Published:Updated:

குளறுபடியுடன் வரவேற்கிறது தஞ்சை ஸ்மார்ட் சிட்டி!

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
தஞ்சை ஸ்மார்ட் சிட்டி

கடைகள் இடிப்பு... வாடகை இடத்தில் பேருந்து நிலையம்... வயிறு எரியும் வியாபாரிகள்... தூர் வாருவதில் முறைகேடு...

குளறுபடியுடன் வரவேற்கிறது தஞ்சை ஸ்மார்ட் சிட்டி!

கடைகள் இடிப்பு... வாடகை இடத்தில் பேருந்து நிலையம்... வயிறு எரியும் வியாபாரிகள்... தூர் வாருவதில் முறைகேடு...

Published:Updated:
தஞ்சை ஸ்மார்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
தஞ்சை ஸ்மார்ட் சிட்டி

தஞ்சாவூரில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்துவந்த கடைகளை இடித்துவிட்டதாக வணிகர்கள் தரப்பில் புகார் வாசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் தி.மு.க எம்.எல்.ஏ-வோ, திட்டப்பணிகளுக்குத் தேவை யில்லாமல் பல மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கி முறைகேடு செய்வதாக புகார் எழுப்பியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சாவூரில் பெரிய கோயிலைச் சுற்றியிருக்கும் அகழியை மேம்படுத்துதல், பூங்காக்கள் மற்றும் குளங்களைச் சீரமைத்தல், பத்துக்கும் மேற்பட்ட சாலைகளை சீர்மிகு சாலைகளாக மாற்றுதல், பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், வணிக வளாகத்துக்கான கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடக்கின்றன. இதற்கு முதற்கட்டமாக, 897.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. இதில்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ் பாண்டியனிடம் பேசினோம்.

 எஸ்.எஸ் பாண்டியன், டி.கே.ஜி நீலமேகம், ஜானகி ரவீந்திரன்
எஸ்.எஸ் பாண்டியன், டி.கே.ஜி நீலமேகம், ஜானகி ரவீந்திரன்

“மக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதபடி பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால் பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்துகளுக்கான பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் இருந்த 400-க்கும் மேற்பட்ட கடைகளை ஒரே இரவில் இடித்துத் தள்ளிவிட்டனர். ‘தீபாவளி பண்டிகைக்கு சில வாரங்களே இருக்கின்றன. அதுவரையேனும் கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தோம். ஆனால், `குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்காவிட்டால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும்’ என்று சொல்லி கடைகளை இடித்துவிட்டார்கள். எங்களுக்கு, பண்டிகை வியாபாரமே போய்விட்டது.

மணிக்கூண்டு, சரபோஜி மார்க்கெட், திருவள்ளுவர் திரையரங்கு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை இடிக்க உள்ளனர். இதனால் கடை உரிமையாளர்களின் குடும்பங்கள், அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடையை இழந்தவர்களுக்கு மாற்று இடங்களையும் ஒதுக்கவில்லை. பணிகள் முடிந்த பிறகு புதிய ஏலம் விடாமல் பழைய நபர்களுக்கே கடை தரப்படும் என்ற உத்தரவாதத்தையும் தரவில்லை. 50 ஆண்டுகளுக்குமேல் கடை நடத்திவந்தவர்களை, ஒரே இரவில் நிர்க்கதியாக நிற்க வைத்துவிட்டார்கள்” என்றார் வருத்தத்துடன்.

குளறுபடியுடன் வரவேற்கிறது தஞ்சை ஸ்மார்ட் சிட்டி!

தஞ்சாவூர் தொகுதி தி.மு.கழக எம்.எல்.ஏ-வான டி.கே.ஜி.நீலமேகம் நம்மிடம், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக ஆட்சியாளர்கள் முறையாகத் திட்டமிடாமல் பல குளறுபடிகளைச் செய்து வருகின்றனர். திட்டப்பணிகளின் மதிப்பீடு, பல மடங்கு அதிகமாகக் கூட்டிப் போடப்படுகிறது. இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் செய்யக்கூடிய பணிக்கு, பத்து கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, நகரத்துக்குள் அய்யன்குளம், சாமந்தான்குளம் ஆகியற்றை தூர்வாரிவருகின்றனர். இதற்கு பத்து கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றனர். ஆனால், இதற்கு அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்.

சில வருடங்களுக்கு முன்பு, மக்கும் - மக்காத குப்பைகளைத் தரம் பிரிப்பதற்கு மாநகராட்சி சார்பாக 14 கோடி ரூபாயில் புதிய இயந்திரம் வாங்கப்பட்டது. அது சரியாகச் செயல்படாமல் துருப்பிடித்துக் கிடக்கிறது. தற்போது அதே பயன்பாட்டுக்காக மேலும் 2 கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். தஞ்சாவூரில் உள்ள திருவையாறு பேருந்து நிலையத்தில் 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன கழிவறை, முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. அது பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடந்தது. இப்போது அதை இடித்துத்தள்ள இருக்கிறார்கள்.

வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்...
வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்...

மூடப்பட்ட பழைய பேருந்து நிலையத்துக்குப் பதிலாக, கரந்தை பகுதியில் தனியார் இடத்தை வாடகைக்கு எடுத்து ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகப் பேருந்துநிலையம் அமைத்துள்ளனர். இதற்கு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகை தருகிறார்கள். மாநகராட்சிக்குச் சொந்தமாக பல்வேறு இடங்கள் இருக்கின்றன. ஏன் தனியார் இடத்தைப் பிடிக்க வேண்டும்? இப்படி பல்வேறு பணிகளிலும் குளறுபடியுடனும் அவசரகதியிலும் வேலைகள் நடக்கின்றன” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரனிடம் பேசினோம். ‘‘ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்து, அதற்குரிய ஒப்புதல் பெற்ற பிறகே பணிகள் நடக்கின்றன. இதில் எந்தவிதமான குளறுபடியும் நடக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சம்பந்தப்பட்ட வணிகர்களை அழைத்து கூட்டம் நடத்தி கடைகளை காலிசெய்யச் சொல்லிவிட்டோம். அவர்கள் காலி செய்யவில்லை. தற்காலிக பேருந்துநிலையம் அமைக்க மாநகராட்சியின் இடங்கள் பொருந்தவில்லை. அதனாலேயே, வாடகை இடத்தில் தற்காலிக பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

நகரை அழகுப்படுத்தலாம்... ஆனால், அதை வியாபாரிகள் வயிற்றில் அடித்து செய்யக் கூடாது!