மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 44 - கீழ்வெண்மணி: நெருப்பில் மலர்ந்த உரிமைக்குரல்!

கீழ்வெண்மணி
பிரீமியம் ஸ்டோரி
News
கீழ்வெண்மணி

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில், காவிரியின் நீர் பாயும் நிலமெல்லாம் முப்போகம் பொன்விளையும்.

நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. நெருப்பை கவனித்துப் பார்த்தால், அதற்குள் ஒரு குடிசை தெரிகிறது. தீயைக் கொஞ்சம் நெருங்கினால் மனிதர்களின் கதறலும் கூப்பாடும் கேட்கின்றன. ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்கிற அந்த அவலக் குரல்கள் நெருப்பின் ஜுவாலைகளைக் கடந்து மேலெழுகின்றன. குடிசையின் கதவு வெளியிலிருந்து தாழிடப்பட்டிருக்கிறது. அதை உடைத்துக்கொண்டு சிலர் தப்பிக்க முயல்கிறார்கள். ஆனால், பெரிய பெரிய தடிகளைக்கொண்டு அவர்களை அடித்து உள்ளேயே தள்ளுகிறது ஒரு கூட்டம். அந்தக் குடிசையைக் கொளுத்தியவர்கள் வெளியே நிற்கிறார்கள். தீக்குள்ளிருந்து எழும் அழுகுரலுக்கு எவரும் உதவிடாதவாறு அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். நெருப்பின் பிழம்புகள் பத்து ஊர்களுக்குத் தெரியும் நேரம் செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால், அங்கே சாம்பல் குவியலைப் பார்க்கவே காவல்துறையும், அரசு அதிகாரிகளும், தீயணைப்புப்படையினரும் வருகிறார்கள். அங்கிருந்து எடுத்து வீதியில் கிடத்தப்பட்ட 44 உடல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 14 பேர். அவர்களில் ஒரு தாய், தன் குழந்தையை மார்போடு இறுக அணைத்தபடி கருகிக் கிடக்கிறாள். அந்தக் குழந்தை, தன் தாயின் மார்பில் வாய் வைத்தபடி கருகி உறைந்திருக்கிறது. யார் இவர்கள்... அப்படி என்னதான் செய்தார்கள்... ஏன் இத்தனை கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்?

தஞ்சை எனும் நெற்களஞ்சியம்!

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில், காவிரியின் நீர் பாயும் நிலமெல்லாம் முப்போகம் பொன்விளையும். இந்த வேளாண்மைக்கு விதைநெல்லும், நீரும், உரமும் மட்டும் போதுமானதா என்றால், இல்லை. தொழிலாளர்களின் வியர்வை நிலத்தில் விழாமல், அவர்களின் பாதங்கள் சேற்றில் இறங்காமல், இந்த பூமியில் எந்த விளைச்சலும் சாத்தியமில்லை. எங்கு திரும்பினாலும் மனதைக் குளிர்விக்கும் பச்சை நிலமான தஞ்சைத் தரணியில், விவசாயக் கூலித்தொழிலில் உழன்றுகிடந்த தொழிலாளர்கள் உண்மையில் கொத்தடிமைகளாக இருந்தார்கள். பண்ணையார்கள், மிராசுதார்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட காளைமாடுகளுக்குக் கிடைத்த உணவும் பரிவும்கூட உழைத்துக் கிடந்த மனிதர்களுக்குக் கிடைக்கவில்லை. அரை வயிற்றுக் கஞ்சியுடன் வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என உயிரைக் கையில் பிடித்துக் காத்திருந்தார்கள். பசி, அதைவிடக் கொடுமையான தண்டனைகள்... இரண்டுக்குமிடையில் தத்தளித்தது அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

இந்த நிலையில், தஞ்சைப் பகுதி முழுவதிலும் மணலூர் மணியம்மையும், பி.சீனிவாசராவும் ஊர் ஊராகச் சென்று தொழிலாளர் உரிமைகள் குறித்து விரிவாகப் பேசினார்கள். பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டினார்கள். பண்ணையார்களுடைய அடியாட்களின் கண்களில் படாதவாறு நள்ளிரவில் சென்று கூட்டங்கள் நடத்தினார்கள், கொடி ஏற்றினார்கள். தஞ்சைப் பகுதியிலிருந்து விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வில் முதன்முறையாக நம்பிக்கையின் கீற்று அரும்புவிட்டது.

‘ஒருவர் ஒரு தொழிலாளியைப் பணியில் அமர்த்தும்போது, அவரது உழைப்பை, ஆற்றலைத் தன் தொழிலுக்காக விலைக்கு வாங்குகிறார். அந்த உழைப்புக்கு ஈடாகப் பொருள், பணம் என ஏதோ ஒன்றை ஊதியமாகத் தருகிறார். அந்த அடிப்படையில், நாங்கள் உங்களுக்குத் தரும் உழைப்புக்குத் தக்க கூலியைத் தாருங்கள்’ என்கிற உரிமைக்குரல் தஞ்சைத் தரணி முழுவதிலும் எதிரொலித்தது.

போராட்டங்களின் கதை - 44 - கீழ்வெண்மணி: நெருப்பில் மலர்ந்த உரிமைக்குரல்!

உரிமைக்குரலின் எதிரொலி!

அதிகார போதையில் மிதந்த மிராசுகளுக்கு, பண்ணையார்களுக்கு இந்த உரிமைக்குரல் பெரும் எரிச்சலைக் கொடுத்தது. ‘காலம் காலமாக ஒதுங்கி, ஒடுங்கி, பயந்து, இருக்குமிடம் தெரியாமல் இருந்த தலித் தொழிலாளர்கள்... நம்மைப் பார்த்து இன்று கேள்வி கேட்கிறார்களே?’ என்று அவர்கள் ஆத்திரமடைந்தார்கள். அரசு என்றைக்குமே அதிகாரத்தின் பக்கம்தானே நிற்கும்... விவசாயத் தொழிலாளர்களின் குரலை மட்டுப்படுத்த, போராட்டங்களை ஒடுக்க ‘கிசான் போலீஸ்’ என்று ஒரு பிரிவை அரசாங்கம் தொடங்கியது. கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற நிலச்சுவான்தாரின் தலைமையில் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ தொடங்கப்பட்டது.

இந்த உரிமைக்குரல்களை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இல்லையேல், இது இந்தப் பகுதியின் சமனை, ஒழுங்கைக் குலைத்துவிடும் என முழுவீச்சில் களத்தில் இறங்கினார்கள். தலித் பெண்கள் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். தலித் மாணவர்கள் ஒருவர்கூட பள்ளிக்கூடத்தின் வாசல்படிகளை மிதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள். தலித் தொழிலாளர்களின்மீது கடுமையான ஒடுக்குமுறை ஏவப்பட்டது. பண்ணையார்கள் தங்களின் துப்பாக்கிகளுடன், அடியாட்களுடன், தடிகளுடன் வலம்வரத் தொடங்கினார்கள்.

கூலியாக, கூடுதலாக அரைப்படி நெல் கேட்டார்கள் விவசாயத் தொழிலாளர்கள். ‘உங்களுக்கு இனி வேலையில்லை; நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’ என வெளியூரிலிருந்து தொழிலாளர்களை இறக்கி விவசாய வேலைகளைச் செய்யவைத்தார்கள் பண்ணையார்கள். அப்போது கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதற்கு, தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் சென்றிருப்பதை அறிந்துகொண்டு, இதுதான் தக்க நேரம் என முடிவுசெய்தார்கள். `இனி இந்தத் தஞ்சைப் பகுதி முழுவதிலும் ஒரே கொடிதான் பறக்க வேண்டும். அது நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் கொடி’ என முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு கிராமமாகச் சென்று செங்கொடியை இறக்கக் கட்டளையிடுகிறார்கள். `வெண்மணியிலுள்ள செங்கொடியை இறக்கினால், நீங்கள் கேட்கும் அரைப்படி நெல்லைச் சேர்த்துத் தருகிறோம்’ என்று பேரம் பேசுகிறார்கள். `இது எங்கள் கொடி. எங்கள் உரிமையின் சின்னம். இந்தக் கொடியை நாங்கள் ஒருபோதும் இறக்க மாட்டோம்’ என்று தொழிலாளர்கள் உறுதியுடன் இருந்தார்கள்.

அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீல நிற போலீஸ் வேன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். ராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டிப் போக முடியாது என்பதால், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றவர்கள் அனைவரும் ராமையாவின் குடிசைக்குள் நுழைந்தனர். `ஓர் இடத்தில் மறைந்திருக்கிறோம், நம்மை விட்டுவிடுவார்கள்’ என்றுதான் அவர்கள் நினைத்திருப்பார்கள். குடிசையைக் கொளுத்துவார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்தக் குடிசை கொளுத்தப்பட்டது.

1968, டிசம்பர் 25 இரவு, கீழ்வெண்மணியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவங்களை அறிந்ததும் கேரளாவில் நடைபெற்ற மாநாட்டிலிருந்த ஜோதிபாசு, பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் விரைந்து வருகிறார்கள். தமிழகத்தைக் கடந்து, உலகம் முழுவதுமுள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியது இந்தச் செய்தி. மதுரையிலிருந்து கீழ்வெண்மணி சென்ற தோழர் மாயாண்டி பாரதி அங்கிருந்து 44 பேரின் சாம்பலையும் ஒரு போராட்டத்தின், ஒடுக்குமுறையின் சாட்சியமாகத் தன்னுடன் அள்ளிச் சென்றார்.

கீழ்வெண்மணி தமிழக வரலாற்றின் தழும்பாக, ஆறாவடுவாக இன்றைக்கும் மக்களால் நினைவுகூரப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி, லட்சக்கணக்கான மக்கள் கீழ்வெண்மணிக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். அங்கிருந்து மேலும் உரமேறியவர்களாகத் திரும்புகிறார்கள். தமிழகத்தின் படைப்பாளிகளையும் கீழ்வெண்மணி கடுமையாக பாதித்தது. ராஜம் கிருஷ்ணனின் ‘பாதையில் பதிந்த அடிகள்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’, சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’, அப்பணசாமியின் ‘தென்பறை முதல் வெண்மணி வரை’, ச.சுபாஷ் சந்திரபோஸின் ‘வாட்டாக்குடி இரணியன்’ உள்ளிட்ட நூல்கள் நீங்கள் அவசியம் வாசிக்கவேண்டியவை. தமிழில் வெளிவந்த ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’, ‘இரணியன்’ ஆகிய திரைப்படங்களை வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முறை பாருங்கள். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தில் கீழ்வெண்மணி சம்பவம் மிகத் துல்லியமாகக் காட்சி வடிவம் பெற்றிருக்கிறது.

சரி, அப்பாவிக் கூலித்தொழிலாளர்கள் 44 பேரை உயிருடன் எரித்துக் கொல்லும் வன்மம் எங்கிருந்து ‘அவர்களுக்கு’ வந்தது?

`நான் தலையில் பிறந்தவன், நீ காலில் பிறந்தவன்; நான் ஆண்டான், நீ அடிமை; நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்கிற முட்டாள்தனம்தான் இந்த வெறிக்கு அடிப்படைக் காரணம். ஊழல்களை, முறைகேடுகளைச் சட்டம் போட்டு ஒழித்துவிடலாம். ஆனால் இந்த முட்டாள்தனமான மனநிலையை எதைக்கொண்டு ஒழிப்பது... தன்னை மேலானவனாக நினைப்பதும், தனக்குக் கீழே சிலர் இருப்பது தனக்குச் சுகத்தையும் அதிகாரத்தையும் தருவதாக நினைக்கும் எல்லோருமே மனநோயாளிகள்தானே... இந்த மனநோயை எப்படி ஒழிப்பது?

நாம் எத்தனை கொடூரமான ஒரு சமூகமாக இருந்தோம், இன்றும் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்தான் மாற்றம் சாத்தியம். நாம் நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டால்தான் மனிதனை, மனிதனாக மதிக்கும் புதிய உலகுக்குள் காலடி எடுத்துவைக்க இயலும். சாதியத்தின் ஏதோவோர் அடுக்கில் நாம் இனியும் குளிர்காய்வோம் எனில், போகும் போகும் ஐயோவென்றுதான் இந்த உலகம் போகும். சுயமரியாதையும் சமூகநீதியுமே வருங்காலத்துக்கான பாதை. அதுவே மானுடத்தை மீட்டெடுக்கும் சூத்திரம்!

(முற்றும்)

போராட்டங்களின் கதை - 44 - கீழ்வெண்மணி: நெருப்பில் மலர்ந்த உரிமைக்குரல்!

ராமய்யாவின் குடிசை!

1968-ம் ஆண்டு நடந்த கீழ்வெண்மணிப் படுகொலைக்கான சமூக, பொருளாதாரக் காரணங்கள், வரலாற்றுப் பின்புலங்கள், நிலவுடைமையாளர்கள் செய்த படுகொலை, அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்குகள், அந்த வழக்குகளின் பின்விளைவுகள் என, கீழ்வெண்மணி என்றால் என்னவென்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான முழுமையான ஆவணம் இந்தப் படம். கீழ்வெண்மணியில் இந்த ஒடுக்குமுறைகளை நேரடியாக அனுபவித்த செல்வ கணபதியும் செல்வராஜும் அவற்றை விவரிக்கையில் மனம் பதைபதைக்கிறது. துப்பாக்கிக் குண்டடிபட்டு இன்றும் குண்டுகளை உடலில் சுமந்து நடமாடும் கோ.பழனிவேல் அவர்கள் இந்தச் சம்பவத்தைத் தனக்கே உரிய வார்த்தைகளில் சொல்லும்போது கேட்கக் கொஞ்சம் மனதிடம் வேண்டும். இத்தனை பெரும் கொடுமைகளைச் செய்தவர்கள் எப்படி காவல்துறையால் பாதுகாக்கப்பட்டார்கள், நீதிமன்றங்கள் எப்படி அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது என்பதைக் கேட்கையில், மனம் அவமானத்தில் கூனிக்குறுகும். இந்த ஆவணப்படத்தை இயக்கிய பாரதி கிருஷ்ணகுமார், தமிழகம் முழுவதும் பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, தனது தீவிர ஈடுபாட்டின் விளைவாக கீழ்வெண்மணியிலுள்ள ராமையாவின் குடிசைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்!