Published:Updated:

ஒரு புதிய உண்மைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

பொறியாளர் கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

பிரீமியம் ஸ்டோரி

மூன்றாண்டுகளுக்கு முன்பு, மாஸ்க் அணிந்து வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய வேண்டியிருக்கும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டோம். கொரோனாவுக்கு முன் / கொரோனாவுக்குப் பின் என்று மனிதனின் வாழ்க்கையைப் பிரிக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது கொரொனா. இது ஏதோ சாபமோ... கைமீறிய விபரீதமோ கிடையாது. இயற்கையின் எண்ணற்ற எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, உள்ளங்கைக்குள் வைத்து கொரொனாவை வளர்த்திருக்கிறோம். கொரொனா, காலநிலை மாற்றத்தின் குழந்தை. காடுகள் அழிக்கப்படுவதும், அதனால் காட்டுயிர்களின் வாழ்விடங்கள் சுருங்குவதுமே கொரோனா போன்ற தொற்றுகளுக்குக் காரணம் என்கிறார்கள் நுண்ணுயிர் ஆய்வாளர்கள்.

கோ.சுந்தர்ராஜன்
கோ.சுந்தர்ராஜன்

சமீபத்தில் வெளியான காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுகளின் அமைப்பான ஐ.பி.சி.சி-யின் அறிக்கை, நாம் கண்டுகொள்ள மறுத்த எச்சரிக்கை, இன்று எப்படி நமக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்கிறது. கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்துப் பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல்நீர்மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ என ஏதோவொரு பேரிடரால் பாதிக்கப்பட்டிருந்தன அல்லது பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்தன. வெறும் ஹேஷ்டேக்குகளாகவே நாம் கடந்து சென்ற இந்த நிகழ்வுகளை, இனி அப்படிக் கடக்க முடியாது. காரணம், காலநிலை மாற்றத்தின் கொடும் கரங்கள் நம் வாசலை நோக்கி நீண்டுகொண்டிருக்கின்றன.

கடந்த ஜூலை மாத நிகழ்வுகளெல்லாம் சில ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பவைதானே... அதில் புதிதாக ஏதுமில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்துத் தொடர்ச்சியாக கண்காணித்துவரும் எந்த அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை.

பேரிடர்களை முன்கூட்டியே கணித்துவிடும் அறிவியல் தொழில்நுட்பங்களாலும்கூட அவற்றை கணிக்க முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் காலநிலையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் நிகழும் என்று ஏற்கெனவே நாம் கணித்திருந்த பல அளவுகோல்களைச் சுக்கு நூறாக உடைத்தன ஜூலை மாதத்தில் நடந்த தீவிர காலநிலை நிகழ்வுகள்.

இந்தப் பின்னணியில்தான் ஐ.பி.சி.சி-யின் சமீபத்திய அறிக்கையைப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஐ.பி.சி.சி தற்போது தனது ஆறாவது மதிப்பீட்டுக் காலத்தில் உள்ளது. இந்தக் காலத்தில் அமைப்பின் முதல் பணிக்குழுவின் ‘Climate Change 2021: The Physical Science Basis’ எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கை, காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்தும், மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் உண்டாகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி, ‘பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்தினாலும்கூட இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலகட்டத்தில் புவியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிடும்’ என்பதேயாகும்.

ஒரு புதிய உண்மைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

2014-ம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில், `புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் நடவடிக்கை காரணம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று வெளியாகியிருக்கும் அறிக்கையில் `1750-ம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்துக்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம்’ என்பதை அறிவியலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை சொல்லும் மிக முக்கியமான விஷயம், இதற்கு முன்பு வந்த ஐந்து மதிப்பீட்டு அறிக்கைகளையும் மனித இனம் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான். `பூமியின் மீதான மனிதர்களின் செல்வாக்கு, ஏற்கெனவே பல பிராந்தியங்களில் வானிலை மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகளை பாதித்திருக்கிறது’ என்கிறது அறிக்கை.

அதிலும் 2014-ல் வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகு வெப்ப அலைகள், கனமழை, வறட்சி, புயல் போன்ற பேரிடர்களின் தீவிரத்துக்கு மனிதர்களின் நடவடிக்கையே முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது அதிகமாகவோ, நடுத்தரமாகவோ அல்லது குறைவாகவோ எந்தப் பாதையில் சென்றாலும் புவி வெப்பம், 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியஸ் அளவை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் எட்டிவிடும் என்கிறது அறிக்கை.

தவிர, புவி வெப்பமயமாதல் நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால், பருவமழைப் பொழிவு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் அதிதீவிர மழைப்பொழிவும் வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடர்ச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோகூட நிகழும். இதன் தாக்கத்தை நாம் ஏற்கெனவே இந்தியாவில் உணரத் தொடங்கிவிட்டோம். ஓராண்டு பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பொழிவது, தாமதமான பருவமழைக் காலங்கள் மற்றும் மிக அதிகமான வெயில் எல்லாம் சமீப காலங்களில் அதிகரித்திருக்கின்றன. இவை மட்டுமல்ல... இன்னும் இருக்கின்றன.

கார்பன் டைஆக்ஸைடு உமிழ்வு அதிகமாகும் பட்சத்தில், நிலமும் கடலும் கார்பன் டைஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். பசுமை இல்ல வாயுக்களின் கடந்தகால மற்றும் எதிர்கால உமிழ்வால் கடல், பனிப்பாறைகள், கடல்நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழையநிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும். 1970-ம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது, அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்று என்கிறது அறிக்கை. அதேபோல 1900-ம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல்மட்ட உயர்வின் வேகமானது, கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்று. 2100-ம் ஆண்டில் 2 மீட்டர் அளவுக்கும், 2150-ம் ஆண்டில் 5 மீட்டர் அளவுக்கும் கடல்நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கை, 1980-ம் ஆண்டுக்குப் பிறகு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆர்க்டிக் கடற் பகுதியிலுள்ள பனிப்பாறைகளின் பரப்பு 1979-1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதம் குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம்.

ஒரு புதிய உண்மைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

அறிவியல் ஆதாரங்களுடன் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை இந்த அறிக்கை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி உமிழ்வைக் குறைத்தால்கூட இனி நமது இயல்பு வாழ்க்கை பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும். எனினும், தற்போதிருக்கும் உமிழ்வு அளவைக் குறைப்பதுடன், மிக வேகமாக நம் வாழ்விடங்களைப் பேரிடர்களிலிருந்து தப்பிக்கும் வகையில் தகவமைத்துக்கொள்ள வேண்டும். இனி நாம் வெளியிடும் ஒவ்வொரு சிறு உமிழ்வுமே இப்புவியின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் என்பதை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி விட்டனர். அதன்படி இன்று நாம் ஒரு புதிய உண்மைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை!

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், அனல்மின் நிலையங்களையும், நிலக்கரி மற்றும் யுரேனிய சுரங்கங்களையும் திறப்பதில் முனைப்பு காட்டுகிறது. மேலும், இது போன்ற திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் திருத்தி, நீர்த்துப்போகச் செய்கிறது.

இதில் தெரியும் மிகச்சிறிய ஒளிக்கீற்று, தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் அல்லது காட்டிவரும் ஆர்வம்.

அண்மையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆண்டுவிழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலநிலை மாற்றத்தை இந்த அரசு மானுடகுலத்துக்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்னையாகக் கருதுவதாகத் தெரிவித்திருந்தார். பல மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு அரசு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் தகவமைத்துக் கொள்ளவும் நமது மாநிலத்துக்கென, சிறப்பான காலநிலை மாற்றச் செயல் திட்டத்தையும் சட்டத்தையும் உருவாக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரும் சமூகநீதியின் ஓர் அங்கமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு