Published:Updated:

குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை! - காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்

வெள்ளியங்கிரி மலை
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு ஆண்டவர் இருக்கிறார். இந்தக் கோயிலையும் வனத்தையும் அறநிலையத்துறை மற்றும் வனத்துறைதான் பராமரிக்க வேண்டும்.

குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை! - காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்

வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு ஆண்டவர் இருக்கிறார். இந்தக் கோயிலையும் வனத்தையும் அறநிலையத்துறை மற்றும் வனத்துறைதான் பராமரிக்க வேண்டும்.

Published:Updated:
வெள்ளியங்கிரி மலை
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளியங்கிரி மலை

`வெள்ளியங்கிரி மலையில் ஆய்வு செய்த முதல் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்’ என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் சேகர்பாபு. “மலைக்கு பக்தர்கள் எளிதாகச் செல்லும் வகையில் புதிதாக பாதை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தோம்” என்றும் சொல்லியிருக்கிறார் அமைச்சர். ஆனால், “இந்த மலையின் உண்மையான தேவையே வேறு. இயற்கையழகு கொட்டிக் கிடக்கும் வெள்ளியங்கிரி, பிளாஸ்டிக் குப்பை மலையாக மாறிவருகிறது” என்று வேதனை தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

ஆன்மிக பூமியாகவும், கோவை மாவட்டத்தின் அடையாளமாகவும் திகழும் வெள்ளியங்கிரி மலையின் எழில் கொஞ்சும் இயற்கையை ரசிக்கும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை நம்பி புற்றீசல்போல பெருகிவிட்ட கடைகளில் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ், குட்கா என்று சகலமும் கிடைக்கின்றன. விளைவு... கட்டுப்பாடுகளெல்லாம் காற்றில் பறந்து, திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளே தென்படுகின்றன.

சேகரிக்கப்பட்ட குப்பைகள் மூட்டை மூட்டையாக...
சேகரிக்கப்பட்ட குப்பைகள் மூட்டை மூட்டையாக...

வெள்ளியங்கிரி மலை பிரச்னைக்காக, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு தொடர்ந்துள்ள இந்து மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார் பேசும்போது, “வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு ஆண்டவர் இருக்கிறார். இந்தக் கோயிலையும் வனத்தையும் அறநிலையத்துறை மற்றும் வனத்துறைதான் பராமரிக்க வேண்டும். ஆனால், ஏலம் என்ற பெயரில் பராமரிப்புப் பணிகளையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துவிடுகின்றனர். மலைக்குச் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்ததுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். பிரபலமான இரண்டு துணிக்கடைகள்தான் காலம் காலமாக ஏலத்தில் எடுத்துவருகின்றன. இவர்கள் தங்கள் நிறுவனங்களை விளம்பரம் செய்வதில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, மலையைப் பாதுகாக்க எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. இதனால், வெள்ளியங்கிரியின் பசுமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றமும் ஏலத்துக்குத் தடைவிதித்தது. வனப் பாதுகாப்புச் சட்டப்படி, பழங்குடி மக்கள்தான் அங்கு கடை நடத்த வேண்டும். ஆனால், தற்போது அரசியல் கட்சியினரும், ஏலம் எடுக்கும் தனியார் நிறுவனங்களுமே கடை போடுகின்றனர். அதனால்தான் குட்கா உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதப் பொருள்களும் அங்கே கிடைக்கின்றன” என்றார் ஆதங்கத்தோடு.

“முன்பெல்லாம் மலையில் சோடா, சுக்கு காபி கிடைப்பதே அரிதாக இருக்கும். இப்போது பிஸ்கட், சிப்ஸ் என அனைத்துத் தின்பண்டங்களும் கிடைக்கின்றன. கீழேயிருந்து மலை ஏறும் மக்களிடம் சம்பிரதாயத்துக்காக சோதனை செய்கின்றனர். கூட்டம் அதிகம் இருக்கும்போது மேலே கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பொருள்களைச் சோதனை செய்வதில்லை. இப்படிக் கட்டுப்பாடுகள் குறைந்ததால், அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பை பரவிக்கிடக்கிறது. இதனால் வனப்பகுதி மாசுபடுவதுடன், வனவிலங்குகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறை, அறநிலையத்துறை ஒன்றிணைந்து வெள்ளியங்கிரி மலையைப் பாதுகாக்க வேண்டும்” என்றார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவராம்.

குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை! - காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்

“சட்டப்படி மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும்தான் மலைக்கு மக்களை அனுமதிக்க வேண்டும். ஆனால், தற்போது அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, பொங்கல், ஆயுதபூஜை, பங்குனி உத்திரம் என்று எல்லா விசேஷ நாள்களிலுமே மக்களை அனுமதிக் கின்றனர். இதனால்தான் கடைகளின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. ஆறாவது மலையிலுள்ள ஆண்டி சுனைத் தண்ணீர் சுத்தமாகவும், ஆளை உறையவைக்கும் குளிர்ச்சியுடனும் இருக்கும். ஆனால், தற்போது ஆண்டி சுனையைச் சுற்றி துணிகளும், மனிதக் கழிவுகளுமே கிடக்கின்றன. வனத்துறைக்கும், அறநிலையத்துறைக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. ஆனாலும்கூட கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

வெள்ளியங்கிரி கோயில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரமதி, “மலைப்பகுதியில் மொத்தம் 61 கடைகள் இருக்கின்றன. கடைகள் அதிகம் இருப்பதால்தான் குப்பை தேங்குகிறது. அந்தக் கடைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மலைப்பகுதியின் கீழ்ப்பகுதியில் கழிப்பறை, குளியலறை இருக்கின்றன. ‘மலைக்கு 700 பேரைத்தான் அனுமதிக்க வேண்டும். ஆனால், நாங்கள் கூடுதலாக அனுமதிக்கிறோம்’ என வனத்துறையினரே சொல்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. பிரச்னையைச் சரிசெய்ய வனத்துறையுடன் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

செந்தில்குமார், சிவராம்
செந்தில்குமார், சிவராம்

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், “மலைக்கு வரும் மக்களை அடிவாரத்தில் முழுவதுமாக சோதனை செய்கிறோம். வனத்துறை மட்டுமல்லாமல், பழங்குடி மக்களையும் சூழல் காவலர்களாக, சோதனை செய்யும் பணியில் ஈடுபடுத்துகிறோம். இப்போதுகூட 72 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளோம். தன்னார்வலர்கள் மூலமும் குப்பைகளை அகற்றிவருகிறோம். அங்கிருக்கும் கடைகள்தான் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம். அறநிலையத்துறைக்குத்தான் அதிக வருவாய் வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றி பிரச்னைகளைச் சரிசெய்ய, ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளோம்” என்றார்.

இயற்கையும் இறை வடிவமே... அதைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதை மக்களும் உணர்ந்தால் மட்டுமே வெள்ளியங்கிரிக்கு விடியல் பிறக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism