பழநி நவபாஷாண சிலை விவகாரத்தில், எந்நேரமும் கைது நடவடிக்கை அரங்கேறலாம் என்ற நிலை இருப்பதால், பரபரத்துக் கிடக்கிறது பழநி.
பழநி தண்டாயுதபாணி கோயில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தரால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சிலை அமைக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு சொல்கிறது. இந்தச் சிலை மருத்துவத்தன்மை வாய்ந்தது. பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையுடன் வணங்கும் மூலவர் சிலையைக் கடத்த முயற்சி நடந்துள்ளது என மாநில சிலைத்தடுப்பு போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது பக்தர் களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பழநி தண்டாயுதபாணி கோயிலில் நவபாஷாண சிலை சிதில மடைந்து இருக்கிறது. அதை மாற்ற வேண்டும்’ என்று சிலர் தகவல் பரப்பியதையடுத்து, கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோ எடையுள்ள ஐம் பொன் உற்சவர் சிலை நிறுவப்பட் டது. அந்தச் சிலை, ஏற்கெனவே இருக்கும் நவபாஷாண சிலைக்கு முன் வைத்து வழிபாடு செய்யப் பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்கு அப்போதே பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அறநிலையத்துறை அதைக் கண்டு கொள்ளவில்லை. புதிய ஐம்பொன் சிலை நிறுவப்பட்ட நான்கு மாதங் களிலேயே அதன் நிறம் மாறத் தொடங்கியது. 20 கிலோ தங்கம் கலந்து செய்யப் பட்ட சிலை நிறம் மாறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், ஐம்பொன் சிலையை அங்கிருந்து அகற்றி தனி அறையில் வைத்துப் பூட்டினார்கள்.

மீண்டும் நவபாஷாண சிலையை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல் இந்த வழக்கை விசாரித்தார். இதையடுத்து சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை நடைபெற்றது. முறைகேடு புகாரின் அடிப்படை யில் அறநிலையத் துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் கே.கே.ராஜா, துணை ஆணையர் தேவேந்திரன், ஸ்தபதி முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஐம்பொன் சிலை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணை சூடுபிடித்த நிலையில், அப்போதைய டி.ஜி.பி-யான ராஜேந்திரன். ‘இது சிலை கடத்தல் அல்ல. சிலை செய்ததில் நடந்த மோசடி. அதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றுகிறோம்’ என உத்தரவிட்டார்.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பழநியில் முகாமிட்டு விசாரணை நடத்தினார் பொன்மாணிக்கவேல். அப்போது சிலை தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-யான மூவிஸ் ஜெயக்குமார், பொன்மாணிக்க வேல் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசினார். ‘‘ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, போகரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலையைக் கடத்தும் முயற்சி நடந்திருக்கிறது. நவபாஷாண சிலையைக் கடத்தும் நோக்கத் துக்காகவே ஐம்பொன் சிலை நிறுவப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக ஸ்தபதி முத்தையா இருக்கிறார். அவருக்குப் பின்னால் இன்னும் பலர் இருக்கலாம். விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.
பழநி முருகன் சிலையையே கடத்த நடந்த முயற்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கூடுதல் எஸ்.பி-யான ராஜா ராம் தலைமையிலான ஐந்து டி.எஸ்.பி-க்கள், பழநியில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது எந்த நேரமும் கைது நடவடிக்கை பாயலாம் என்ற நிலை தொடர்வதால், பரபரத்துக் கிடக்கிறது பழநி.