Published:Updated:

தலைநகர் சென்னையின் லட்சணம் இதுதான்!

ஜி.என்.செட்டி ரோடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.என்.செட்டி ரோடு

பல்லை இளிக்கும் பயங்கர சாலைகள்... காவு வாங்க காத்திருக்கும் படுகுழிகள்...

மழை நின்றுவிட்டது. வெள்ளம் வடிந்தும் பல நாள்களாகிவிட்டன. பல்லை இளிக்கும் பயங்கர சாலைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. பல இடங்களில் பெரும் பள்ளங்கள் வாகன ஓட்டிகளை விழுங்கக் காத்திருக்கின்றன. கொஞ்சம் அசந்தாலும் உயிர்போகும் அபாயங்கள் ஏராளம். மிகைப்படுத்தியெல்லாம் சொல்லவில்லை... நவம்பர் 1 அன்று சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே முகமது யூனுஸ் என்கிற இளைஞர் பைக்கில் செல்லும்போது அப்படித்தான் திடீர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகும் சிறிதும் பெரிதுமாக விபத்துகள் தொடர்கின்றனதான். ஆனால், இதுவரை சாலைகளைச் சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

சமீபத்தில் பெய்த பெருமழையால் சென்னையின் பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் பெரும் பள்ளங்களைத் தோண்டினர். இந்தப் பருவமழைக் காலத்தில் 1.04 கோடி செலவில் 13,000-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மையிலேயே சாலைகளைச் சரிசெய்திருக்கிறார்களா என்பதை அறிய பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்த்தோம். அங்கெல்லாம் சாலைகளைச் சரிசெய்ததற்கான அடையாளமே இல்லை. சில இடங்களில் முன்பைவிட பள்ளங்கள் பெரிதாக மாறியிருந்தன. (பார்க்க படங்கள்.)

கிண்டி - ரேஸ் கோர்ஸ்
கிண்டி - ரேஸ் கோர்ஸ்
தலைநகர் சென்னையின் லட்சணம் இதுதான்!
நார்த் போக் ரோடு
நார்த் போக் ரோடு
Jerome K

புதிதாக ஒரு சாலை போடப்படும்போது, அந்தச் சாலை எப்படிப் போடவேண்டும் என்பது குறித்து டெண்டரில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய சாலை சுரண்டி எடுக்கப்பட வேண்டும்; பிறகு அதன்மீது தார்க் கலவைகளைக்கொண்டு 5 செ.மீட்டருக்கு சாலை போடப்பட வேண்டும். அந்தச் சாலைக்கு மேல் மறுபடியும் தார் தெளிக்கப்பட்டு, அதன்மீது 4 செ.மீட்டருக்கு சாலை போடப்பட வேண்டும். மழைநீர் வெளியேறக் குழாய் இணைப்பு, வேகத்தடை, அறிவிப்புப் பலகை அனைத்தையும் ஒப்பந்ததாரரே செய்து தர வேண்டும். தார்ச்சாலை என்றால் மூன்றாண்டுகளுக்கும், சிமென்ட் சாலை என்றால் ஐந்தாண்டுகளுக்கும் ஒப்பந்ததாரர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இடைப்பட்ட காலகட்டத்தில் அந்தச் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் பழுதுகளை அவர்தான் சரிசெய்து தர வேண்டும்.

“ஆனால், இவை அனைத்தும் பின்பற்றப்படுகின்றனவா?” என்று அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ``மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் போடும்போது, கலவை தயார் செய்யும் இடத்தில் அதிகாரி ஒருவர் நேரில் சென்று கலவையின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சாலை போட்ட பிறகு அந்தச் சாலையையும் ஆய்வுசெய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்ட ஆய்வுக்கும் மதிப்பெண் உண்டு. ஒரு மதிப்பெண் என்றால் ‘நன்று’ என்றும், ஐந்து மதிப்பெண் என்றால் ‘மிகவும் மோசம்’ என்றும் அர்த்தம். இப்படி ஓர் ஒப்பந்ததாரர் 500 மதிப்பெண்ணுக்கு அதிகமாகப் பெற்றால், அவருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மாநகராட்சியின் எந்த ஒப்பந்தமும் வழங்கப்படக் கூடாது என்பது விதி. ஆனால், அப்படி எந்தவொரு ஒப்பந்ததாரரும் ‘பிளாக் லிஸ்ட்’ செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தார்ச்சாலையில் பள்ளம் ஏற்பட்டால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு அதை ஒப்பந்ததாரர்தான் சரிசெய்து தர வேண்டும். பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் சரிசெய்வது கிடையாது. மாநகராட்சியும் அவர்களிடம் கேட்பது கிடையாது. மாறாக, புதிய ஒப்பந்தம் விடப்பட்டு அந்தச் சாலையைச் சரிசெய்கிறார்கள்.

கோயம்பேடு
கோயம்பேடு
ஜி.என்.செட்டி ரோடு
ஜி.என்.செட்டி ரோடு
புழுதிவாக்கம்
புழுதிவாக்கம்
வானவம்பேட்டை
வானவம்பேட்டை

சென்னையில் அரசுத் துறைகளுக்கு இடையே சரியான புரிதல் இல்லை. ஒரு பகுதியில் புதிய சாலை போட்டால், அடுத்த சில நாள்களிலேயே குடிநீர்துறையோ, மின்சாரத்துறையோ அங்கு பள்ளம் தோண்டி வேலை செய்யும். அந்தப் பள்ளமும் சரிவர மூடப்படுவதில்லை. அப்படி மூடாத பள்ளத்தால்தான், சின்னமலை அருகே ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். சென்னை முழுவதும் விபத்துகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அரசின் அலட்சியமும், அதிகாரிகளின் கவனக்குறைவும்தான் இதற்கெல்லாம் காரணம்” என்றார்.

அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யச் சட்டமுள்ளது. ஆனால், இங்கு அதிகாரி ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஒப்பந்ததாரர் தரமில்லாத சாலையைப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார். அதிகாரிகளும் கமிஷனுக்காகக் கண்டுகொள்வதில்லை. இந்த பிரச்னையில் பலியாவது பாவப்பட்ட மக்கள் மட்டும்தான். தற்போது போடவிருக்கும் புதிய சாலைகளாவது தரமான சாலைகளாக அமைக்கப்படும் என்பதை உறுதிசெய்யுமா அரசு?

*****

“தரமான சாலைகள் போடப்படும்!”

``சென்னையில் சாலைகளைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’’ என்று மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டோம்... “சென்னை மாநகராட்சியில் மொத்தம் 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகளும், 5,270 கிலோமீட்டர் நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்படுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் முதற்கட்டமாக 622 உட்புற தார்ச்சாலைகளும், 307 உட்புற கான்கிரீட் சாலைகளும், 79 பிரதான சாலைகளும் சீரமைக்க வேண்டும் என்று தெரியவந்திருக்கிறது. இவற்றைச் சீரமைக்க, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் 109.6 கோடி ரூபாயும், ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திலிருந்து 37.58 கோடி ரூபாயும் என மொத்தம் 147.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,010 சாலைகள் மற்றும் நடைபாதைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் சென்னை முழுவதுமுள்ள சாலைகள் தரமான முறையில் சீரமைக்கப்படும்” என்றார்.