்த அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து, தி.மு.க-வினர் கண்டனங்களை எழுப்பினர். ஆனால், அண்மையில் ஊட்டி மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, அதே இரும்பு பைப்புகளில் தி.மு.க கொடிகளை வழிநெடுகிலும் பறக்கவிட்டிருந்தனர் உடன்பிறப்புகள். இதில் கூடுதல் வேடிக்கை என்னவென்றால், நீலகிரி எம்.பி ஆ.ராசா, இரும்பு பைப்புகளை நடும் படங்களை வலைதளத்தில் கெத்தாகப் பகிர்ந்திருந்தார். “ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது உண்மைதான். போன ஆட்சியில நாம எதிர்த்த விஷயத்தை இப்போ நாமே செஞ்சா... வெளியில எப்படித் தலைகாட்ட முடியும்?” என்று புலம்புகின்றனர் ஆளுங்கட்சித் தொண்டர்கள்!

கரை வேட்டி டாட் காம்

“என் கதியே அதோகதியா கெடக்கு!”

முட்டைக்குப் பெயர்பெற்ற மாவட்டத்தில், மூத்த ‘ரெட்டை அர்த்த’ காமெடி நடிகர் பெயரைக்கொண்ட ஆளுங்கட்சி நிர்வாகிமீது அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. இதைச் சாக்காகவைத்து, உட்கட்சித் தேர்தலில் அவரின் பதவியைக் கைப்பற்றப் போட்டி போடுகின்றனர் அதே மாவட்ட நிர்வாகிகள் இருவர். போட்டியாளர்களில் தில்லான பெயர்கொண்டவர், அகிம்சைத் தலைவர் பெயர்கொண்ட முன்னாள் மாவட்ட நிர்வாகியின் ஆதரவாளர். புகாருக்குள்ளான ஆளுங்கட்சி நிர்வாகியும் அவரின் ஆதரவாளர்தான். எனவே, தில்லான போட்டியாளரை ஒதுங்கிக்கொள்ளச் சொல்லும்படி அகிம்சையிடம் கேட்டிருக்கிறார் புகார்ப்புள்ளி. அங்கு மீண்டும் எம்.பி-யாகியிருக்கும் இனிஷியல் நபரால், தானே செல்லாக்காசாகிக் கிடப்பதை எடுத்துச்சொன்ன அகிம்சைப்புள்ளி, “என் கதியே அதோகதியா கெடக்கு. இதுல, உங்க பஞ்சாயத்தை நான் எங்கே தீர்த்துவைக்க?” என்று புலம்பித்தள்ளினாராம். வெம்பிக்கிடக்கிறார் புகார்ப்புள்ளி!

“கட்சியில் தனியா சம்பளமா கொடுக்கறாங்க?”

புதுச்சேரி கடந்தகால ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளெல்லாம், தற்போதைய ஆட்சியில் ஜரூராக நடைபெற்றுவருகின்றன. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிடுவதால், கான்ட்ராக்டர்கள் பணியில் படுவேகம் காட்டிவருகிறார்கள். இதை மோப்பம் பிடித்த சீறும் கட்சியின் முதன்மை நிர்வாகி, ‘தனக்கும் கமிஷன் வெட்ட வேண்டும்’ என்று கான்ட்ராக்டர்களின் கழுத்தில் துண்டைப்போட்டு உறுமுகிறாராம். ‘‘கடந்த அஞ்சு வருஷமா எந்த வேலையும் நடக்காததால, கையில பணமே இல்லை” என்று கைவிரிக்கும் கான்ட்ராக்டர்களிடம், ‘‘எங்களுக்கு மட்டும் கட்சியில் தனியா சம்பளமா கொடுக்கறாங்க... எங்க நிலைமையும் அதான்யா” என்று லாஜிக் பேசி, கமிஷனைக் கறந்து செல்கிறாராம் அந்த நிர்வாகி. நொந்து புலம்பும் கான்ட்ராக்டர்கள், சம்பந்தப்பட்ட நபர்மீது போலீஸில் புகார் கொடுக்கத் தயாராகிவருகிறார்களாம்!

கரை வேட்டி டாட் காம்

“இவ்வளவு காசு பார்த்தா.... பொறாமை வரத்தானே செய்யும்!”

‘நாய்களுக்கு’க்குப் பெயர்பெற்ற நகராட்சியில், சிவப்புக் கட்சியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 183 யூனிட் ஆற்று மணல் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் பதுக்குவதில், உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியும் மோதலும்தான் தோழர் மாட்டிக்கொள்ளப் பின்னணிக் காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். முக்கியமாக, தொகுதிப் பிரதிநிதியான கோல்டு நபரைக் காட்டிலும் தோழரே மணல் பதுக்கலில் அதிக லாபம் சம்பாதித்துவந்தாராம். இதில் காண்டாகிப்போன கோல்டு, இனிஷியல் அமைச்சரோடு கைகோத்துக்கொண்டு, தோழரை மாட்டிவிட்டதாகக் கண்டனக் கூட்டம் நடத்திக் கண் சிவக்கிறார்கள் தோழர்கள். “என்ன இருந்தாலும் கலெக்‌ஷன்ல கூட்டணிக் கட்சிக்காரன் இவ்வளவு காசு பார்த்தா... பொறாமை வரத்தானே செய்யும்...” என்று கலாய்க்கிறார்கள் உடன்பிறப்புகள்!

“50 லட்சம் செலவு செய்து பொறுப்புக்கு வந்திருக்கிறேன்!”

அருவிக்குப் பெயர்பெற்ற மாவட்டத்தின் ஒன்றியப் பொறுப்பிலிருப்பவர், வணிகம் செய்பவர்களை மிரட்டி வசூல்வேட்டை ஆடிவருகிறாராம். யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால், ‘‘50 லட்சம் ரூபாய் செலவு செய்து இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். அதனால், மாதம்தோறும் பணம் கொடுக்காமல் யாரும் இங்கே வணிகம் செய்ய முடியாது’ என நேரடியாகவே மிரட்டுகிறாராம். செங்கல்சூளை நடத்தும் ஒருவரைச் சமீபத்தில் சந்தித்து ‘‘2 லட்ச ரூபாய் கொடுக்காமல் தொழில் செய்யக் கூடாது’’ என்று விடாப்பிடியாக மிரட்டியிருக்கிறார். கொரோனாகால தொழில் நஷ்டத்திலிருந்து மீண்டுவந்திருக்கும் அவர், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஒன்றியம் கேட்காததால், எரிச்சலடைந்த செங்கல்சூளை உரிமையாளர், ‘‘உங்கள் பெயரை எழுதிவைத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போகிறேன்’’ என்று தடாலடி காட்ட... அரண்டுபோன ஒன்றியம், அதன் பிறகு அந்தப் பக்கம் போவதே இல்லையாம்!