அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

“முதல்வர் அய்யாதான் இதை கவனிக்கணும்!” - தரமற்ற கட்டுமானத்தால் கதறும் முகாம் தமிழர்கள்!

முகாம் கட்டுமானப்பணிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
முகாம் கட்டுமானப்பணிகள்

அஸ்திவாரம் சரியாகப் போடப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பில்லரே எழுப்பாமல், கோணல் மாணலாக சுவர் வளர்க்கிறார்கள். செங்கல், சிமென்ட், கம்பியும்கூட தரமில்லாதவைதான்.

‘‘கடல் நம்மைப் பிரித்து வைத்திருந்தாலும், கண்ணீர் இணைத்துவிட்டது. ஈழ மக்களும் என் தாய் மக்களே’’ என்று சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் பிரமாண்டமாகத் தொடங்கிவைத்த முகாம்வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணியில், பெரிய குளறுபடிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் பரபரக்கின்றன.

தமிழகத்திலிருக்கும் 106 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர வசிப்பிடத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக ரூ.317 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுவருகின்றன. இதற்காக வேலூர், மேல்மொணவூர் முகாமில் 55 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்படுகின்றன. கடந்த 2.11.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அடிக்கல் நாட்டி, கட்டடப் பணிகளைத் தொடங்கிவைத்தார். ஆனால், இந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுவருவதாகவும், கட்டுமானப் பொருள்கள் மட்டமாக இருப்பதாகவும் முகாம்வாழ் மக்களே குற்றம்சாட்டியிருக் கிறார்கள்.

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

இது குறித்துப் பேசுகிற ஈழத்தமிழ் மக்கள், ‘‘இலங்கையிலதான் நிம்மதியில்லாமல் வாழ்ந்தோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பிள்ளை குட்டிகளோடு கடல் தாண்டி வந்த எங்களை, `முகாம்’ என்ற பெயரில் முள்வேலி போட்டு, ஒதுக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். அரசாங்கம் நிறைய நல்லது செய்தாலும், அவை சரியாக எங்களிடம் வந்து சேர்வதில்லை. கடந்த வருஷம் இந்தத் திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக வந்த முதலமைச்சரிடம் எங்கள் பிரச்னைகள் எல்லாவற்றையும் சொன்னோம். எல்லா வசதிகளையும் செய்து தருவதாக அவரும் நம்பிக்கை கொடுத்துவிட்டுச் சென்றார். ஆனால், நடப்பது எல்லாமே தலைகீழாக இருக்கிறது. ரூ.11 கோடியில் வீடு கட்டுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், ஒற்றை அறையை ஒரு வீடு என்கிறார்கள். வீட்டில் எல்லோரும் சுருண்டுதான் படுக்க முடியும்.

“முதல்வர் அய்யாதான் இதை கவனிக்கணும்!” - தரமற்ற கட்டுமானத்தால் கதறும் முகாம் தமிழர்கள்!
“முதல்வர் அய்யாதான் இதை கவனிக்கணும்!” - தரமற்ற கட்டுமானத்தால் கதறும் முகாம் தமிழர்கள்!

அஸ்திவாரம் சரியாகப் போடப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பில்லரே எழுப்பாமல், கோணல் மாணலாக சுவர் வளர்க்கிறார்கள். செங்கல், சிமென்ட், கம்பியும்கூட தரமில்லாதவைதான். எம் சாண்ட் அதிகமாக போட்டுக் கட்டுகிற இந்த வீடுகள் எப்படி நீண்ட காலம் உழைக்கும்... யாரோ கமிஷன் அடிப்பதற்கு நாங்கள் பாடையில் போகணுமா... நாங்கள் ஏதாவது கேள்வி கேட்டால், அதிகாரிகள் போலீஸ்காரர்களைவிட்டு பயமுறுத்துகிறார்கள். ‘முகாமைவிட்டு ஓடிப்போ... இல்லைன்னா ஜெயிலுக்குள்ள தூக்கிப்போட்டுருவோம்’ என்று மிரட்டுகிறார்கள். ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். எங்கள்மீது அக்கறையுள்ள முதலமைச்சர் ஐயாதான், இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர் மனக்குமுறலோடு!

நாம் சென்று வந்ததைத் தொடர்ந்து, ‘நாம் தமிழர்’ கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் சல்மான் தலைமையிலான சிலர் முகாமுக்குள் சென்று கட்டுமானப் பணிகளை பார்வை யிட்டிருக்கின்றனர். அங்கிருந்த ஒப்பந்ததாரர்களிடம் ‘‘கட்டுமானப் பணியை ஏன் இவ்வளவு மோசமாக செய்யுறீங்க?’’ என அவர் கேள்வி கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் நழுவிய ஒப்பந்ததாரர்கள், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

உடனடியாக, போலீஸ் பட்டாளத்தோடு அங்கு வந்த அதிகாரிகள், நாம் தமிழர் கட்சியினரைக் கைதுசெய்வதாகக் கூறி விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

“முதல்வர் அய்யாதான் இதை கவனிக்கணும்!” - தரமற்ற கட்டுமானத்தால் கதறும் முகாம் தமிழர்கள்!

இந்தத் தகவலறிந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேலூர் காவல்துறை அதிகாரிகளை போனில் தொடர்புகொண்டு பேசிய பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் சல்மான் பேசும்போது, ‘‘டம்மி காலம் போட்டு கட்டிக் கொடுக்குறாங்க. அஸ்திவாரம் ஆடுது. அடியில பாறை இருக்கு. அதை உடைச்சு எடுக்காம அஸ்திவாரம் போட்டிருக்காங்க. கேள்வி கேட்டா, ‘நீ வந்து பாறயை உடைச்சுக் கொடு’னு ஒப்பந்ததாரர்கள் நக்கலா சொல்றாங்க. இப்படிக் கட்டுற வீடு தலையிலதான் இடிஞ்சு விழும். அந்த மக்கள் பாவமில்லையா... இப்படியே தொடர்ந்தால், நாங்க எங்க போராட்டத்தைக் கையிலெடுப்போம்’’ என்றார் ஆவேசமாக.

சல்மான்
சல்மான்

இந்த விவகாரம் பற்றி வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் அகதிகள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கவனத்துக்குக் கொண்டு சென்று விளக்கம் கேட்டோம். ‘‘நான் விரைவாக வேலூர் வந்து கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறேன். அந்த மக்கள் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட ஆட்சியர், சப் கலெக்டர், முகாம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் அழைத்து மீட்டிங் போட்டு விளக்கம் கேட்கிறேன். முகாம் மக்கள் கவலைப்பட வேண்டாம். பிரச்னைகளை உடனே சரிசெய்கிறேன்’’ என்றார் நம்பிக்கை தரும்விதமாக.

இன்னொரு முறை அந்த மக்களைக் கண்ணீர் சிந்த விட்டுவிடக் கூடாது!