Published:Updated:

உக்ரைனிலிருந்து மீட்கப்படுவதில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை!

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

கொந்தளிக்கும் தமிழக மாணவர்கள்...

உக்ரைனிலிருந்து மீட்கப்படுவதில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை!

கொந்தளிக்கும் தமிழக மாணவர்கள்...

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

உக்ரைனிலிருந்து மாணவர்களை அழைத்துவருவதில், வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் நடைபெற்றுவரும் உக்ரைனில் தமிழக மாணவர்கள் உட்பட பல ஆயிரம் இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். சொந்த நாட்டுக்கு வர முடியாமல் தவிக்கும் அவர்களில் பெரும்பாலானோர், உணவும் தங்குமிடமும் கிடைக்காமல் பரிதவிக்கிறார்கள். அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில்தான் மீட்கப்படுகிறவர்களில் வட இந்திய மாணவர்கள், தென்னிந்திய மாணவர்கள் என்று பாரபட்சம் காட்டப்படுவதாக, உக்ரைனிலிருந்து தமிழகம் வந்த மாணவர்கள் குமுறியிருக்கிறார்கள்.

உக்ரைனிலிருந்து தமிழகம் வந்த மாணவர்களில் சிலர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்கள். அப்போது, “எங்களை இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல விமானம் புறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்பட்டது. நாங்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே சென்றுவிட்டோம். காலையில் விமானம் காலியாக இருந்தது. பின்னர், திடீரென அங்கு வட இந்திய மாணவர்கள் வந்தார்கள். உடனே, பயணிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தென்னிந்திய மாணவர்களின் பெயர்களை அடித்துவிட்டு, வட இந்திய மாணவர்களின் பெயர்களை எழுதினார்கள். வட இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது’’ என்று ஒரு மாணவர் ஆதங்கப்பட்டார்.

உக்ரைனிலிருந்து மீட்கப்படுவதில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை!

இன்னொரு மாணவர், ‘‘கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள், மார்ச் 2-ம் தேதி விமானத்தில் புறப்படுவதற்கான திட்டம் இருந்தது. ஆனால், திடீரென அவர்களின் பயணம் ரத்துசெய்யப்பட்டது. அவர்கள் சென்றிருக்கவேண்டிய விமானத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை’’ என்றவர் தொடர்ந்து, ‘‘கார்கிவ் பகுதியிலிருந்து சுமார் 200 தமிழக மாணவர்கள் இந்தியத் தூதரகத்துக்குச் சென்றார்கள். குண்டுவீச்சுத் தாக்குதல் நடக்கிறது என்று கூறி, தூதரக ஊழியர்கள் உள்ளே பதுங்கிவிட்டார்கள். அங்கு சென்ற மாணவர்களுக்கு உதவிசெய்ய யாருமில்லை. பிறகு, உக்ரைனின் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது, அங்கு அவர்களுக்கு உணவையும் தங்குமிடத்தையும் உக்ரைன் மக்கள் வழங்கினார்கள். இதை யார் செய்திருக்க வேண்டும்?’’ என்று குமுறினார். இவர்களின் ஆதங்கத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், அங்கிருந்து பல வீடியோக்களும் வெளியாகிவருகின்றன.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்டுவருவதற்கு ஒரு குழுவைத் தமிழக அரசு அனுப்ப முடிவுசெய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம்பெற்று டெல்லிக்குச் சென்றனர்.

எம்.எம்.அப்துல்லா, நாராயணன் திருப்பதி
எம்.எம்.அப்துல்லா, நாராயணன் திருப்பதி

‘‘இந்திய மாணவர்களை மீட்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கும்போது, எதற்காக மாநில அரசின் சார்பாக ஒரு குழு?” என்ற கேள்வியை எம்.எம்.அப்துல்லாவிடம் முன்வைத்தோம். “எல்லாம் சரியாக நடந்தால், மாநில அரசு தனியாக இப்படி ஒரு குழுவை உருவாக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது. நமது மாணவர்கள் போர்ச்சூழலில் ஆதரவின்றி தவிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகம் திரும்பிய மாணவர்கள் வெளிப்படுத்திவரும் வேதனைகளைப் பார்த்துவிட்டுத்தான், மாநில அரசின் சார்பாக இப்படி ஒரு குழுவை உருவாக்கினார் தமிழக முதல்வர். நாங்கள் அங்கு செல்வதற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும். அது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம். அப்போது, ‘ஏற்கெனவே நான்கு மத்திய அமைச்சர்கள் அங்கு சென்று இந்திய மாணவர்களை மீட்பதற்கான பணிகளைச் செய்துவருகிறார்கள். அப்படியிருக்கும்போது, எம்.பி-க்களான நீங்கள் போய் என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு, ‘ஏழு பேர், எட்டுப் பேர் என்ற ரீதியில்தான் தமிழக மாணவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். மேலும், மாணவர்களுக்கான ஹெல்ப்லைனும் இந்தி மொழியில் இருக்கிறது’ என்று சொன்னோம். அதன் பிறகு, ஹெல்ப்லைனில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்தார்கள். இப்போது, தமிழக மாணவர்கள் அதிக அளவில் அழைத்துவரப்படுகிறார்கள். இதுவரை, சுமார் 1,500 பேர் வந்துவிட்டார்கள். மீதி 1,000 மாணவர்கள் வரவேண்டியிருக்கிறது. அவர்களையும் அழைத்துவரும் நடவடிக்கைகளை டெல்லியில் இருந்தவாறே வேகப்படுத்திவருகிறோம்” என்றார்.

மாணவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ‘‘மொழிரீதியாகவோ, பிராந்தியரீதியாகவோ மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது. நம் அதிகாரிகள் நிச்சயமாக அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். போர்ச்சூழலில் பல சிரமங்களை அனுபவித்துவிட்டு வரக்கூடிய நம் மாணவர்கள், பதற்றம் காரணமாக சற்று மிகைப்படுத்தி சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அங்கு என்ன நடந்தது என்று நமது தூதரக அதிகாரிகளிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். தூதரகத்தில் சொற்ப எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பார்கள். எனவே, அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ரஷ்யாவிடமும் உக்ரைனிடமும் இந்திய அரசு பேசியிருக்கிறது. போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். அதனால்தான், நம் மாணவர்களால் அந்த நாடுகளுக்குள் பிரச்னையின்றி நுழைய முடிந்தது. இந்தப் பிரச்னையில், மத்திய அரசால் மட்டுமே அதிகாரபூர்வமான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தமிழக அரசு, மத்திய அரசுடன் ஒத்துழைப்பது மட்டுமே நமது மாணவர்களுக்குச் செய்கிற நன்மையாக இருக்கும்’’ என்றார்.

போர்ச்சூழலில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்கள், எந்த மொழியாக, இனமாக இருந்தாலும் பாரபட்சமின்றி மீட்கப்பட வேண்டும். போர்ச்சூழலிலும் காட்டப்படும் பாரபட்சம் என்பது சித்ரவதைக்குச் சமம்!