Published:Updated:

எகிறும் தனியார் பால் விலை... கோட்டைவிட்ட ஆவின்... ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவருமா அரசு?

ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின்

`இந்த விலையேற்றத்துக்கு மூலப்பொருள்கள் விலை உயர்வும், பால் கொள்முதல் விலை உயர்வும்தான் காரணம்’ என்கின்றன தனியார் பால் நிறுவனங்கள்.

எகிறும் தனியார் பால் விலை... கோட்டைவிட்ட ஆவின்... ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவருமா அரசு?

`இந்த விலையேற்றத்துக்கு மூலப்பொருள்கள் விலை உயர்வும், பால் கொள்முதல் விலை உயர்வும்தான் காரணம்’ என்கின்றன தனியார் பால் நிறுவனங்கள்.

Published:Updated:
ஆவின்
பிரீமியம் ஸ்டோரி
ஆவின்

ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக பால் விலையை உயர்த்தியிருக்கின்றன தனியார் பால் நிறுவனங்கள். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். பொய்யான காரணங்களைக் கூறி பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்திருக்கும் பால் முகவர்கள் சங்கத்தினர், `இதை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஹட்சன் நிறுவனம் தனது `ஆரோக்கியா’ பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. ஸ்ரீனிவாசா நிறுவனம் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. அடுத்தடுத்து டோட்லா உள்ளிட்ட சில தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எகிறும் தனியார் பால் விலை... கோட்டைவிட்ட ஆவின்... ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவருமா அரசு?

`இந்த விலையேற்றத்துக்கு மூலப்பொருள்கள் விலை உயர்வும், பால் கொள்முதல் விலை உயர்வும்தான் காரணம்’ என்கின்றன தனியார் பால் நிறுவனங்கள். ஆனால், “இது, அவர்கள் விலையை உயர்த்தும்போதெல்லாம் கூறும் வழக்கமான பொய்தான்” என அடியோடு மறுக்கிறார் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி. இது குறித்து மேலும் அவர் பேசியபோது,

``கொரோனாவுக்கு முன்பே 2020 ஜனவரி, மார்ச் மாதங்களில் இரண்டு முறை பால் விலையை 6 ரூபாய் வரைக்கும் உயர்த்தின தனியார் நிறுவனங்கள். மேலும், கொரோனா காலத்தில், ஊரடங்கைக் காரணம் காட்டி 32 ரூபாயாக இருந்த பால் கொள்முதல் விலையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துவிட்டன. லிட்டருக்கு வெறும் 18 ரூபாய்தான் கொடுத்தன. கொரோனாவுக்குப் பின்னர் நிலைமை சீரடையத் தொடங்கியதும் கொள்முதல் விலையை படிப்படியாக 28 ரூபாய் வரை உயர்த்தியிருக்கின்றன. ஆனாலும், கொள்முதல் விலை இன்னும் பழைய 32 ரூபாயைக்கூட எட்டவில்லை. அப்படியிருக்கும்போது, 2022 ஜனவரி, மே மாதங்களில் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரைக்கும், தயிர் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் வரைக்கும் உயர்த்தின. இந்த நிலையில், மூன்றாவது முறையாகத் தற்போது மீண்டும் தனியார் பால் நிறுவங்கள் 4 ரூபாய் வரை விலை உயர்த்தியிருக்கின்றன. இதேபோல மற்ற தனியார் நிறுவனங்களும் விலையேற்றம் செய்யும் முனைப்பில் இருக்கின்றன.

எகிறும் தனியார் பால் விலை... கோட்டைவிட்ட ஆவின்... ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவருமா அரசு?

இந்த விலை உயர்வு, டீக்கடைகள், உணவகங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். பால் சார்ந்த இதர பொருள்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, தனியார் நிறுவனங்களின் இது போன்ற தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில், `பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையம்’ ஒன்றை அமைக்க வேண்டும், அதற்கான அவசரச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும்” என்றார்.

நாசர்
நாசர்

`தனியாரின் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அரசின் ஆவின் நிறுவனத்துக்கு வருவார்கள்தானே, அரசுக்கு லாபம் கிடைக்குமல்லவா?’ என்று கேட்டோம். ``தமிழ்நாட்டில் நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் 2.25 கோடி லிட்டர் பாலில், தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் 38.26 லட்சம் லிட்டரை மட்டுமே கொள்முதல் செய்கிறது. அதாவது தினசரி பால் உற்பத்தி, விற்பனையில் ஆவின் வெறும் 17 சதவிகிதமும், தனியார் நிறுவனங்களே 83 சதவிகிதமும் பங்களிக்கின்றன. இதனால்தான், ஆவினைவிட தனியார் நிறுவனங்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. பால் விலையை தங்கள் இஷ்டம்போல விலை உயர்த்தியும்வருகின்றன. இந்த விலை உயர்வால் ஆவினுக்குக் கூடுதலாக வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ஆவின் நிறுவனம் ஆர்வம் காட்டுவதில்லை. விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியையும் எடுப்பதில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இந்தக் கோரிக்கை, குற்றச்சாட்டுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் பேசியபோது, ``ஆவின் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. முன்பைவிட விற்பனை கூடியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தனியார் பால் விலை உயர்வால், ஆவின் பால் விற்பனை மேலும் 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்திருக்கிறது. எங்களுக்குப் போதுமான அளவுக்கு பால் முகவர்கள், வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு பொதுசேவை செய்யும், ஒரு லாப நோக்கற்ற அரசு நிறுவனமாகத்தான் ஆவினைக் கொண்டுசெல்கிறோம். தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. அதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை; அவசரச் சட்டம், ஆணையம் எல்லாம் மத்திய அரசால்தான் கொண்டுவர முடியும்” என்றார்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

`தனியாருக்கு மத்திய அரசுதான் கட்டுப்பாடு விதிக்க முடியுமென்றால், குறைந்தபட்சம் அதை வலியுறுத்தவாவது செய்யலாமே மாநில அரசு’ என்கிறார்கள் பால் முகவர்கள்.