Published:Updated:

தம்பி டீ இன்னும் வரல! - நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்!

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்

பாதியில் நிற்கும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்...

தம்பி டீ இன்னும் வரல! - நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்!

பாதியில் நிற்கும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்...

Published:Updated:
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்
‘நிவர்’, ‘புரெவி’ என அடுத்தடுத்த புயல்கள் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. புறநகர் உட்பட பல்வேறு இடங்களில் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் பழுதடைந்த சாலைகளால் அல்லோலகல்லோலப்படுகிறார்கள் மக்கள். கடும் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது தலைநகரம். இவற்றுக்கெல்லாம் உச்சபட்சக் கொடுமையாக டூ வீலரில் சென்ற தாயும் மகளும் மதுரவாயலில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கின்றனர். இப்படியான நிலையில்தான், ‘‘மதுரவாயல் டு துறைமுகம் வரையிலான பறக்கும் பாலம் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், நகரின் போக்குவரத்து நெருக்கடியைப் பெருமளவில் சமாளித்திருக்கலாம்’’ என்று பொருமுகிறார்கள் பொதுமக்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத்துக்கு, தற்போதிருக்கும் சாலை மார்க்கங்கள் போதவில்லை. இதனால், சரக்கு லாரிகள் சென்றுவருவதில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், நேர விரயமும் ஏற்படுகின்றன. எனவே, எளிதான போக்குவரத்து வசதிக்காக 2008-ம் ஆண்டு ‘மதுரவாயல் டு துறைமுகம்’ வரையிலான பறக்கும் சாலைத் திட்டப் பணிகளை 1,815 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பித்தது அன்றைய தி.மு.க அரசு.

முதற்கட்டமாக, சென்னை துறைமுகம் தொடங்கி கோயம்பேடு வரை 19 கி.மீ தூரத்துக்குக் கூவத்தின் கரையோரமும், மதுரவாயல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவிலுமாக 500 கோடி ரூபாய் செலவில் தூண்கள் கட்டி முடிக்கப்பட்டன. அடுத்தகட்டமாக, இந்தத் தூண்களின் மேல் பாலம் கட்டி முடிக்கப்பட வேண்டும். 2011-ம் ஆண்டில் ஆட்சி மாறியது; அ.தி.மு.க அரியணை ஏறியது. மக்கள் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டது அநாகரிக அரசியல். ‘கூவம் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும்; மழைக் காலத்தில் வெள்ள அபாயம் ஏற்படும்’ என்றெல்லாம் அ.தி.மு.க அரசு காரணங்கள் சொன்னதால், பறக்கும் சாலைத் திட்டம் படுத்தேபோனது.

12 ஆண்டுகளாகக் கூவம் கரையோரத்திலும் நகரின் நடுவிலுமாக நினைவுத்தூண்களாக நின்றுகொண்டிருக்கின்றன கான்கிரீட் தூண்கள்.

தம்பி டீ இன்னும் வரல! -  நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்!

முன்னாள் மேயரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் இந்தத் திட்டம் குறித்துப் பேசும்போது, ‘‘2013-ம் ஆண்டிலேயே இந்தத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், `இந்தியாவிலேயே மிக நீண்ட பாலத்தைக் கொண்டு வந்தவர்’ என்ற பெருமை தி.மு.க ஆட்சிக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற குறுகிய எண்ணத்தில் திட்டத்தையே கிடப்பில் போட்டுவிட்டது அ.தி.மு.க அரசு.

பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது, ‘இந்தத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால், சென்னை துறைமுகத்தை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுவிடும்’ என்று எச்சரித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஓ.பன்னீர்செல்வமும் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து 3,004 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்போவதாக அறிவித்தார். அதன் பிறகு முதல்வர் பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிசாமியும் ‘திட்டம் தொடரும்’ என்றார். ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை.

தம்பி டீ இன்னும் வரல! -  நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்!

இந்தநிலையில்தான், கடந்த மாதம் சென்னை வந்திருந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்த முதல்வர், ‘5,000 கோடி ரூபாய் செலவில், எட்டுவழிச் சாலைகளாக புதிய மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும்’ என்று இதே மதுரவாயல் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அப்படியென்றால், ஏற்கெனவே சொன்ன 3,004 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு என்ன ஆனது... இப்போது 5,000 கோடி ரூபாய் செலவில் திட்டத்தைத் தொடங்குவதற்கான ‘கருத்துரு’வை எப்போது தயார் செய்யப்போகிறீர்கள்? ஏற்கெனவே மக்களின் வரிப்பணத்தில் 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் தூண்களின் நிலை என்னவாகும்? இப்படி எந்தக் கேள்விக்கும் அ.தி.மு.க அரசிடம் பதிலில்லை’’ என்றார் கோபத்துடன்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம். ‘‘2008-ம் ஆண்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அப்போதே இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டி.ஆர்.பாலு அமைச்சர் பதவியை இழந்ததும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் அக்கறை காட்டவில்லை.

தம்பி டீ இன்னும் வரல! -  நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்!

2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திட்டத்தில் இருந்த குறைகளைச் சரிசெய்து, திட்டத்துக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. 19 கி.மீ தூரமுள்ள மேம்பாலப் பகுதியைச் சேர்ந்த மக்களும் எளிதில் பாலத்தில் பயணிப்பதற்கு வசதியாக, திட்டத்தில் அணுகுசாலைகள் சேர்க்கப்பட்டன. இறுதியாக, தற்போது மேம்பாலத்தை எட்டுவழிச் சாலையாக விரிவுபடுத்துவதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில், தங்களால்தான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக தி.மு.க பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிவருவதுடன், போராட்டமும் நடத்திக்கொண்டிருக்கிறது’’ என்றார்.

ஆட்சிகள் மாறலாம்... அரசியல் காட்சிகளும் மாறலாம். ஒருபோதும் நின்றுவிடக் கூடாது நாட்டின் வளர்ச்சிப் பணிகள். எதிர்வரும் ஆட்சியாளர்கள் மனதில்கொள்ள வேண்டிய திட்டம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism