Published:Updated:

‘ஆபரேஷன் ஆபத்து’?

ஆயுர்வேத மருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
ஆயுர்வேத மருத்துவம்

இதனால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். ஆயுர்வேதம் மட்டுமல்ல, வேறெந்த மருத்துவத்தின் மீதும் எங்களுக்கு விமர்சனம் இல்லை. அவர்களது முறைப்படி அவர்கள் சிகிச்சை அளித்துக்கொள்ளட்டும்.

‘ஆபரேஷன் ஆபத்து’?

இதனால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். ஆயுர்வேதம் மட்டுமல்ல, வேறெந்த மருத்துவத்தின் மீதும் எங்களுக்கு விமர்சனம் இல்லை. அவர்களது முறைப்படி அவர்கள் சிகிச்சை அளித்துக்கொள்ளட்டும்.

Published:Updated:
ஆயுர்வேத மருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
ஆயுர்வேத மருத்துவம்
மிக்சோபதி... சமீப நாள்களில் அலோபதி, ஹோமியோபதி போல மருத்துவர்களால் பேசப்படும் இன்னொரு வார்த்தை. 2016-ம் ஆண்டு ஆயுர்வேதத்தில் எம்.எஸ்-சால்ய தந்த்ரம் (பொது அறுவை சிகிச்சை) எம்.எஸ்-சாலாக்ய தந்த்ரம் (கண், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை) போன்ற முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து, ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இந்திய மருத்துவக் கழகம், ‘முதுநிலை ஆயுர்வேதம் படித்தவர்கள் சிறுநீரகக் கல், குடல் அழற்சி, பித்தப்பை நீக்கம், செயற்கைப் பல் பொருத்துதல். உள்நாக்கு அழற்சி, அன்னப் பிளவு, காது மடல் பிளவு, கண்புரை உள்ளிட்ட 58 விதமான அறுவை சிகிச்சைகளைச் செய்யலாம். அவர்களுக்கு அதற்காக முறையான பயிற்சி அளிக்கப்படும்’ என்று ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு நிலவிவந்த நிலையில், கடந்த நவம்பர் 20-ம் தேதி இதை அரசிதழில் வெளியிட்டு சட்டபூர்வமாக்கியுள்ளது மத்திய அரசு. இதை ‘மிக்சோபதி’ (Mixopathy), ‘கிச்சடி மருத்துவம்’ என்றெல்லாம் கண்டிக்கும் அலோபதி மருத்துவர்கள், போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

‘ஆபரேஷன் ஆபத்து’?

ஆயுர்வேத மருத்துவம் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது. சரகர் எழுதிய ‘சரக சம்ஹிதை’, சுஸ்ருதர் எழுதிய ‘சுஸ்ருத சம்ஹிதை’, வாக்பட்டர் எழுதிய ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’ போன்றவை இந்த மருத்துவமுறையின் மூலநூல்கள். சுஸ்ருத சம்ஹிதையில் 1,120 நோய்கள், அறுவைச்சிகிச்சைகள், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை வகைப்படுத்தியுள்ளார் சுஸ்ருதர். ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’ நூலும் அறுவை சிகிச்சை முறைகள் பற்றி விவரிக்கிறது. இந்த நூல்களைத்தான் பிரதான பாடங்களாகப் படிக்கிறார்கள் ஆயுர்வேத மாணவர்கள். பிறகு, முதுநிலை படித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிசிக்சை செய்வதில் என்ன பிரச்னை?

‘ஆபரேஷன் ஆபத்து’?

“சுஸ்ருதர் காலத்தில் செய்ததைப்போல ஆயுர்வேத சிகிச்சைகளை அவர்கள் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எல்லா மருத்துவ முறைகளுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை உணராமல் ஆயுர்வேத மருத்துவர்கள் மெல்ல மெல்ல அலோபதி மருத்துவம் பார்க்க முயல்கிறார்கள். அதுதான் ஆபத்து’’ என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகத் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா.

ராஜா
ராஜா

‘`அறுவை சிகிச்சைக்கு அடிப்படை, மயக்க மருந்து. ஆயுர்வேதத்தில் மயக்க மருந்து என்று எதுவுமே இல்லை. நவீன மயக்க மருந்தையே பயன்படுத்துகிறார்கள். நவீன மருத்துவத்தில் மயக்க மருந்துக்கென்றே தனி மருத்துவர்கள் இருக்கிறார்கள். நான் காது, மூக்கு, தொண்டை மருத்துவர். நான் இதய அறுவை சிகிச்சை செய்யமுடியாது. அதைப் போலத்தான் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதும். நாங்கள் எங்களது தொழிலைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்களின் உயிரைப் பற்றித்தான் கவலைப்படுகிறோம்.

வனிதா
வனிதா

இதனால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். ஆயுர்வேதம் மட்டுமல்ல, வேறெந்த மருத்துவத்தின் மீதும் எங்களுக்கு விமர்சனம் இல்லை. அவர்களது முறைப்படி அவர்கள் சிகிச்சை அளித்துக்கொள்ளட்டும். அலோபதி மருத்துவத்துக்குள் நுழைவதைத்தான் எதிர்க்கிறோம். ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. எல்லாவற்றையும் கலப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

எல்லோருக்கும் சிகிச்சை கிடைப்பதற்காகத் தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்கிறது. அது உண்மையாக இருந்தால் அதற்குப் பொறுப்பு அரசுதான். அதற்குத் தீர்வு மருத்துவத்தைக் களங்கப்படுத்துவதல்ல. தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்று நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள், தற்போது மருத்துவத்தின் தன்மையையே குலைக்கப் பார்க்கிறார்கள்’’ என்கிறார் சி.என்.ராஜா.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

‘‘வட மாநிலங்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளிப்பது இயல்புதான். மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் அறுவை சிசிச்சைப் பிரிவுகளில் ஆயுர்வேத மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்திலும்கூட தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் அறுவை சிகிச்சைப் பிரிவுகளிலும் பணிபுரிகிறார்கள். பலர் டியூட்டி டாக்டர்களாகவும் இருக்கிறார்கள். கொரோனா நாள்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது’’ என்கிறார் டாக்டர் வனிதா முரளிக்குமார். ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மத்திய இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர். இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் ‘ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம்’ என்ற அறிவிக்கை வெளியிடப்பட்டது.

‘`ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சிறப்பு நிபுணர் என்ற அளவுக்கு நவீன மருத்துவம் சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக விரிவடைந்துள்ள நிலையில், பொதுவான ஆயுர்வேத அறுவை சிகிச்சை படித்தவர்கள் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்துதானே?’’ என அவரிடம் கேட்டேன்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

‘`அது வலிந்து உருவாக்கப்பட்ட அச்சம். அலோபதி மருத்துவம் உருவாவதற்கு முன்பே ஆயுர்வேத மருத்துவமும் அறுவை சிகிச்சையும் இருந்தது. ஆல்கஹால், கஞ்சா போன்றவற்றை மயக்க மருந்துகளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நவீன மருத்துவமும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. அறுத்தல், தைத்தல் என எல்லாத் தொழில்நுட்பங்கள் பற்றியும் சுஸ்ருத சம்ஹிதையில் இருக்கிறது. தஞ்சை மன்னராக இருந்த ஆயுர்வேத மருத்துவரான சரபோஜி மகாராஜா 13 நோயாளிகளுக்கு கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்ததற்கான கேஸ் ஷீட் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆயுர்வேதம் என்பது இயற்கை அறிவியல். இதை நவீன மருத்துவம் படிப்பவர்கள் படிப்பதில்லை. ஆனால் ஆயுர்வேதம் படிப்பவர்கள் நவீன மருத்துவத்தையும் சேர்த்துத்தான் படிக்கிறார்கள். எல்லா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளிலும் உடலியல், உடற்கூறியல் ஆய்வகங்கள் இருக்கின்றன. நவீன மருத்துவர்களைப் போலவே இவர்களும் உடலை ஆராய்ச்சி செய்துதான் படிக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவர்கள் வாதம், பித்தம், கபம் என்று படிப்பார்கள். அலோபதி மருத்துவர்கள் பாக்டீரியா, வைரஸ் என்று படிப்பார்கள். அதுவும் மருந்துகளும்தான் வித்தியாசம். எம்.எஸ் படித்த ஆயுர்வேத மருத்துவரால் அடிப்படையான சில அறுவை சிகிச்சைகளைக்கூடச் செய்யமுடியாது என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இதைவிட பாரம்பர்ய மருத்துவத்தை அவமதிக்க முடியாது’’ என்கிறார் வனிதா முரளிக்குமார்.

‘`இதற்குப் பின்னால் பெரிய உள்நோக்கம் இருக்கிறது. ஒற்றை தேசம், ஒற்றை மருத்துவ முறை என நினைத்து ஆயுர்வேதத்தை மத்திய அரசு திட்டமிட்டு வளர்க்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேத வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 3,000 கோடி. சித்தாவுக்கு ஒதுக்கப்பட்டது 437 கோடி.

பிற மருத்துவ முறைகளில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு, தேவையற்ற விஷயங்களை விட்டுவிட்டுத்தான் நவீன மருத்துவம் வளர்ந்திருக்கிறது. அறிவியல் வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும்தான் இருக்கும். தேங்காது. நேற்று ஹைட்ரோகுளோரோக்குயின் கோவிட் வைரஸைத் தடுக்கும் என்று நம்பினோம். ஆராய்ச்சியில் அது பயனளிக்காது என்று தெரியவந்தது. கைவிட்டோம். நவீன மருத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே, மாறிக்கொண்டே இருக்கும். ஐந்தாயிரமாண்டு, பத்தாயிரமாண்டு விஷயங்களெல்லாம் பேசிப் பயனில்லை’’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டேன். ‘`ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சையளிப்பது சரியானதல்ல. தமிழ்நாட்டில் 1.2 லட்சம் அலோபதி மருத்துவர்கள் மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் இங்கு அதற்கான தேவையே எழவில்லை. மருத்துவர்கள் இல்லாத வடமாநிலங்களுக்கு வேண்டுமானால் இது பயனளிக்கலாம். அலோபதி- ஆயுஷ் கூட்டு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அதை ஊக்குவிப்போம்’’ என்கிறார் அவர்.

இது ஆயுர்வேத, அலோபதி மருத்துவர்கள் தொடர்புடைய விஷயமல்ல. மக்களின் உயிர் சார்ந்த விஷயம். அவசர முடிவுகள், அபாயகரமான நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism