Published:Updated:

“பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லை!”

பொன்னாண்டாம்பாளையம்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னாண்டாம்பாளையம்

ஒரு கிராமம்... 4 உள்ளாட்சித் தலைவர்கள்... 2 எம்.எல்.ஏ-க்கள்., 2 எம்.பி-க்கள்

“பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லை!”

ஒரு கிராமம்... 4 உள்ளாட்சித் தலைவர்கள்... 2 எம்.எல்.ஏ-க்கள்., 2 எம்.பி-க்கள்

Published:Updated:
பொன்னாண்டாம்பாளையம்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னாண்டாம்பாளையம்

‘‘எங்கள் கிராமத்துக்கு மூன்று ஊராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர், இரண்டு எம்.எல்.ஏ-க்கள், இரண்டு எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இத்தனை மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் எங்கள் கிராமத்துக்கு பத்துப் பைசா பிரயோஜனம் இல்லை!’’ - பல ஆண்டுகளாக இப்படித்தான் விரக்தியுடன் புலம்புகிறார்கள் கோவை மாவட்டம், பொன்னாண்டாம்பாளையம் கிராம மக்கள். இதென்ன விசித்திரமான பிரச்னை என்று அந்த கிராமத்துக்கு விசிட் அடித்தோம்.

கோவையிலிருந்து அவிநாசி செல்லும் சாலையில் சற்றே உள்ளடங்கிய கிளைச் சாலையில் சென்றால் வருகிறது பொன்னாண்டாம்பாளையம். மொத்தம் 300 வீடுகள், 800 பேர் வசிக்கும் இந்தக் கிராமம் கணியூர், அரசூர், நாரணாபுரம் ஊராட்சிகள் மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி என நான்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரிந்து கிடக்கிறது. அத்துடன் சூலூர், அவிநாசி என்று இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்குள்ளும், கோவை, நீலகிரி என்று இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள்ளும் கிராமம் பிரிந்துகிடக்கிறது. அந்த வகையில் இந்தக் கிராமத்துக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள், இரண்டு எம்.பி-க்கள், நான்கு உள்ளாட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதுதான் பிரச்னையே. கிராமம் இப்படித் துண்டு துண்டாகச் சிதறிக்கிடப்பதால் குடிநீர், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பது, பாஸ்போர்ட் எடுப்பது என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் ‘எல்லை’யைக் காரணம் காட்டி அலைக்கழிக்கப்படுகிறார்கள் மக்கள்!

“பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லை!”

கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாண்டாம்பாளையம் வார்டு உறுப்பினரான சிவக்குமார் நம்மிடம், ‘‘பொன்னாண்டாம்பாளையம் கிழக்குப் பகுதி கணியூர் ஊராட்சியிலயும், மேற்குப் பகுதி நாரணாபுரம் ஊராட்சியிலயும், தெற்குப் பகுதி அரசூர் ஊராட்சியிலயும், வடக்குப் பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சியிலயும் வருது. ஊரே நாலா பிரிஞ்சு கிடக்கறதால எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்குறதில்லை. கணியூர் ஊராட்சிக்கு நல்ல தண்ணி வருது. மத்த இடங்கள்ல போர் தண்ணிதான் வரும். பல இடங்கள்ல ரோடு இல்லை. இதைப் பத்தியெல்லாம் முறையிட்டா, ‘அந்தப் பகுதி எங்களுக்கு வராது’னு எல்லா உள்ளாட்சி அமைப்புகள்லயும் தட்டிக்கழிக்கறாங்க. எங்க கிராமத்தை ஒரே ஊராட்சியில சேர்த்தாத்தான் இதுக்குத் தீர்வு கிடைக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலப்ப ‘நாங்க ஆட்சிக்கு வந்ததும் நாலு உள்ளாட்சி அமைப்பா பிரிஞ்சு கிடக்கற பொன்னாண்டாம்பாளையத்தை ஒரே உள்ளாட்சி அமைப்புக்குக் கீழ கொண்டுவருவோம்’னு தி.மு.க-காரங்க போஸ்டர் ஒட்டினாங்க. ஆட்சி மாறியும் எதுவும் நடக்கலை...’’ என்றார் விரக்தியுடன். வளர்மதி என்ற பெண் நம்மிடம், ‘‘தண்ணிப் பிரச்னைதான் பெரிய தலைவலியா இருக்கு. தண்ணி எடுக்க மொபட் வண்டியை எடுத்துக்கிட்டு 10 கி.மீ தூரம் போகணும். இறப்புச் சான்றிதழ் வாங்கப் போனாக்கூட அலைக்கழிக்குறாங்க” என்றார் வேதனையுடன்.

கந்தசாமி
கந்தசாமி

பத்திரப்பதிவுக்கு மோப்பிரிபாளையம் பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள் அன்னூருக்கும், இதர பகுதி மக்கள் சூலூருக்கும் செல்ல வேண்டும். மோப்பிரிபாளையம் பேரூராட்சி என்பதால், மற்ற மூன்று ஊராட்சிகளில் வசிப்பவர்களைவிட அங்கு (வடக்குப் பகுதி) வசிப்பவர்களுக்கு வரி அதிகம். மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மொத்தம் இருப்பதே 80 வாக்குகள்தான். அவற்றையும் மூன்று வார்டுகளில் பிரித்திருக்கிறார்கள். இதனால், ‘‘உங்க ஓட்டை வாங்கித்தான் ஜெயிக்கணும்னு இல்லை’’ என்று கட்சிக்காரர்களும் அலட்சியப்படுத்துகிறார்கள். விஸ்வநாதன் என்பவரது வீட்டைப்போல விசித்திரத்தை எங்கு தேடினாலும் கிடைக்காது... ‘‘எங்க வீட்டுல நான், மனைவி, மகன் மூணு பேருக்கும் வெவ்வேற மூணு வார்டுல ஓட்டு பிரிஞ்சு கிடக்கு. பேங்க் லோன் வாங்கலாம்னு போனா, ‘கணியூர் போங்க... அரசூர் போங்க...’னு பந்தாடுறாங்க. ஏதாச்சும் பிரச்னைனு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாக்கூட ‘அது எங்க எல்லையில வராது’னு சுத்தல்ல விடுறாங்க’’ என்றார் பரிதாபமாக.

சமீரன்
சமீரன்

மகேஷ்குமார் என்ற இளைஞர் நம்மிடம், ‘‘எங்க ஊருல சிலருக்கு ஆதார்ல ஒரு அட்ரஸ், வோட்டர் ஐ.டி-ல ஒரு அட்ரஸ், லைசென்ஸ்ல ஒரு அட்ரஸ் இருக்கும். இப்படி எல்லாத்துலயுமே குழப்பம்தான்... நான் எம்.பி.ஏ படிச்சப்ப இன்டர்ன்ஷிப்புக்கு சீனாவுல வாய்ப்பு கிடைச்சுது. தட்கல் பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செஞ்சேன். ஆனா, முகவரி குழப்பத்தால என்னால பாஸ்போர்ட்டே எடுக்க முடியலை... சீனா வாய்ப்பும் தட்டிப்போயிருச்சு. மழைக்காலத்துல அம்மை நோயைத் தடுக்குறதுக்காக எல்லா கிராமங்கள்லயும் மாடுகளுக்கு ஊசி போட்டாங்க. ஆனா, எங்க கிராமத்துல எல்லைப் பிரச்னையால மாடுகளுக்கு ஊசியே போடலை’’ என்றார் ஆதங்கத்துடன்.

இந்த விவகாரம் தொடர்பாக பொன்னாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இதில், ‘மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு அதிகாரிகள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி, சென்னைக்குப் பரிந்துரை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிவக்குமார், வளர்மதி, விஸ்வநாதன், மகேஷ்குமார்
சிவக்குமார், வளர்மதி, விஸ்வநாதன், மகேஷ்குமார்

இந்தப் பிரச்னை குறித்து சூலூர் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ கந்தசாமியிடம் பேசினோம்... “இது தொடர்பாக எங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆவணங்கள் சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்றுவிட்டன. அதற்குள் ஆட்சி மாறிவிட்டது. இது குறித்து சட்டசபையிலும், முதல்வர் தனிப்பிரிவிலும் கோரிக்கை வைத்துள்ளேன்’’ என்றார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் முடிந்தவுடன் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, தீர்வு காணப்படும்” என்றார்.

அரசின் நிர்வாக குளறுபடிகளால் மக்கள் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. தேவை, உடனடி நடவடிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism