Published:Updated:

“சுப்ரீம் கோர்ட்டே எங்களை கட்டுப்படுத்த முடியாது!”

 லட்சுமணன் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமணன் குடும்பம்

ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்... கிராமப் பஞ்சாயத்தின் அட்டூழியம்!

“சுப்ரீம் கோர்ட்டே எங்களை கட்டுப்படுத்த முடியாது!”

ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்... கிராமப் பஞ்சாயத்தின் அட்டூழியம்!

Published:Updated:
 லட்சுமணன் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமணன் குடும்பம்

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் கிராம கட்டப்பஞ்சாயத்துக் கொடுமைகள் தொடர்கதையாகவே இருக்கின்றன. சாதாரண குடும்பத்துக்கு ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதைக் கட்ட இயலாததால் அந்தக் குடும்பத்தை இரண்டு ஆண்டுகளாக தொழில் செய்யவிடாமல் வீட்டுச்சிறையில் முடக்கியிருப்பது, நெஞ்சைப் பதறவைக்கிறது. நாகை மாவட்டம் பூம்புகார் மீனவக் கிராமத்தில்தான் இந்தக் கொடுமை!

கிராமப் பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சுமணன், தனக்கு நேர்ந்ததை விவரிக்கிறார்...

“சுப்ரீம் கோர்ட்டே எங்களை 
கட்டுப்படுத்த முடியாது!”

‘‘ஆரம்பத்துல கிராமப் பஞ்சாயத்தாரோடு கூட்டு சேர்ந்து மீன்பிடித் தொழில் செஞ்சேன். பணப் பங்கீட்டுல பிரச்னை வந்துச்சு. அதனால, சொந்தமா தொழில் செய்யலாம்னு கடன் வாங்கி 70 லட்சம் ரூபாய் மதிப்புல விசைப்படகு வாங்கினேன். அதுல போய் மீன்பிடிக்க, 60 பேர் வேணும். அவ்வளவு பேர் இங்கே கிடைக்கலை. அதனால நாகப்பட்டினம் போய் தங்கி, அங்க இருக்கும் ஆளுங்களை வெச்சு தொழில் பண்ணேன். இது எங்க கிராமப் பஞ்சாயத்துக்குப் பிடிக்கலை. `எங்களோடு கூட்டு சேர்ந்துதான் செய்யணும்’னு சொன்னாங்க. `அதுல எனக்கு விருப்பம் இல்லை’ன்னு சொன்னேன். ஊர் உத்தரவை மீறுவதா சொல்லி, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிச்சாங்க. திகைச்சுப்போயிட்டேன். அவ்வளவு பணம் கட்ட எனக்கு வசதியில்லை. பணத்தைக் கட்டாததால, நாகப்பட்டினம் பஞ்சாயத்துல சொல்லி தொழில் செய்யவிடாம என் குடும்பத்தையே முடக்கிட்டாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் பசங்க, மருமகள்கள், பேரன், பேத்திகள்னு 12 பேர் கொண்டது என் குடும்பம். எங்களை ஊரைவிட்டு தள்ளிவெச்சு ரெண்டு வருஷமாச்சு. எங்க குடும்பத்து ஆளுங்களோடு யாரும் பேசக் கூடாது. தெரியாமப் பேசிய ஒருத்தர்கிட்ட, ஒரு லட்சம் ரூபா அபராதம் வாங்கிட்டாங்க. கடைகள்ல பொருள் வாங்க முடியாது. சொந்தபந்தத்தோட வாழ்வு சாவுல கலந்துக்க முடியாது. குடிநீர் இணைப்பைக்கூட கட் பண்ணிட்டாங்க. வருமானம் இல்லாம நாங்க எல்லோரும் வீட்டுக் குள்ளேயே அடைஞ்சு கிடக்கோம்’’ என்று கண் கலங்கியவர், சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

“சுப்ரீம் கோர்ட்டே எங்களை 
கட்டுப்படுத்த முடியாது!”

‘‘இந்தப் பிரச்னையால காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த ரெண்டு புள்ளைங் களுக்கு பணம் கட்ட முடியாம படிப்பு பாதியிலேயே நின்னுபோச்சு. என் பொண்ணுக்கு வரன் பார்த்துப் பேசி முடிச்சோம். பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டால அந்தக் கல்யாணத்தையும் நடத்த முடியலை. கடன்பட்டு வாங்கிய படகு, பயன்பாட்டுல இல்லாம பழுதாகிக் கிடக்கு. சரி, ஊரோடு ஒத்துப்போயிடுவோம்னு பிச்சையெடுக்காத குறையா ரெண்டு லட்சம் ரூபாய் தயார்பண்ணேன். அதை பஞ்சாயத்தாருகிட்ட கொடுத்து மன்றாடி கேட்டும், அவங்க மனசு இறங்கல. வேறு வழியில்லாம கலெக்டர், எஸ்.பி-ன்னு பலமுறை புகார் கொடுத்தேன். எனக்கு நீதி கிடைக்கலை. கடைசியா இப்போ ஹை கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கேன்’’ என்றார் வேதனையுடன்.

லட்சுமணனின் மருமகள் பிரபாவதி, ‘‘நாங்க என்ன பாவம் செஞ்சோம்? எங்களுக்கு ஏன் தண்டனை தர்றாங்க? மூணு வயசு புள்ளைக்கு ஒரு மிட்டாய்கூட வாங்கித் தர முடியலை. திடீர்னு உடம்பு சரியில்லைன்னா ஒரு ஆட்டோ பிடிச்சுக்கூட போக முடியலை. ஒண்ணா பழகி சந்தோஷமா இருந்த அக்கம்பக்க வீட்டுக்காரங்களோடு பேச முடியலை. ஊரைவிட்டுப் போகவும் முடியலை. இங்கே வாழவும் முடியலை. நரகம் சார்’’ என்று வார்த்தைகள் வழியே தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த விவகாரம் குறித்து ஊர்மக்களிடம் விசாரித்தபோது, ‘‘இங்கே பஞ்சாயத்தார் வெச்சதுதான் சட்டம். அவங்களை மீறி எதுவும் செய்ய மாட்டோம்’’ என்றார்கள்.

“சுப்ரீம் கோர்ட்டே எங்களை 
கட்டுப்படுத்த முடியாது!”

இதுபற்றி பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த நாட்டார் சந்திரனிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘எங்க சமுதாயத்துக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. இந்த மாவட்டத்துல இருக்கும் 64 மீனவக் கிராமங்கள்லயும் நாட்டார் பஞ்சாயத்து இருக்கு. அதுக்கு எல்லோரும் கட்டுப்பட்டுத்தான் ஆகணும். கிராமப் பஞ்சாயத்துக்கு லட்சுமணன் கட்டுப்படலை. அதனால ஒதுக்கிவெச்சிருக்கோம். அவர் போலீஸ், கோர்ட்டுனு போய்க்கிட்டு இருக்கார். சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும் ஒண்ணும் செய்ய முடியாது. அபராதம் விதிச்சிருக்கோம். பணிஞ்சு வந்தா, கொஞ்சம் குறைப்போம். பெரும்பாலும் நாங்க எந்த விஷயத்துக்கும் எங்க கிராம மக்களை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவிடுறதில்லை. எந்தப் பிரச்னையானாலும் நாங்களே பேசி முடிச்சிடுவோம். என்னைக்கு இருந்தாலும் லட்சுமணன் எங்ககிட்ட வந்துதான் ஆகணும்’’ என்றார் அதிகார தோரணையில்.

நாகை எஸ்.பி-யான ராஜசேகரனிடம் இந்த விஷயம் குறித்துப் பேசினோம். ‘‘லட்சுமணன் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதும், அபராதம் விதிப்பதும் சட்டப்படி தவறு. இதுபற்றி ஏ.டி.எஸ்.பி விசாரணைக்கு உத்தரவிட்டுளேன். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. கிராமப் பஞ்சாயத்தார் மீது தவறு இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நீதிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது ஒரு குடும்பம்!