Published:Updated:

‘‘ஒரு கோடி வரைக்கும் செலவு பண்ணியிருக்கோம்!’’ ஆற்றுக்குள்ளே சாலை... அதிரடி காட்டிய ஆட்சியர்!

ஆற்றுக்குள்ளே சாலை
பிரீமியம் ஸ்டோரி
ஆற்றுக்குள்ளே சாலை

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

‘‘ஒரு கோடி வரைக்கும் செலவு பண்ணியிருக்கோம்!’’ ஆற்றுக்குள்ளே சாலை... அதிரடி காட்டிய ஆட்சியர்!

ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி

Published:Updated:
ஆற்றுக்குள்ளே சாலை
பிரீமியம் ஸ்டோரி
ஆற்றுக்குள்ளே சாலை

‘‘விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, எங்கள் ஆற்றுக்குள்ளே ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை ஒரு கம்பெனி சாலை அமைக்குது. ‘இதுக்கு அனுமதி வாங்க ஒரு கோடி ரூபாய் வரைக்கும் செலவு பண்ணியிருக்கோம். அதனால, எங்களை நீங்க தடுக்க முடியாது’னு அந்த கம்பெனிக்காரங்க திமிராப் பேசுறாங்க. ஜூ.வி-தான் இதைத் தட்டிக் கேட்கணும்’’ - கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திலிருக்கும் வடசேரிப் பகுதியிலிருந்து இப்படியொரு கோரிக்கைக் குரல் வரவே, களத்தில் இறங்கினோம்.

வடசேரி வழியாக `அரியாறு’ என்ற ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கிழக்குக் கரை வரை திருச்சி மாவட்டம். மேற்குக் கரையிலிருந்து கரூர் மாவட்ட எல்லை தொடங்கிவிடுகிறது. மேற்குக் கரை ஓரமாக, வடசேரி சாலையைவிட்டு ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தள்ளி, `அமர்சக்தி’ என்ற நிறுவனம் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தரையில் பதிக்கும் அலங்காரக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவருகிறது. ‘‘இந்த கம்பெனிக்குச் சென்றுவர ஏற்கெனவே பூவாய்பட்டி சாலைவழியாக ஒரு பிரதான சாலை இருக்கிறது. இந்த நிலையில், வடசேரி எல்லையில் அரியாற்றிலுள்ள பாலத்திலிருந்து ஆற்றை ஆக்கிரமித்து, ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க அந்த கம்பெனி முயல்கிறது. அந்த கம்பெனியின் ரியல் எஸ்டேட் மதிப்பை உயர்த்திக்கொள்வதற்காகவே இந்த முயற்சி’’ என்பதுதான் மக்களின் புகார். உடனே வடசேரிக்கு விரைந்தோம்.

‘‘ஒரு கோடி வரைக்கும் செலவு பண்ணியிருக்கோம்!’’
ஆற்றுக்குள்ளே சாலை...
அதிரடி காட்டிய ஆட்சியர்!

நம்மை எதிர்கொண்ட வடசேரியைச் சேர்ந்த இளைஞர் சக்திவேல், ‘‘திருச்சியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான அமர்சக்தி, தங்களோட கம்பெனிக்குத் தேவையான கட்டுமானப் பொருள்களை எங்க ஊர்ல தயாரிக்கிறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி, அரியாற்றின் மேற்குக் கரையையொட்டி விவசாய நிலம் வெச்சுருக்கிற 15 விவசாயிகளை இந்த கம்பெனி சார்பா பார்த்துப் பேசியிருக்காங்க. அவங்க நிலத்துக்குப் போக, அரியாற்றோட மேற்குக் கரையில சாலை அமைக்க, `நமக்கு நாமே’ திட்டத்துல அரசாங்கத்துக்கிட்ட அனுமதி கேட்கச் சொல்லி வலியுறுத்தியிருக்காங்க. விவசாயிகளோ அதற்கு மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.

அந்த முயற்சி எடுபடாததால, நேரடியா திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ‘விவசாய நிலத்துக்குப் போக சாலை’னு அனுமதி வாங்கியிருக்காங்க. அந்த அனுமதி கடிதத்தை வெச்சுக்கிட்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி அரியாற்றுக்குள் ரெண்டு ஜே.சி.பி இயந்திரங்கள், நாலு லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை நிரவி, சாலை அமைக்க முயற்சி பண்ணினாங்க. இதைப் பார்த்ததும் ஊர் மக்கள் அனைவரும் திரண்டுபோய்த் தடுத்தோம்.

ஆனா, கம்பெனியை கவனித்துவரும் கோபிங்கிறவர், ‘முறையா அனுமதி வாங்கியிருக்கிறோம்’னு பொதுப்பணித்துறை அனுமதி கொடுத்த கடித காப்பியைக் காட்டினார். பஞ்சாயத்து தலைவர்கிட்ட முறையிட்டும் பலனில்லை. கம்பெனி இருக்கும் இடம் வரை ஆத்துக்குள்ள மண்ணை நிரவி சாலை அமைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதனால், கடந்த 4-ம் தேதி குளித்தலை தாசில்தார் முரளிதரன் சாருக்கு போன் பண்ணி, இது குறித்து புகார் செஞ்சோம். அவர், எங்க பகுதி ஆர்.ஐ-யையும், வி.ஏ-ஓயையும் ஸ்பாட்டுக்கு அனுப்பினார். ‘பஞ்சாயத்துல அனுமதி வாங்கலை... ரெவின்யூவுல அனுமதி வாங்கலை. அதனால, வேலையை உடனே ஸ்டாப் பண்ணுங்க. அமைதிப் பேச்சுவார்த்தையில பேசித் தீர்த்துக்கலாம்’னு ஆர்.ஐ சொன்னார். மறுநாள் வடசேரி பஞ்சாயத்து அலுவலகத்துல கூட்டம் நடந்துச்சு” என்றார்.

அன்பழகன், சக்திவேல்
அன்பழகன், சக்திவேல்

தொடர்ந்து பேசிய வடிவேல் என்பவர், ‘‘அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சாலை அமைக்கும் பணியைக் கிடப்புல போட்டவங்க, ஆகஸ்ட் 18-ம் தேதி மறுபடியும் இயந்திரங்களைக் கொண்டுவந்து நிறுத்தி வேலையை ஆரம்பிச்சாங்க. சாலைக்குக் கீழே வடிகால் குழாய் அமைக்க ஏழு ராட்சத சிமென்ட் குழாய்களைக் கொண்டுவந்து போட்டாங்க. மறுபடியும் போய் தடுத்தோம். உடனே கம்பெனிக் காரங்க, ‘முறையா ஆர்டர் வாங்கி...’னு அதே காப்பியைக் காட்டி, பழைய பல்லவியையே பாடினாங்க. அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு போன் அடிச்சோம்’’ என்றார்கள்.

அமர்சக்தி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கச் சென்றபோது, எம்.டி அமரதனிடம் கான்ஃபரன்ஸ் கால் மூலம் பேசவைத்தார்கள். ‘‘பொதுப்பணித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கித்தான் அரியாற்றின் கரையில் சாலை அமைக்கிறோம். அது ஏற்கெனவே மக்கள் பாதையாக இருந்ததுதான். அங்குள்ள விவசாயிகள் பலரும் இந்தச் சாலை அமைக்க ஆதரவு தருகிறார்கள். சிலர்தான் அதை எதிர்க்கிறார்கள். நாங்கள் சாலை அமைப்பது ஆற்றின் கரையில்தான்’’ என்றார்.

வடிவேல்
வடிவேல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு ஸ்பாட்டிலிருந்தே தகவல் கொடுத்தோம். நாம் சொன்ன தகவல்களைக் கேட்டு கோபமானவர், ‘‘கரூர் எல்லையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வாங்காம அவங்க எப்படி சாலை அமைக்கலாம். உடனே, தாசில்தாரை அனுப்பி விசாரிக்கச் சொல்கிறேன்” என்றார்.

அடுத்த அரைமணி நேரத்தில், குளித்தலை தாசில்தார் முரளிதரன், படையோடு வடசேரிக்கு வந்தார். “யாரிடம் அனுமதி வாங்கி இந்தச் சாலையை அமைக்கிறீங்க?” என்று சத்தம் போட்டார். அமர்சக்தி கம்பெனி சார்பில் அங்கே வந்த கோபி, ‘ஆர்டர் வாங்கியிருக்கிறோம்’ என்று திருச்சி பொதுப்பணித்துறையிடம் வாங்கிய அனுமதிக் கடிதத்தைக் காட்டினார்.

அதைப் பார்த்துக் கோபப்பட்ட தாசில்தார், “விவசாயப் பயன்பாட்டுக்குனு சொல்லி, கம்பெனிக்கு ரோடு போடுறீங்க... ‘கரையில் சாலை அமைக்கிறோம்’னு அனுமதி வாங்கி, ஆத்துக்குள்ள சாலை போடுறீங்க.

கரூர் எல்லையில சாலை அமைக்க எங்ககிட்ட அனுமதி வாங்கினீங்களா?” என்று வெளுத்துவாங்கினார்.

அதோடு, “சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்தணும். ஒருநாள் டைம் தருகிறேன். அதற்குள், உங்க வாகனங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தணும். அப்படிச் செய்யலைன்னா, உங்க கம்பெனிக்கு சீல் வெச்சிடுவேன்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அமர்சக்தி கம்பெனி ஊழியர்கள், யார் யாருக்கோ போன் அடித்தார்கள். அதன் பிறகு, ‘வேலையை நிறுத்திக்கிறோம் சார்’ என்று சொன்னார்கள். இந்தத் தகவலை, தாசில்தார் முரளிதரன், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கவனத்துக்குக் கொண்டுபோனார். ஆனால், அதன் பிறகும் அமர்சக்தி கம்பெனி அந்தக் குழாய்களை அப்புறப்படுத்தவில்லை.

மறுநாளும் (ஆகஸ்ட் 20-ம் தேதி) ஆர்.ஐ நீதிராஜன் மற்றும் வடசேரி வி.ஏ.ஓ-வான அண்ணாதுரை சகிதமாக அங்கே சென்ற முரளிதரன், ‘இன்னுமா எடுக்கலை... உங்க கம்பெனிக்கு சீல்வெக்கட்டுமா?’ என்று எச்சரித்தார்.

இதற்கிடையில், இப்படிச் சாலை போட அமர்சக்தி கம்பெனிக்கு அனுமதி கொடுத்த திருச்சி பொதுப்பணித்துறை, அரியாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சரவணனுக்கு தாசில்தார் முரளிதரன் தகவல் அனுப்பினார். விரைந்து வந்த அவர், அமர்சக்தி நிறுவனம் அரியாற்றுக்குள் போட்டுள்ள சாலையைப் பார்வையிட்டார். பின்னர் தாசில்தாரிடம், ‘‘விவசாய வேலைக்கு என்று அனுமதி கேட்டார்கள். அதனால் கொடுத்தேன். உடனே, அந்த அனுமதியை ரத்து செய்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

22-ம் தேதி காலையில் மறுபடியும் அமர்சக்தி கம்பெனிக்குப் பேசிய தாசில்தார் முரளிதரன், ‘‘24-ம் தேதிக்குள் குழாய்களை எடுக்கலைன்னா, நாங்களே ஜே.சி.பி-யைவெச்சு அதை அப்புறப்படுத்துவோம். உங்க கம்பெனிக்கும் சீல் வைப்போம்’’ என்று கடுமையாக எச்சரித்தார்.

‘‘ஒரு கோடி வரைக்கும் செலவு பண்ணியிருக்கோம்!’’
ஆற்றுக்குள்ளே சாலை...
அதிரடி காட்டிய ஆட்சியர்!

அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலையே ஆற்றுக்குள் போட்டிருந்த ஏழு குழாய்களையும் மினி கிரேன் மூலம் அமர்சக்தி நிறுவனத்தினர் அப்புறப்படுத்தினர். இதனால், வடசேரி மக்கள் பெருமூச்சுவிட்டனர். இந்த நடவடிக்கையை எடுக்கக் காரணமான மாவட்ட ஆட்சியர் அன்பழகன், குளித்தலை தாசில்தார் முரளிதரன் மற்றும் ஜூனியர் விகடன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ‘‘இந்த விவகாரத்தை என்னிடம் கொண்டுவந்த ஜூ.வி-க்கு நன்றி. இனி அந்த கம்பெனி அங்கே சாலை அமைக்க முடியாது. எந்த ரூபத்தில் அதற்கு முயன்றாலும் அதைத் தடுத்து நிறுத்துவோம்” என்றார் உறுதி நிரம்பிய குரலில்!

-

படங்கள்: நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism