Published:Updated:

கருமேகப் புகைக்குள் சடையன் குப்பம்! - விடியலுக்குக் காத்திருக்கும் மக்கள்

சடையன் குப்பம்
பிரீமியம் ஸ்டோரி
சடையன் குப்பம்

எந்நேரமும் அதிகப்படியான புகையை வெளியிட்டுக்கிட்டே இருந்தா பக்கத்துல குடியிருக்கிற எங்களால எப்படி நிம்மதியா வாழ முடியும்...?

கருமேகப் புகைக்குள் சடையன் குப்பம்! - விடியலுக்குக் காத்திருக்கும் மக்கள்

எந்நேரமும் அதிகப்படியான புகையை வெளியிட்டுக்கிட்டே இருந்தா பக்கத்துல குடியிருக்கிற எங்களால எப்படி நிம்மதியா வாழ முடியும்...?

Published:Updated:
சடையன் குப்பம்
பிரீமியம் ஸ்டோரி
சடையன் குப்பம்

பஞ்ச பூதங்களுக்கும் சவக்குழி வெட்டுவதுபோல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன வடசென்னை மணலியில் இருக்கும் சில தொழிற்சாலைகள். மாசு கட்டுப்பாடு வாரியத்தால் `சிவப்புப் பிரிவில்’ வகைப்படுத்தப்பட்டுள்ள இப்படிப்பட்ட தொழிற்சாலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட கிராமங்களில் ஒன்று சடையன் குப்பம்!

அதிக நச்சும், சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையையும் வெளியேற்றக்கூடிய இரும்புத் தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் புகாரைத் தொடர்ந்து, கள ஆய்வுக்காக சடையன் குப்பம் நோக்கிப் புறப்பட்டோம். மதிய வேளை. திருவொற்றியூரிலிருந்து மணலி நோக்கிச் செல்லச் செல்ல, நீலவானம் கருமை பூசிக்கொண்டிருந்தது. மேகம் கருத்து, மழை வரப்போகிறது என்று நினைத்திருந்த எங்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது, தொழிற்சாலைகளின் சிம்னிகளிலிருந்து வெளியேறும் கரும் புகைப்படலமே, கருமேகம்போல் சூழ்ந்து, அந்தச் சுற்றுவட்டாரத்தை இருள் மூடச் செய்திருக்கிறது என்பது! மாஸ்க் அணிந்தபடி சடையன் குப்பம் பர்மா நகரை அடைந்தோம்.

கருமேகப் புகைக்குள் சடையன் குப்பம்! - விடியலுக்குக் காத்திருக்கும் மக்கள்

ஊருக்கு நடுவே, `ஜானகிராமன் ஸ்டீல் & பவர்’, ‘இந்தோ ஸ்டீல்’ ஆகிய இரண்டு இரும்பு உருக்காலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. கோயில் வாசலில் இருந்த உள்ளூர்க்காரர்களிடம் பிரச்னை பற்றிக் கேட்டோம். ``இங்கே பிரச்னை இருக்குறது உண்மைதான். ஆனா... கோயில் திருவிழா விஷயமா ஊர்த் தலைவர் இரும்பு ஃபேக்டரி முதலாளியைப் பார்க்கப் போயிருக்காரு. அவர் வரட்டுமே...” என்றார்கள் தயக்கத்துடன்.

இரண்டு முறை ஊராட்சித் தலைவராகவும், தற்போது ஊர் நாட்டாமையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செல்வராஜ் வந்ததும் அதே கேள்வியைக் கேட்டோம். ``அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த ஃபேக்டரிங்களை நம்பித்தான் இங்கே இருக்குற பலரும் பிழைப்பு நடத்துறாங்க. ஒண்ணு, ரெண்டு பசங்கதான் விஷயத்தைப் பெருசாக்கி, அரசாங்கத்துகிட்ட மனு போட்டுக்கிட்டு கிடக்குறாங்க! இத்தனை வருஷமா எங்களுக்கு இல்லாத பிரச்னை, அவங்களுக்கு மட்டும் எப்படி திடீர்னு வந்துச்சு?” என்று கேட்டவர், “இந்த புகைப் பிரச்னையைவெச்சுக்கிட்டு, ஃபேக்டரி நிர்வாகத்துகிட்ட அவனுங்க பேரம் பேசிக்கிட்டு நிக்கிறாங்களாம்” என்றும் குற்றம்சாட்டினார்.

மீண்டும் மக்களைச் சந்தித்தபோது வெடித்துவிட்டார்கள். ``அந்த இரும்பு தொழிற்சாலைகள்லருந்து தினமும் அளவுக்கதிகமா புகை வரும். வீடு வாசல் எல்லா இடமும் சாம்பல் படியும். பல நேரங்கள்ல அது ரொம்ப அதிகமாகி மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறுகூட ஏற்பட்டிருக்கு! எங்க உடம்புலயே ஏகப்பட்ட பிரச்னை. இருந்தாலும் நாளைக்கு எங்க குழந்தைங்களோட நிலைமையை நினைச்சுதான் ரொம்ப பயப்படுறோம். ஊர்த் தலைவர் செல்வராஜ் எப்பவும் ஃபேக்டரிக்கு ஆதரவாத்தான் பேசுவாரு! எங்க பசங்கதான் ஒவ்வொரு ஃபேக்டரியா ஏறி இறங்கி புகையைக் கட்டுப்படுத்தச் சொல்லி அப்பப்போ சத்தம் போட்டுட்டு வருவாங்க!” என்றார்கள்.

கருமேகப் புகைக்குள் சடையன் குப்பம்! - விடியலுக்குக் காத்திருக்கும் மக்கள்

அவர்கள் குறிப்பிட்ட இளைஞர்களான கமலக்கண்ணன், விமலைச் சந்தித்தோம். ``எங்க அம்மா ஆஸ்துமா பேஷன்ட்; மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க; கூட ஒரு கைக்குழந்தையும் இருக்கு. எந்நேரமும் அதிகப்படியான புகையை வெளியிட்டுக்கிட்டே இருந்தா பக்கத்துல குடியிருக்கிற எங்களால எப்படி நிம்மதியா வாழ முடியும்...? ஃபேக்டரியை ஒழுங்காவே அவங்க பராமரிக்கறதில்லை.அரசாங்கத்தோட எந்த விதிமுறைகளையும் மதிக்காம, சுற்றுச்சூழலையோ, மக்களையோ பத்திக் கவலைப்படாம லாபவெறியோட இயங்குறாங்க. 2019-ல முதல்வரோட தனிப்பிரிவுக்கு மனுப் போட்டும் நடவடிக்கை இல்லை. அப்புறம் சென்னை மாநகராட்சிக்கும், மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் புகைப்பட ஆதாரங்களோட ஆன்லைன் கம்ப்ளெயின்ட் அனுப்பினோம். உடனே புகை வெளியேத்துற சிம்னியை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு பிரச்னையை சால்வ் பண்ணிட்டதா அரசாங்கத்துக்கு பதில் கொடுத்துடுச்சு ஃபேக்டரி நிர்வாகம். ஆனா, புகை மட்டும் பழையபடியே வெளியேறிக்கிட்டுதான் இருக்கு!” என்றார் கமலக்கண்ணன்.

``உங்க ஊர்த் தலைவரே இதை மறுக்கிறாரே?” என்றோம். உடனடியாக தனது மொபைலை எடுத்து தேதிவாரியாக ஃபேக்டரியிலிருந்து புகை வெளியாகும், வீடியோ, புகைப்படங்களைக் காண்பித்தபடி பேசியவர், ``நாங்க பணம் கேட்டது உண்மைன்னா போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கவேண்டியதுதானே? ஊர் மக்களுக்குக்கூட ஃபேக்டரி நிர்வாகம் வேலை கொடுத்ததா சொன்னதும் பொய்தான். ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர எல்லாரும் இந்திக்காரங்கதான்! காரணம் ஃபேக்டரி ஓனர் ராமச்சந்திர சிங் உத்தரப்பிரதேசத்துக்காரர். ஃபேக்டரி லாபமும் அவங்களுக்கு, வேலையும் அவங்களுக்கு, நோய் மட்டும் எங்களுக்கா...? எங்களோட தேவையெல்லாம், உடனடியா தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த ஃபேக்டரில மறு ஆய்வு நடத்தணும். காற்றின் தன்மையை (Air Quality) ஆய்வு பண்ணி, ஊர் மக்களோட கருத்தைக்கேட்டு அரசாங்கம் முடிவெடுக்கணும்!” என்றார் ஆவேசமாக.

செல்வராஜ், கமலக்கண்ணன், ரவீந்தர்
செல்வராஜ், கமலக்கண்ணன், ரவீந்தர்

ஃபேக்டரி நிர்வாகி ரவீந்தரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். ``ஸ்டீலை உருக்குனா புகை வரத்தான் செய்யும். நாங்களும் புகையை கம்மி பண்ண சிம்னி, சீட் எல்லாத்தையும் மாத்திட்டோம். அந்தப் பசங்க பணம் கேட்டுல்லாம் மிரட்டலை. ஆனா, கொஞ்சமா புகை வந்தாலும், ப்ராப்ளம் பண்ணிக்கிட்டே இருக்காங்க! எங்க (இந்தி) ஆளுங்க அதிகமா வேலை பார்த்தாலும் வீட்டு வாடகை, மளிகைக்கடை, டீக்கடைன்னு ஊர் மக்களுக்கும்தானே லாபம்! இப்போகூட ஊர்த் திருவிழாவுக்காக டொனேஷன் கொடுத்திருக்கோமே!” என்றார்.

மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளரிடம் கேட்டபோது, ``சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்தப் பகுதியில் காற்று மாசுபாட்டின் தரம் குறித்து அறிவதற்கான கருவிகள் பொருத்தவிருக்கிறோம். முறையான ஆய்வுக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்!’’ என்றார்.

தொழிற்சாலைகள் முக்கியம்தான்... அதைவிட மக்களின் வாழ்வு முக்கியமல்லவா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism