Published:Updated:

“அவர் குளம் வெட்டினார்... இவர் குப்பை கொட்டுகிறார்!”

அதிகத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
அதிகத்தூர்

அலறும் அதிகத்தூர்

“அவர் குளம் வெட்டினார்... இவர் குப்பை கொட்டுகிறார்!”

அலறும் அதிகத்தூர்

Published:Updated:
அதிகத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
அதிகத்தூர்

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவள்ளூர் மாவட்டத்தின் முன்னோடி கிராமமாகத் திகழ்ந்த எங்கள் கிராமத்தின் நிலைமை, தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது’’ என்று புலம்புகின்றனர் அதிகத்தூர் மக்கள்.

திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிகத்தூர் கிராமம். இந்தக் கிராமப் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருக்கும் முரளி மீதுதான் அதிகத்தூர் மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்துவைக்கின்றனர்.

அதிகத்தூர் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தாலும் முரளி வசிப்பதென்னவோ பக்கத்தில் இருக்கும் வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணவாள நகரில்தான். ‘தான் வசிக்கும் பகுதியில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பை களை வெங்கத்தூரில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டாமல், ஆட்களைவைத்து அதிகத்தூர் கிராமத்தில் கொண்டுவந்து கொட்டி விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால், குப்பை கொட்டும் இடத்துக்கு அருகில் வசிக்கும் நாடோடி பழங்குடிச் சமுதாயத்தைச் சார்ந்த 40 குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்’ என்று குற்றச்சாட்டு வாசிக்கப்பட, அதுகுறித்து விசாரிக்க அதிகத்தூருக்குப் புறப்பட்டோம்.

சுமதி
சுமதி

குப்பைகள் கொட்டப்படுவதாகச் சொல்லப்படும் இடத்துக்குச் சென்றோம். அருகிலேயே சிறிய குளம் ஒன்றும் இருந்தது. நாம் சென்ற சமயத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக டிராக்டர்களில் கொண்டுவந்த குப்பைகளைக் கொட்டினர். நம்மைப் பார்த்ததும் அந்த இடத்தில் நின்றிருந்த ஒருவர், ‘‘யார் நீங்க... இங்கே எதுக்கு வந்திருக்கீங்க? இங்கெல்லாம் வரக் கூடாது, கெளம்புங்க’’ என்று கறார் குரலில் எச்சரித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதை சமாளித்து, அருகில் வசிக்கும் நாடோடி பழங்குடியின மக்களிடம் சென்று விசாரித்தோம். ‘‘ஐயா... நாங்க ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருப்போம்ங்க. பல ஊர்ல ரோட்டுல தங்கிட்டு இருந்த எங்க எல்லாரையும் இந்த ஊருக்குக் கூட்டிட்டு வந்து, வீடு கட்டிக் கொடுத்து தண்ணி வசதி, கரன்ட் வசதின்னு எல்லாத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க. இன்னிக்கு நாங்களும் மத்தவங்களைப்போல நல்லபடியா வாழுறோம்னா அதுக்கு கிராமப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவி சுமதியம்மாதான் காரணமுங்க. நாங்க இந்த அதிகத்தூர் கிராமத்துக்கு வந்து பத்து வருஷமாச்சு. இதுவரைக்கும் நாங்க ஆஸ்பத்திரிக்கோ மெடிக்கலுக்கோ போனதே கிடையாது.

ஆனா, உள்ளாட்சித் தேர்தல்ல துணைத் தலைவரா முரளி ஜெயிச்ச பிறகு, நிலைமையே மாறிடுச்சு. அவங்க ஊர்ல உள்ள குப்பைங்களை யெல்லாம் இங்க கொண்டுவந்து கொட்டுறதால, ஒரு மாசமா எங்க ஜனங்கள்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமப் போகுது. ஆரம்பத்துல ராத்திரி நேரத்துல வந்து யாருக்கும் தெரியாம கொட்டிட்டுப் போனாங்க. இப்ப பகல் நேரத்துலேயே கொட்டுறாங்க. கொட்டாதீங்கங்கன்னு சொன்னா, துணைத் தலைவர் முரளி பேரைச் சொல்லி மிரட்டுறாங்க’’ என்கின்றனர் அப்பாவியாக.

நம்மிடம் பேசிய பலரும் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவியாக இருந்த சுமதியைப் பாராட்டினர். மக்களிடம் அவரைப் பற்றி விசாரித்தோம். ‘‘இதுக்கு முன்னாடி ரெண்டு முறை தொடர்ந்து சுமதிதான் இங்கே பஞ்சாயத்துத் தலைவரா இருந்தாங்க. அந்தப் பத்து வருஷத்துல வானம் பார்த்த பூமியா இருந்த எங்க அதிகத்தூர்ல ஒன்பது குளங்களை வெட்டி, மழைநீரை சேகரிச்சு, விவசாயம் செய்யக்கூடிய அளவுக்கு செழிப்பான பூமியா மாத்தினாங்க. அரசாங்கம் அறிவிக்கிற திட்டங்கள் எல்லாத் தையும் எங்க கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தாங்க. அதுமட்டுமல்ல... ஸ்ரீபெரும்புதூர்ல இருக்கும் சில தனியார் நிறுவனங்கள் உதவியோடு 400 கழிவறைகளைக் கட்டிக் கொடுத்து சுகாதாரத்தை மேம்படுத்தினாங்க. ஆனா இப்போ பதவிக்கு வந்திருக்கிறவரு, அதுக்கு நேர்மாறா செயல்படுறாரு. அவங்க குளம் வெட்டினாங்கன்னா, இவர் அதுல குப்பையைக் கொட்டுறாரு’’ என்றனர் வேதனையுடன்.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

சுமதியைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினோம். ‘‘நம்ம ஊருக்கு நம்மால முடிஞ்சதைச் செய்யணும்னு முடிவுபண்ணி, திருவள்ளூர் மாவட்டத்துக்கே முன்மாதிரி கிராமமா கொண்டுவர முயற்சி செஞ்சேன். அதுக்கு நல்ல பலனும் கிடைச்சது. ஆனா, இந்த முறை மக்கள் பணி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை. அது பற்றி நாங்க வருத்தப்படலை. ஆனா, நம்ம கிராமத்துல ஒரு பிரச்னை நடக்கும்போது அதுக்கு குரல்கொடுக்க வேண்டியது நம்ம கடமைதானே!

இப்ப பதவிக்கு வந்திருக்கிற ஊராட்சித் தலைவி பிரியாவும் துணைத் தலைவர் முரளியும் அதிகத்தூர் கிராமத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுபோகணுமே தவிர, கிராமத்துக்குக் கெடுதல் செய்யக் கூடாது. இப்போதைய ஊராட்சி துணைத் தலைவர் முரளி, மணவாள நகரோட ஒட்டுமொத்தக் குப்பைகளையும் வண்டி வண்டியா கொண்டுவந்து இங்கே கொட்டிட்டுப் போறாரு. இதனால, கிராம மக்கள் நோய்வாய்ப் பட்டு அவதிப்படுறாங்க. பல முறை சொல்லியும் ‘இங்க நாங்கதான் எல்லாம். அப்படித்தான் செய்வோம்’னு மிரட்டாத குறையா சொல்றாரு. இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர்கிட்ட சொன்னதுக்கு, ‘மக்கள் எல்லாருமா சேர்ந்து போய் கேளுங்க’னு சொன்னாங்க. அதனால, இப்ப மாவட்ட ஆட்சியர்கிட்ட புகார் மனு கொடுத்திருக்கோம். நடவடிக்கை எப்ப எடுப்பாங்கனு தெரியலை’’ என்றார்.

அதிகத்தூர் ஊராட்சி மன்றத் தலைவி பிரியாவிடம் இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேசியபோது, ‘‘குப்பை கொட்டுறாங்கனு தெரியும். ஆனா, அது மணவாள நகர் குப்பைனு தெரியாது. நான் உடனே என்னனு விசாரிக்கிறேன்’’ என்றார்.

குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டப்படும் குப்பை
குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டப்படும் குப்பை

ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முரளியிடம் பேசினோம். “மணவாள நகர், எங்களுடைய பக்கத்து ஊரான வெங்கத்தூருக்கு உட்பட்ட பகுதி. வெங்கத்தூரில் இருக்கும் புறம் போக்கு நிலங்கள் பெரும்பாலும் வனப்பகுதிக்குள் இருப்பதால், திடக்கழிவு மேலாண்மை அமைக்கத் தாமதமாகிறது. இங்கே குப்பை கொட்ட இடம் இல்லை. கூவத்திலும் ஏரிக்கரையிலும் குப்பை கொட்ட வேண்டிய சூழல்தான் இருக்கிறது. அதனால், `உங்கள் ஊரில் குப்பை கொட்டுவதற்கு இடம் கொடுங்கள்’ என்று வெங்கத்தூர் பஞ்சாயத்துத் தலைவர் கேட்டார். காய்கறி எச்சங்கள்தான் குப்பைகளாக வரும். அதை நம்ம ஊர் விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணித்தான் இங்கு குப்பைகளைக் கொட்ட சம்மதித்தேன். இது பஞ்சாயத்துத் தலைவருக்கும் தெரியும். ஆனால், நாளடைவில் நிறைய பிளாஸ்டிக் குப்பைகள் வர ஆரம்பித்து விட்டன. பக்கத்து ஊர் என்பதால் உதவி செய்கிறோம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் இந்தப் பிரச்னையை சரிசெய்து விடுவோம்” என்றார்

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலரான லதாவிடம் பேசியபோது, ‘‘இதுகுறித்து எழுத்து பூர்வமாக எவரும் என்னிடம் புகார் கொடுக்க வில்லை. வாய்மொழியாகவே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி புகார் சொன்னார். அதனால், `நீங்களே ஊர் மக்களை அழைத்துச் சென்று கலெக்டரிடம் புகார் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன்’’ என்றார்.

திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றோம். ‘‘இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

குளங்களிலிருந்து மட்டுமல்ல... குப்பையைக் கொட்டுபவர்களின் மனங்களில் இருக்கும் குப்பைகளும் அகற்றப்பட வேண்டும்!

விளக்கம்

ஜூ.வி 23.02.2020 தேதியிட்ட இதழில் ‘பொங்கி வழியும் ஆவின் ஊழல்! கலக்கும் வைத்தி கப்சிப் பாலாஜி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தரப்பைப் பெற நாம் முயற்சி செய்ததையும், அவரது அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பியிருந்ததையும் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது கட்டுரை வெளியாகியிருக்கும் சூழலில், வழக்கறிஞர் மூலம் நமக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அமைச்சர். அதில், ‘அந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை; என் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளன. ஒப்பந்தங்களில் கலந்துகொள்வது, சிறப்பு அதிகாரியை நியமிப்பது உட்பட எல்லாமே நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றன. அமைச்சரின் தலையீடு அதில் இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்தக் கட்டுரை, பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் எழுப்பியிருக்கும் புகார்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மற்றபடி, யாருடைய புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் எண்ணம் ஜூ.வி-க்கு இல்லை என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

- ஆசிரியர்