அறுதிப்பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்ந்துவிட்டதால் ‘துணிச்சலாக’ பல அதிரடி முடிவுகளை பா.ஜ.க அரசு எடுத்துவருகிறது. அவை பலத்த சர்ச்சைகளையும் உண்டாக்குகின்றன; கடும் எதிர்ப்புகளையும் சந்திக்கின்றன. சமீபத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கிறது.
‘பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை ஜனவரி 8-ம் தேதி நடத்தின. அதில், சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற அதே நாளில் மத்திய அமைச்சரவையைக் கூட்டி, திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) உள்ளிட்ட ஆறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்க முடிவெடுத் துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி! இதற்காக, தாதுப்பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதுதான் அரசுகளின் வழக்கம். ஆனால், இப்போதைய பா.ஜ.க அரசு, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தூக்கிக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறது.

நீலாச்சல் இஸ்பேட் நிகாம் லிமிடெட் என்பது, ஒரு கூட்டு நிறுவனம். தமிழ்நாட்டில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம், உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம், தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம், உலோகவியல் மற்றும் பொறியியல் ஆலோசனைக் கழகம் ஆகிய மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், ஒடிசா சுரங்கக் கழகம், ஒடிசா முதலீட்டுக் கழகம் ஆகிய மாநில அரசுப் பொதுத்துறை நிறுவனங்களும் நீலாச்சல் இஸ்பேட் நிகாம் லிமிடெட்டில் பங்குதாரர்களாக உள்ளன. இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்குத்தான் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தின் பெருமைமிகு தொழில் அடையாளமாகத் திகழ்ந்துவரும் ‘பெல்’ எனப்படும் பாரத மிகுமின் நிறுவனத்தையும் தனியார்மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இங்கு உள்ளவர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
மத்திய அரசின் கனரக மின் உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனம், காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில் நிறுவப்பட்டது. மத்திய அரசின் மகா ரத்னா அந்தஸ்தைப் பெற்ற இந்த நிறுவனத்துக்கு, சென்னை, திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை உருவாக்கத் தேவைப்படும் கொதிகலன்கள், சுழலிகள் மற்றும் பெருவகை மின்னுருவாக்கத்துக்குத் தேவைப்படும் துணை கருவிகள் ஆகியவை பெல் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 23,000 கோடி ரூபாய். லாபத்தில் இயங்கிவரும் இந்தப் பொதுத்துறை நிறுவனம், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. தனியாரிடம் இதைக் கொடுப்பதை மத்திய அரசு உறுதிசெய்துவிட்டது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமத்திய அரசின் தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் அறிக்கை வெளியிட்ட பி.பி.சி.எல், ஐ.ஓ.சி, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் சங்கம், ‘தனியார்மய நடவடிக்கை மூலம் 75,000 கோடி ரூபாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், இதன்மூலம் தேசத்துக்கு 4.46 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்’ என எச்சரித்தது. எல்லா எதிர்ப்பு களையும் மீறி தனியார்மய நடவடிக்கையில் முழுமூச்சுடன் மத்திய அரசு இறங்கிவிட்டது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் பேசினோம். ‘‘பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் குறு, சிறு தொழில்களை மத்திய அரசு நாசப்படுத்திவிட்டது. உற்பத்தித் துறை வீழ்ந்து கிடக்கிறது. ஆட்டோமொபைல் துறை கடுமை யான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நிதி நெருக்கடி யிலிருந்து மீள்வதற்கு பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயப்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் மூலதன இருப்பிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு பெற்றது. அதை எதற்கு பயன்படுத்தப் போகிறீர்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. அதில், 1.45 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக மத்திய அரசு கொடுத்துவிட்டது.
2019-2020 நிதியாண்டில் மொத்த வரிவருவாயாக 24.6 லட்சம் கோடி ரூபாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அதில் குறைந்தது 16.5 லட்சம் கோடி ரூபாயாவது வரிவருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்ததுபோல் பெரிய அளவுக்கு வரிவருவாய் கிடைக்கவில்லை. தற்போது, வரிவருவாயில் 2.5 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக் குறையைக் காரணம் காட்டி பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு கைகழுவப்போகிறது என்று தகவல்கள் வந்துள்ளன. இத்தகைய சூழலில்தான், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மூர்க்கமாக முன்னெடுக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக் கொடுப்பதில் பா.ஜ.க அரசுக்கு சில நோக்கங்கள் உள்ளன. இவற்றை பெருமுதலாளிகளுக்கு விற்பதன்மூலம், தோழமை முதலாளித்துவத்தை (crony capitalism) வளர்க்க முயல்கின்றனர். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தங்களுக்கு நெருக்கமான முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலமாக, `தேர்தல் பத்திரங்கள்’ என்ற பெயரில் ஆதாயம் பெறுவது ஆட்சியாளர்களின் இன்னொரு நோக்கம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள்மூலம் பா.ஜ.க-வுக்கு 1,527 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 2,400 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள்மூலம் கிடைத்த ஒட்டுமொத்த நிதியில் 95 சதவிகிதம் பா.ஜ.க-வுக்கு மட்டுமே சென்றுள்ளது. இதில் பாதிக்கப்படு பவர்கள் யார் என்றால், இந்திய மக்களும் இந்திய தேசமும்தான். இதன்மூலம், மக்களுக்கு சேவை செய்வது தங்களின் வேலை அல்ல; பெருமுதலாளி களுக்கு சேவகம் செய்வதுதான் தங்களின் முக்கியக் கடமை என்று பா.ஜ.க ஆட்சியாளர்கள் நிரூபிக்கின்றனர்’’ என்கிறார் கடுமையாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம்.
‘‘இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பொதுத்துறை நிறுவனங்கள் தேவைப்பட்டன. அப்போது அதிக முதலீடு செய்யும் அளவுக்கு பெரிய தொழிலதிபர்கள் எவரும் இல்லை. எனவே, அரசே எல்லாவற்றையும் செய்தது. இப்போது, அதிக முதலீடு செய்து தொழில்களை நடத்தக்கூடிய அளவுக்கு தனியார் நிறுவனங்கள் வளர்ந்துவிட்டன. எனவே விஞ்ஞானம், தொழில்நுட்பம், தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப் பட்டுள்ள துறைகளைத் தவிர, மற்ற சேவைத் துறைகளை தனியாரிடம் கொடுத்துவிடலாம் என அரசு நினைக்கிறது.
அரசின் நிதியை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருப்பதைவிட, தனியார்மயம்மூலம் மக்கள்நலத் திட்டங்களுக்கு செலவுசெய்யலாம் என்பது அரசின் நோக்கம். தனியார்மய நடவடிக்கை என்பது, பா.ஜ.க கொண்டுவந்ததல்ல. இது, 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கை வந்ததிலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருப்பதுதான். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்தான் தனியாருக்கு விற்கப்பட உள்ளனவே தவிர, ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தனியாருக்குக் கொடுத்துவிடவில்லை. அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன’’ என்றார்.
அரசின் தனியார்மய நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் மட்டுமே அல்லர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ‘சுதேசி ஜாக்ரான் மன்ச்’ என்ற அமைப்பும் மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. இந்த அமைப்பின் கன்வீனரான அஸ்வினி மகாஜன் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘`பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாரிடம் கொடுப்பது தேசநலனுக்கு எதிரானது’’ என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுதேசி ஜாக்ரான் மன்ச், ஒரு தீர்மானமே நிறைவேற்றியுள்ளது. அதில், ‘பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான நிதி ஆயோக்கின் அறிக்கையை, மோடி அரசு குப்பைத்தொட்டியில் வீசியெறிய வேண்டும். அரசு உயரதிகாரிகள், சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை வழங்கக்கூடிய நிறுவனங்களுடன் கைகோத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அதன் விளைவுதான் இந்தத் தனியார்மய நடவடிக்கை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.