Published:Updated:

ஆபாச இணையதளங்களில் விளம்பரம், ஜிபே-யில் பணப் பரிமாற்றம், பதறவைக்கும் பொள்ளாச்சி பாலியல் நெட்வொர்க்!

பொள்ளாச்சி பாலியல் நெட்வொர்க்
பிரீமியம் ஸ்டோரி
News
பொள்ளாச்சி பாலியல் நெட்வொர்க்

ஆரம்பத்தில் பணத்தை மட்டுமே ஏமாற்றியவர்கள், அடுத்து பிளாக்மெயிலிலும் இறங்கிவிட்டார்கள்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்ட படத்தை அனுப்பி, மிரட்டிப் பணம் பறித்த விவகாரத்தில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவில் இன்ஜினீயர் பிரசாந்த், கொத்தனார் அஜித்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது பின்னணியை விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்!

நமக்கு நெருக்கமான சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ‘‘பிரசாந்த்தும் அஜித்குமாரும் ஆபாச இணையதளத்தில் ‘உல்லாசமாக இருக்க, பெண்கள் தேவையா?’ என்று தொடர்பு எண்ணுடன் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து சபலப்பட்டு அழைக்கும் ஆண்களின் செல்போன்களுக்கு அழகான இளம் பெண்களின் படங்களை அனுப்பியிருக்கிறார்கள். பிறகு ஏதாவது ஒரு லாட்ஜுக்கு வரச் சொல்பவர்கள் போனிலேயே, ‘இப்போது பெண் வந்துவிடுவார். உங்களை எப்படி நம்புவது? முதலில் கூகுள் பே-யில் பணம் அனுப்புங்கள்’ என்கிறார்கள். பணம் அனுப்பியவுடனே, செல்போனை ஆஃப் செய்துவிடுவார்கள். அதோடு சரி... அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. இதை எப்படிப் புகாராக கொடுப்பது என்று ஏமாந்தவர்கள் வெறுப்புடன் சென்றுவிடுவார்கள்.

செல்வநாகரத்தினம்
செல்வநாகரத்தினம்

ஆரம்பத்தில் பணத்தை மட்டுமே ஏமாற்றியவர்கள், அடுத்து பிளாக்மெயிலிலும் இறங்கிவிட்டார்கள். விளம்பரம் பார்த்துவிட்டு, உல்லாசத்துக்குப் பெண் கேட்டு அழைப்பவரிடம் சகஜமாகப் பேசி, அவரது சமூக வலைதளக் கணக்கு விவரங்களை வாங்கிவிடுவார்கள். அதிலுள்ள புகைப்படங்களை எடுத்து, பெண்களுடன் இருப்பதுபோல மார்ஃபிங் செய்து, `அதை இணையத்தில் பரப்பிவிடுவோம்’ என்று மிரட்டியே பணத்தைக் கறந்திருக்கிறார்கள். இது போன்ற வேலைகளைச் செய்வதற்காகவே பொள்ளாச்சியில் மீனாட்சிபுரம், மாக்கினாம்பட்டி ஆகிய இடங்களில் ரகசியமாக இரண்டு கால் சென்டர்களை நடத்தியிருக்கிறார்கள். அதில் பணத்துக்காக ஆசைப்பட்ட இளைஞர்கள் பலரும் வேலை பார்த்திருக்கிறார்கள். அப்படி வேலை பார்த்தவர்களில் சிலர், இவர்களிடமிருந்து விலகி, தனியாக இதே போன்ற நெட்வொர்க்கை ஏற்படுத்தி மோசடி செய்துள்ளனர். பொள்ளாச்சியில் மட்டுமே இப்படி நிறைய குரூப்கள் முளைத்துவிட்டன. போலீஸார் தீவிரமாக விசாரணை செய்தால், பெரிய நெட்வொர்க்கே இதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்’’ என்று சொல்லி அதிரவைத்தார்கள்.

ஆபாச இணையதளங்களில் விளம்பரம், ஜிபே-யில் பணப் பரிமாற்றம், பதறவைக்கும் பொள்ளாச்சி பாலியல் நெட்வொர்க்!

கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘கரூர் வங்கியொன்றில் பணிபுரியும் பெண் ஒருவரின் கணவரின் செல்போனுக்கு, ஒரு பெண்ணின் ஆபாசப் படம் வந்துள்ளது. பிறகு, ஒரு மர்ம ஆசாமி அவரிடம், ‘இதேபோல் உன் மனைவியின் ஆபாசப் படத்தை இணையத்தில் பரப்புவேன்’ என்று மிரட்டி கூகுள் பே-யில் 49,000 ரூபாய் கறந்திருக்கிறான். இது அவரின் மனைவிக்குத் தெரிய வரவே, அவர் எங்களிடம் புகார் அளித்தார். விசாரணையில், வங்கி அதிகாரியின் கணவர் ஆபாச இணையதளம் ஒன்றில் விளம்பரத்தைப் பார்த்தபோது, அவரது செல்போன் எண்ணைத் தெரிந்துகொண்டு, அவர் பற்றிய தகவல்களையும், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் திரட்டியிருக்கிறார்கள். அதைவைத்து மிரட்டவே பயந்துபோய் பணத்தை அனுப்பிவிட்டார்.

மிரட்டல் வந்த செல்போன் எண்கள், வங்கிக் கணக்கு ஆகியவற்றை ட்ரேஸ் செய்து பிரசாந்த், அஜித்குமார் ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், நான்கு செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். இந்தக் கும்பல் இதுபோலப் பலரையும் ஏமாற்றி வந்திருக்கிறது. பிரசாந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆபாச இணையதளங்களைப் பார்க்கும் ஆண்களின் சபலத்தைப் பயன்படுத்தி, இது போன்ற நபர்கள் பணம் பறிக்கிறார்கள். இப்படி மிரட்டல்கள் வரும்போது எங்களிடம் உடனே புகார் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள்.

“வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்படும்போது, இது போன்ற நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் சிக்காமல் எப்படித் தப்பிக்கிறார்கள்?” என்று விவரமறிந்தவர்களிடம் விசாரித்தோம்... ‘‘அதற்கும் மாற்றுவழியை வைத்திருக்கிறார்கள். ஆபாச இணையதளங்களில் ‘பெண்களுக்கு கால் பாய்ஸ் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும்’ என்று விளம்பரம் கொடுக்கின்றனர். அதைப் பார்த்து ஆசையுடன் வரும் ஆண்களிடம் புதிய சிம் கார்டு வாங்கி, புதிய வங்கிக் கணக்கையும் தொடங்கச் சொல்லி அவர்களிடம் ஏ.டி.எம் கார்டு, பின் நம்பர் உள்ளிட்ட விவரங்களை வாங்கி வைத்துக்கொள்வார்கள். இந்த வங்கிக் கணக்குகளையே பிளாக்மெயில் பணத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதனால், போலீஸார் டிராக் செய்தாலும் இவர்கள் மாட்டுவதில்லை” என்றார்கள்.

பிரசாந்த், அஜித்குமார்
பிரசாந்த், அஜித்குமார்

நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ‘‘இது போன்ற வழக்குகளில் புகார் கொடுக்கப் பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். இப்போதுதான் ஆன்லைனில் புகார்கள் வரத்தொடங்கியுள்ளன. பொள்ளாச்சி டீம் மட்டுமே ஏராளமானவர்களை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 13 டீம்கள் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. அவர்களின் விவரங்களும் சேகரிப்பட்டுவருகின்றன’’ என்றார்கள். கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்திடம் பேசியபோது, ‘‘இது போன்று நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருக்கும் விவரங்களைக் கொடுங்கள். விசாரிக்கிறோம்’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

இணையத்தைத் திறந்தால், இது போன்ற ‘குப்பைகள்’ குவிந்துகிடக்கின்றன... சுத்தம் செய்யுமா சைபர் க்ரைம் போலீஸ்?