Published:Updated:

சாலைகள் எப்போது பிளக்கும்? - மரணக்கிணற்றில் வளையவரும் சென்னைவாசிகள்!

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

- அலட்சியத்தில் மாநகராட்சி

சாலைகள் எப்போது பிளக்கும்? - மரணக்கிணற்றில் வளையவரும் சென்னைவாசிகள்!

- அலட்சியத்தில் மாநகராட்சி

Published:Updated:
சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

சம்பவம் 1: டிசம்பர் 6-ம் தேதி கரோலின் பிரிசில்லா, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மகள் இவாலினுடன் புத்தாடைகள் வாங்கிக்கொண்டு டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சென்னை, மதுரவாயல் அருகே திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாயில் இடறி விழுந்து இருவரும் இறந்துபோனார்கள். இவாலினுக்கு 14 வயதில் ஒரு தங்கை இருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்பு இவாலினின் தந்தை இறந்துவிட, வயதான தாத்தா மட்டுமே இருக்கிறார். பேத்தியையும் தாத்தாவையும் ஆதரவில்லாத அநாதைகளாக்கிவிட்டது பொறுப்பில்லாத தமிழ்நாடு அரசு. ஆம், மனித உயிர்கள்மீது சற்றும் அக்கறையில்லாத மாநகராட்சி நிர்வாகம், மதுரவாயல் புறவழிச் சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு பத்தடி ஆழத்தில் மூடியில்லாத திறந்தவெளிக் கால்வாயை அமைத்ததே இவர்களின் மரணத்துக்குக் காரணமாகியிருக்கிறது.

சாலைகள் எப்போது பிளக்கும்? - மரணக்கிணற்றில் வளையவரும் சென்னைவாசிகள்!

சம்பவம் 2: டிசம்பர் 9-ம் தேதி கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழேயிருக்கும் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் நரசிம்மன். சாலையிலிருந்த பெரும் பள்ளத்தை மழைநீர் மறைக்க... தடுமாறிக் குழியில் விழுந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே பலியானார். “எனக்கிருந்த ஒரே ஆதரவும் போயிருச்சே...” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியழும் அவரின் மனைவியைத் தேற்ற வார்த்தைகள் இல்லை. இதற்கிடையே அவசர அவசரமாகக் குழியை மூடிய சென்னை மாநகராட்சி நிர்வாகம், ‘சாலைப் பள்ளத்தால் நரசிம்மன் சாகவில்லை’ என்று பொறுப்பில்லாமல் அறிக்கைவிட்டது.

சென்னையில் இப்படிக் காவு வாங்கும் சாலைகள் ஒன்றிரண்டு அல்ல... சொல்லப்போனால், பல்வேறு பகுதிகளில் பள்ளங்களுக்கு நடுவேதான் சிறிதளவு மட்டுமே ஒளிந்து நெளிந்து ஒற்றையடிப் பாதைகளாக ஓடுகின்றன மாநகராட்சி சாலைகள். சர்க்கஸின் சாகசக் கலைஞர்கள்போல மரணக் கிணற்றில் பீதியுடன் வளையவருகிறார்கள் மக்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டு, அரசுப் பேருந்தை அப்படியே விழுங்கியது நினைவிருக்கலாம். அப்படித்தான் இப்போதும் சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு, மக்களை அலறவைக்கின்றன. சென்னை வானுவம்பேட்டையில் 10 அடி அகலத்தில் பாதாளப் பள்ளம், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெகா பள்ளம், மத்திய கைலாஷ் சிக்னல் அருகே பெரும் பள்ளம்... என ‘சாலைகள் எப்போது பிளக்கும்?’ என்று தெரியாமலேயே அச்சத்தில் வாகனம் ஓட்டிக்கொண்டிருக் கிறார்கள் சென்னைவாசிகள்! `மெட்ரோ ரயில் பணிகளை நிறைவு செய்த பிறகு, சாலைகளைச் சரியாக அடைக்காததால் ஏற்பட்ட விளைவு இது’ என்று காரணம் சொல்லப்பட்டாலும், மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் இதை மறுக்கிறார்கள். அதேசமயம், நரசிம்மன் மரணத்துக்கு விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், ‘கோடம்பாக்கத்தில் மழைநீர் பள்ளத்தாலோ, கழிவுநீர் பள்ளத்தாலோ நரசிம்மன் இறக்கவில்லை. அவரது மரணத்துக்கு வேறு காரணம் இருக்கக்கூடும்’ என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும், `பூமிக்கடியில் என்ன நடக்கிறது?’ என்கிற கேள்விக்கு மட்டும் விடை கிடைத்த பாடில்லை. இவ்வளவு விபரீதங்கள் நடந்து கொண்டிருக்க... இதற்கெல்லாம் எந்த பதிலும் முதல்வர் பழனிசாமியிடம் இருந்து வரவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நரசிம்மன்
நரசிம்மன்

குழியில் விழுந்து பலியான நரசிம்மன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் டிரைவாகப் பணியாற்றிவர். ஸ்ரீதரிடம் பேசினோம். ``அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் பெங்களூரு போறதா இருந்தோம். அவரை பிக்அப் பண்ணத்தான் கோடம்பாக்கம் போனேன். அதுக்குள்ள பாழாப்போன அந்த மரணக்குழி அவரைக் காவு வாங்கிடுச்சு. ஆனா, மாநகராட்சி அதிகாரிங்க சாலைப் பள்ளத்தால அவர் சாகலைனு சாதிக்குறாங்க. பிறகென்ன, நரசிம்மன் தானா போய் வெள்ளத்துல படுத்துக்கிட்டு தற்கொலையா செஞ்சிக்கிட்டார்? அந்தக் குழியை மூடுங்கன்னு பதினஞ்சு நாளா அங்கிருந்த மக்கள் மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட கெஞ்சியிருக்காங்க. அதிகாரிகள் காது கொடுத்தே கேட்கலை. மழை ஆரம்பிக்கிற அக்டோபர், நவம்பர்லதான் ரோட்டுல குழியைத் தோண்டுறாங்க. அதைச் சரியா மூடுறதில்லை. சாலை ஒப்பந்தத்துல இவங்க அடிக்குற கொள்ளைதான் இவ்வளவுக்கும் காரணம். விபத்துகளுக்கு ஒப்பந்ததாரர்களைப் பொறுப்பேற்கவெச்சாத்தான் ஒழுங்கா வேலை செய்வாங்க...” என்றார் ஆவேசத்துடன்.

‘‘ஏன் இவ்வளவு அலட்சியம்?’’ என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டோம். ‘‘மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளங்களை அடைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மழை பெய்ததால், சில இடங்களில் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கம் சம்பவத்தைப் பொறுத்தவரை, அது மாரடைப்பு என டாக்டர்களே கூறுகிறார்கள். அங்கே கீழே விழும் அளவுக்குக் குழி இல்லை. அவர் இறந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அதைத்தான் ஊடகங்களுக்குத் தெரிவித்தேன்’’ என்றவரிடம், ``கோடம்பாக்கம் என்றில்லை... ஏகப்பட்ட இடங்களில் சாலைகளே சிதைந்துபோய்விட்டன. அவற்றையெல்லாம் ஏன் சீரமைக்கவில்லை?’’ என்றோம்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

‘‘மாநகராட்சி எல்லைக்குள் 39,000 சாலைகள் உள்ளன. மொத்தமாகக் கணக்கிட்டால் 6,000 கிலோமீட்டர்கள். நீர்வழிப்பாதை என்பது 40 கிலோமீட்டர்தான். நாங்கள் முறையாக பராமரிப்பைச் செய்ததால்தான், வெள்ளம் வடிந்தது. பராமரிக்காமல் இருந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். எங்களைக் குறை சொல்வது சரியில்லை. குழிகளை நிரப்பும் பணியை மழைக்காலத்தில் செய்ய முடியாது. வெள்ளம் வடிந்து இப்போதுதானே சூரிய வெளிச்சம் வந்திருக்கிறது” என்றார் இயல்பாக.

ஆனால், மக்கள் இருண்ட முகத்துடன்தானே சாலைகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டிருக் கிறார்கள் மிஸ்டர் பிரகாஷ்... தவிர, உறவுகளை இழந்து தவிக்கும் இறந்துபோன குடும்பங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?