Published:Updated:

குற்றாலம்... தனியார் அருவிகளால் தடம் மாறும் தண்ணீர்!

தனியார் அருவி
பிரீமியம் ஸ்டோரி
தனியார் அருவி

குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஷாம்பூ, சோப்பு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

குற்றாலம்... தனியார் அருவிகளால் தடம் மாறும் தண்ணீர்!

குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஷாம்பூ, சோப்பு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

Published:Updated:
தனியார் அருவி
பிரீமியம் ஸ்டோரி
தனியார் அருவி

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மூலிகைக் காடுகளின் வழியாகப் பாய்ந்தோடிவரும் குற்றாலம் தண்ணீரைத் தடுத்து, செயற்கையாக அருவி அமைத்து பணம் பார்க்கும் சிலரால் தங்களின் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் குமுறுகிறார்கள், விவசாயிகள். அரசியல்வாதிகளின் துணையோடு நடக்கும் இந்தத் தனியார் அருவிகளின் அத்துமீறலைத் தடுக்கவேண்டிய அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘தென்னகத்தின் ஸ்பா’ என வர்ணிக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீஸன் அமோகமாக இருக்கும். எனவே, சுற்றுலாப்பயணிகளின் கூட்டமும் களைகட்டும். இந்த சீஸன் காலத்தில் வரக்கூடிய தண்ணீரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அதற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

குற்றாலம்... தனியார் அருவிகளால் தடம் மாறும் தண்ணீர்!
குற்றாலம்... தனியார் அருவிகளால் தடம் மாறும் தண்ணீர்!

இது குறித்துப் பேசுகிற அப்பகுதி விவசாயிகள், “மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரக்கூடிய சிறிய ஓடைகள், ஆறுகளின் அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் ஆற்றை திசைதிருப்பி தங்களின் நிலத்துக்குள் கொண்டு சென்று அங்கே தடுப்பணை கட்டி தண்ணீரைத் தேக்குகிறார்கள். பின்னர் செயற்கையாக அருவியை உருவாக்கி, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எனப் பணம் வாங்கிக்கொண்டு சுற்றுலாப்பயணிகளைக் குளிக்க வைக்கிறார்கள்.

அரசியவாதிகள், உள்ளூர் வி.ஐ.பி-க்கள் எனப் பலரும் இதுபோல தனியார் அருவிகளை அமைத்திருக்கிறார்கள். அடவிநயினார் அணையை ஒட்டிய பகுதியில் இருபதுக்கும் அதிகமான தனியார் அருவிகளும், குண்டாறு அணையின் மேல்பகுதியில் 16 தனியார் அருவிகளும் இருக்கின்றன. அதோடு அனுமதி இல்லாமல் கட்டடங்களைக் கட்டி பயணிகளைத் தங்கவைத்தும் காசு பார்க்கிறார்கள். மனித நடமாட்டத்தால் அச்சமடையும் விலங்குகள், காட்டிலிருந்து விவசாய நிலத்துக்குள் நுழைந்துவிடுகின்றன. மேலும் தனியார் அருவிகளால் தண்ணீர் திசைமாறுவதால், விவசாயத்தை நம்பியிருக்கும் நாங்களும் பாதிப்புக்கு உள்ளாகிறோம். அரசியல் பின்புலத்துடன் தனியார் அருவிகள் செயல்படுவதாலோ என்னவோ அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை’’ என்றனர் வருத்தத்துடன்.

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய வசதிகள் கிடைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்காணிக்கவும் அட்வகேட் கமிஷனர்களாக வழக்கறிஞர்கள் வெங்கட்ரமணா, அருண் சுவாமி ஆகியோரை நியமித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அந்தக் குழுவினர் சீஸன் காலங்களில் குற்றாலம் அருவிகளில் ஆய்வு மேற்கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துவருகிறார்கள்.

குற்றாலம்... தனியார் அருவி
குற்றாலம்... தனியார் அருவி

நீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவின் வழக்கறிஞரான அருண் சுவாமியிடம் இது குறித்துப் பேசினோம். “குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஷாம்பூ, சோப்பு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வருபவர் களைக் குளிக்க அனுமதிக்கக் கூடாது. ஆனால் இந்த விதிமுறைகள் எதுவும் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. பாதுகாப்பு அம்சங்கள், மருத்துவ வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட வில்லை.

இது தவிர, குற்றாலத்தைச் சுற்றிலும் இருக்கும் தனியார் அருவிகள் அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கும் வன விலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. கான்கிரீட் தடுப்புகள் அமைத்து செயற்கையாக அருவிகள் அமைத்திருப்பதைத் தடுக்க வேண்டும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அங்கு சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தப்படுகிறது.

ஆகாஷ்
ஆகாஷ்

குடிகாரர்களால் உடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில் துண்டுகள் மலைப்பகுதி முழுவதும் கிடக்கின்றன. வழியில் இருக்கும் விவசாய நிலத்துக்குள்ளும் கண்ணாடித்துண்டுகள் கிடப்பதால் விவசாயிகளால் கால்வைக்கவே முடியாத நிலை இருக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பைகளும் நிலம் முழுவதும் கிடக்கின்றன. அதனால் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் இணைந்து தனியார் அருவிகளின் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தனியார் அருவிகளுக்குச் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் 50-க்கும் அதிகமான ஜீப்புகள் அணைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பயணிக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தனியார் அருவிகள் குறித்து விவசாயிகள் தெரிவித்த தகவல்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.

அருண் சுவாமி
அருண் சுவாமி

உடனடியாக குண்டாறு அணையில் படகு மூலம் ஆய்வு செய்த ஆட்சியர் ஆகாஷ், தனியார் அருவிகள் குறித்து ஆய்வுசெய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இது குறித்து நம்மிடம் பேசியவர், ‘‘தனியார் அருவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது விளக்கம் வாங்கப்பட்ட பின்னர் விதிமுறை மீறல் உள்ள தனியார் அருவிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றின் வழியை மறித்து செயற்கையான தடைகள் அமைக்கப்பட்டிருந்தால், அவற்றை உடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியான குரலில்.

சமீபத்தில் ஏற்பட்ட குற்றாலம் வெள்ளத்தில் இருவர் உயிரிழந்திருக்கிற சூழலில், இந்தப் பிரச்னைகளைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது!