Published:Updated:

தஞ்சையைக் களங்கப்படுத்தும் பாலியல் தொழில்!

தஞ்சை
பிரீமியம் ஸ்டோரி
தஞ்சை

விமானத்தில் இறங்கும் இளம்பெண்கள்... கஸ்டமர்களுக்கு டோர் டெலிவரி...

தஞ்சையைக் களங்கப்படுத்தும் பாலியல் தொழில்!

விமானத்தில் இறங்கும் இளம்பெண்கள்... கஸ்டமர்களுக்கு டோர் டெலிவரி...

Published:Updated:
தஞ்சை
பிரீமியம் ஸ்டோரி
தஞ்சை

விவசாயத்துக்கும் கலாசாரத்துக்கும் பெயர்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில், தங்கும் விடுதி தொடங்கி குடியிருப்புப் பகுதிகள் வரை பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. நகரப் பகுதிகளில் மட்டுமே நடந்த இந்தத் தொழில், தற்போது கிராமப்புறங்களிலும் விரிவடையத் தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்!

கடந்த 2020, ஜூன் மாதத்தில் தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில், வடமாநில இளம்பெண் ஒருவர் படுகாயங்களுடன் சாலையோரம் மயங்கிக் கிடந்தார். மாதர் சங்க நிர்வாகி ஒருவர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். “வீட்டு வேலை என்று சொல்லி அழைத்துவந்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள்” என்று கதறிய அந்தப் பெண் தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் - ராஜம் தம்பதியரை அடையாளம் காட்டினார். இதையடுத்து, அந்தத் தம்பதியரைக் கைதுசெய்த போலீஸ், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சில மாதங்களிலேயே இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இந்த நிலையில்தான் தற்போது தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் தொழில் எல்லை மீறி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

தஞ்சையைக் களங்கப்படுத்தும் பாலியல் தொழில்!

சில சம்பவங்களைக் குறிப்பிட்டு இது பற்றி நம்மிடம் பேசினார் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஜீவக்குமார்... “இரண்டு மாதங்களுக்கு முன்பு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தங்கும் விடுதியில் லென்ட் பிராங்கிளின் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களே அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. அந்த விடுதியில் நான்கு இளைஞர்கள் ஒரே பெண்ணிடம் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாத அந்தப் பெண் கதறியிருக்கிறார். அப்போதும்விடாமல் வக்கிரமாக அந்தப் பெண்ணிடம் அவர்கள் நடந்துகொண்டிருக் கிறார்கள். சத்தம் அதிகரிக்கவே பக்கத்து அறையிலிருந்த லென்ட் பிராங்கிளின் அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்டிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்தவர்கள், ஹெல்மெட்டால் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி விட்டார்கள். பிறகு அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரத்திலும் செந்தில்குமார்-ராஜம் தம்பதியர் பெயரே அடிபட்டது.

அந்தத் தம்பதியர் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவுடனேயே மீண்டும் பாலியல் தொழிலை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதற்காக 14 புரோக்கர்களை வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர் சொல்கிற இடத்துக்குப் பெண்களை டோர் டெலிவரி செய்வது இவர்களின் ஸ்டைல். அக்கம் பக்கத்தில் சந்தேகம் வராமலிருக்க சேல்ஸ் கேர்ள் போல சில விற்பனைப் பொருள்களுடனோ அல்லது உறவினர்களைப் போல பழம், பூ நிரம்பிய தட்டுகளுடனோ கூடவே வயதான ஆண், பெண் இருவரையும் அனுப்பிவைப்பார்கள். மலரையும் அரசனையும் குறிக்கும் பெயருடைய போலீஸ் ஒருவர், அந்தத் தம்பதியருக்கு ஆல் இன் ஆலாக இருக்கிறார். வி.ஐ.பி-கள் மற்றும் வசதியானவர்களுக்காக கேரளா, ஆந்திரா, டெல்லி, புனே உள்ளிட்ட இடங்களிலிருந்தும் தொழிலுக்காக விமானத்தில் இளம்பெண்களை வரவழைக்கிறார்கள். இவர்களை அந்த போலீஸ்காரர்தான் பிக்அப், டிராப் செய்வார்.

ஜீவக்குமார், வேல்முருகன், பிரவேஷ்குமார்
ஜீவக்குமார், வேல்முருகன், பிரவேஷ்குமார்

இந்தப் பாலியல் தொழிலை ஏதோ கார்ப்பரேட் ரேஞ்சுக்கு ஃபிரான்சைஸ்போல தஞ்சாவூர் நகரைத் தாண்டியும் இவர்கள் கிளை பரப்பியிருப்பதுதான் கொடுமை. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பகுதியில், திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் மசாஜ் சென்டரில் தொழில் நடத்திவருகிறார். சிவாஜி நகரில் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பேரில் ஒருவர் பாலியல் தொழில் நடத்திவருகிறார். வடக்கு வாசல், நடராஜபுரம், கீழவாசல், ரொட்டிகார சந்து ஆகிய குடியிருப்புகளிலேயே குடிசைத் தொழிலைப்போல பலரும் இதை நடத்திவருவதால், அங்கிருக்கும் பெண்கள் வீதியில் நடக்கவே அச்சப்படுகிறார்கள். மேற்கண்ட தம்பதியர் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு வாரம்தோறும் மாமூல் மட்டுமில்லாமல், சில அதிகாரிகளுக்கு எல்லாவகையிலும் ‘சப்ளை’ செய்கிறார்கள்’’ என்பதால் போலீஸாரும் இதைக் கண்டுக்கொள்வதில்லை” என்றார்.

தஞ்சையைக் களங்கப்படுத்தும் பாலியல் தொழில்!

கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் நம்மிடம், ``முன்பெல்லாம் நகரப் பகுதிகளில் நடந்த இந்தத் தொழில், தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவிவிட்டது. கும்பகோணத்தில் சுவாமிமலை, மேலக்காவிரி, செட்டி மண்டபம், அஞ்சுகம் நகர், கரிக்குளம், பட்டுக்கோட்டை - திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டப்பகலில் பாலியல் தொழில் நடக்கிறது. கும்பகோணம் ஆன்மிகத் தலம் என்பதால், பக்தர்கள் போர்வையில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி சட்டை, கோயில் பிரசாதம் சகிதம் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் விடுதிகளில் தஞ்சமடைந்துவிடுகிறார்கள். இதனால், திருத்தலங்களுக்கு வரும் உண்மையான பக்தர்களுக்குக் கடும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக தொடர் புகார்கள் சென்றதை யடுத்து, போலீஸார் கண்துடைப்பு நடவடிக்கையாக ஒரு விடுதிக்கு மட்டும் சீல் வைத்துள்ளனர். திருச்சிற்றம்பலத்தில் ஆன்மிக வழிப்பாட்டுக்குழு ஒன்றை நடத்தும் ஒருவர், வறுமையில் தவிக்கும் இளம்பெண்களை வீழ்த்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவருகிறார். கடந்த வாரம் போலீஸார் அவரது இடத்தில் சோதனை செய்தார்கள். ஆனால், போலீஸிலிருந்தே சிலர் அவருக்குத் தகவல் கொடுத்து தப்பவைத்துவிட்டனர்’’ என்றார்.

செந்தில்குமார், ராஜம்
செந்தில்குமார், ராஜம்

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமாரிடம் இது பற்றியெல்லாம் கேட்டோம். “புகாரின்பேரில் ஆங்காங்கே நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். ஜாமீனில் வெளியே வந்து இந்தத் தொழிலை செய்பவர்களைக் கண்காணித்துவருகிறோம். கடும் நடவடிக்கைகள் மூலம் பாலியல் தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என்றார்.

பல்வேறு பெருமைகளைக்கொண்ட தஞ்சை மாவட்டம், பாலியல் தொழில் இல்லா மாவட்டமாக மாற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!