சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

ஈவிரக்கமற்ற மருத்துவ பணியாளர்கள்... இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான சோகம்!

கர்ப்பிணி மரணம்
பிரீமியம் ஸ்டோரி
News
கர்ப்பிணி மரணம்

ஸ்பாட் ரிப்போர்ட்

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்ட அரசு மருத்துவமனையில், கர்ப்பிணியிடம் ஆதார் அட்டை, ‘தாய்’ அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்து வீட்டுக்கே திருப்பி அனுப்பியதால், பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. மனதைப் பதறவைக்கும் இந்தச் சோக சம்பவத்தின் பின்னணியை விசாரிக்க ஜூ.வி குழு நேரடியாகக் களத்துக்குச் சென்றது!

கர்நாடக மாநிலம், பெங்களூரு கிழக்குப் பகுதியில் வசித்துவந்த தம்பதி ஜெய்சங்கர் - கஸ்தூரி. இருவரும் தமிழகத்திலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடம்பூர், குலதீபமங்கலம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், கணவரின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 6 வயது மகள் சங்கரியுடன் வீட்டைவிட்டு வெளியேறினார் கஸ்தூரி. அதன் பிறகு, பெங்களூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் இருக்கும் துமகூரு, பாரதி நகரில் குடியேறி யிருக்கிறார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்று பிழைப்பை ஓட்டியிருக்கிறார். கர்ப்பிணியான கஸ்தூரிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த கவிதா, சாரதா, சரோஜாம்மா ஆகியோர் உதவியாக இருந்துவந்துள்ளனர்.

ஈவிரக்கமற்ற மருத்துவ பணியாளர்கள்... இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான சோகம்!

இந்த நிலையில், கடந்த 2-11-2022 அன்று, இரவு 8 மணியளவில் கஸ்தூரிக்குப் பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை ஆட்டோவில் துமகூரு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சரோஜாம்மா. கர்நாடகத்தில் பிரசவம் பார்க்க, மாநில அரசால் வழங்கப்படும் மகப்பேறு சுகாதார அட்டை (தாய் கார்டு), ஆதார் அட்டை ஆகியவை கட்டாயம் தேவையாம். அந்த அட்டைகள் கஸ்தூரியிடம் இல்லாததால் பிரசவம் பார்க்க டாக்டர் உஷாவும், மூன்று நர்ஸுகளும் மறுத்துள்ளனர். மேலும், ‘பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில்தான் ஆதார் அட்டை, தாய் அட்டை இல்லாதவர்களுக்கும் பிரசவம் பார்ப்பார்கள்’ என்று கூறி கஸ்தூரியை அங்கு போகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘பெங்களூருக்கு அழைத்துச் செல்ல எங்களிடம் பணம் இல்லை. தயவுசெய்து எங்களுக்கு இரக்கம் காட்டி, பிரசவம் பாருங்கள்’ என்று சரோஜாம்மா கதறியிருக்கிறார். ஆனாலும் மருத்துவப் பணியாளர்கள் மனமிறங்கவில்லை. வேறு வழியின்றி கஸ்தூரியைத் திரும்பவும் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார் சரோஜாம்மா.

வீட்டுக்கு வந்த கஸ்தூரி, ‘இன்றைக்கு ஒரு இரவு நான் வலியைப் பொறுத்துக்கொள்கிறேன். நீங்கள் என் மகள் சங்கரியை மட்டும் உங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள். பயப்படுவாள். நாம் நாளைக்கு வேறு மருத்துவமனைக்கு முயற்சி செய்யலாம்’’ என்று சரோஜாம்மாவிடம் கூறியிருக்கிறார். சங்கரியை அழைத்துக்கொண்டு சரோஜாம்மா அவரது வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், நள்ளிரவில் கஸ்தூரிக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. துணைக்கு யாரும் இல்லாமல், அதிக ரத்தப்போக்கால் மூர்ச்சையான கஸ்தூரி, இரண்டாவது ஆண் குழந்தையின் பாதிப் பிரசவத்தின்போதே உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, அந்த இரண்டு சிசுக்களும் சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றன. மறுநாள் காலையில் மூன்று உயிரற்ற உடல்களைக் கண்ட சரோஜாம்மா செய்வதறியாமல் கதறி அழுதிருக்கிறார்.

ஈவிரக்கமற்ற மருத்துவ பணியாளர்கள்... இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான சோகம்!
ஈவிரக்கமற்ற மருத்துவ பணியாளர்கள்... இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான சோகம்!

மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால், மூன்று உயிர்கள் பறிபோனதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் துமகூரு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து டாக்டர் உஷாவைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்த மருத்துவத்துறை, நர்ஸ்கள் யசோதா, சவீதா, திவ்யபாரதி ஆகிய மூவரையும் பணிநீக்கம் செய்திருக்கிறது.

கஸ்தூரியைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற சரோஜாம்மாவை நேரில் சந்தித்துப் பேசினோம். ‘‘புதன்கிழமை இரவு கஸ்தூரிக்கு வலியெடுத்தது. தெரிந்தவர்களிடமிருந்து 350 ரூபாயைக் கடனாக வாங்கிக்கொண்டு கஸ்தூரியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆட்டோவில் கஸ்தூரியை அழைத்துச் செல்லும்போதே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதனால், ‘ஏற்கெனவே பனிக்குடம் உடைந்துவிட்டதால் ரொம்ப நேரம் தாங்காது. அதனால் முதலில் பிரசவம் பாருங்கள், மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று மருத்துவர்களிடம் கெஞ்சினேன்.

சரோஜாம்மா
சரோஜாம்மா

ஆனால், ‘ஆதார், தாய் அட்டை இல்லாமல் இங்கு சிகிச்சை பார்க்க முடியாது’ என்று கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவே மறுத்துவிட்டனர். ‘ஆட்டோவுக்கே கடன் வாங்கித்தான் வந்துசேர்ந்தோம். அப்படியிருக்கும்போது, இந்த நிலைமையில் பெங்களூருக்கு எப்படி அழைத்துச் செல்வது?’ என்று மன்றாடினேன். ஆனால், ‘அதெல்லாம் உங்க பிரச்னை’ என்று கைவிரித்துவிட்டார்கள். அன்று மழை வேறு தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. ‘பெங்களூருக்கு எப்படியாவது அழைத்துப் போகிறேன். வா போகலாம்’ என்று கஸ்தூரியிடம் சொன்னேன். அதற்கு அவள் மறுத்துவிட்டதால், வேறு வழியின்றித் திரும்பவும் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டேன். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பணம் தேவைப்படும். காலையில் எப்படியாவது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பணத்தைப் புரட்டி, தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிடலாம் என்று நினைத்தேன். அதற்குள் இப்படி மூன்று உயிர்களும் போய், இந்த 6 வயதுப் பிள்ளை சங்கரியும் அநாதையாக நிற்கும்படி ஆகிவிட்டது” என்றார் கண்ணீர் பொங்க.

குடிசைப் பகுதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினரான சாரதாம்மா நம்மிடம், ‘‘மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டிய மருத்துவர்களே இப்படி ஈவு இரக்கமின்றி நடந்துகொண்டதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்த நர்ஸுகளாவது டாக்டரிடம் கூறி பிரசவம் பார்க்குமாறு கூறியிருந்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆதார், தாய் அட்டை இல்லாமல் பிரசவம் பார்க்கும்போது இங்குள்ள மருத்துவமனையில் அதே சிகிச்சையைத் தர முடியாதா... அங்கு ஒரு சட்டம், இங்கு ஒரு சட்டமா?’’ என்றார் குமுறலாக.

சாரதாம்மா
சாரதாம்மா

கஸ்தூரிக்கு உதவியாக இருந்துவந்த கவிதா நம்மிடம் பேசுகையில், ‘‘பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுவந்த கஸ்தூரிக்கும், அவரின் மகள் சங்கரிக்கும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உணவு கொடுத்துக் காப்பாற்றிவந்தோம். இப்படி ஆகும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை’’ என்றார் வேதனையுடன்.

இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் முதல்வரும், ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி, ‘‘கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க-வின் இருண்ட ஆட்சிக் காலத்தையே இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது. அநாதையான கஸ்தூரியின் குழந்தைக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டுவருகிறது. இது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலத்துக்குத் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஹெச்.டி.குமாரசாமி
ஹெச்.டி.குமாரசாமி

இந்த விவகாரம் குறித்து துமகூரு மருத்துவமனையில் விசாரணை நடத்திவிட்டுச் சென்றிருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது, ‘‘இந்த நிகழ்வுக்குப் பிறகு ஆதார் அட்டை, தாய் அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நோயாளிகளின் அவசரநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என அனைத்து அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி, தனிச் சட்டம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட டாக்டர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் குற்ற வழக்கு தொடர்வது குறித்து, விசாரணைக்குழுவால் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தாயையும் தந்தையையும் இழந்திருக்கும் கஸ்தூரியின் 6 வயது மகள் சங்கரிக்கு அவள் விரும்பும் வரையிலும் இலவசக் கல்வி அளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மகளிர், குழந்தைகள் நலத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதி சங்கரியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அந்தக் குழந்தையின் வங்கிக் கணக்கில் நிரந்தர சேமிப்புக் கணக்கில் நானும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செலுத்துவேன்’’ என்றார்.

சுதாகர்
சுதாகர்

இந்த நிலையில், பெங்களூரில் வசித்துவரும் கஸ்தூரியின் கணவரின் உறவினர்கள் துமகூருக்கு வந்து கஸ்தூரியின் உடலையும் உயிரிழந்த சிசுக்களின் உடல்களையும் எரியூட்டியிருக்கிறார்கள். தற்போது, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறுமி சங்கரியை தங்களுடன் அழைத்துச் செல்லவும் உறவினர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், ‘முழுமையான விசாரணை நடத்திய பிறகே உறவினர்களுடன் குழந்தையை அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று மாவட்ட சுகாதார அலுவலர் மஞ்சுநாத் நம்மிடம் தெரிவித்தார்.

மனிதநேயத்தையும் மருத்துவப் படிப்பில், பாடமாகச் சேர்க்க வேண்டும்போல!