Published:Updated:

போராட்டம் இது போராட்டம்!

போராட்டம் இது போராட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம் இது போராட்டம்!

`பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ எனக் கோரி, பல்வேறு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த ஆட்சியில் மிகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டம் இது போராட்டம்!

`பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ எனக் கோரி, பல்வேறு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த ஆட்சியில் மிகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Published:Updated:
போராட்டம் இது போராட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம் இது போராட்டம்!

`எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பினோம். ஆனால் தி.மு.க அரசு பதவியேற்று ஓராண்டு ஆகியும், எங்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்’ எனக் கூறி, சமீபகாலமாகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அப்படிப் பற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கும் கோரிக்கைப் போராட்டங்களில் சில...

போராட்டம் இது போராட்டம்!

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம்!

`பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ எனக் கோரி, பல்வேறு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த ஆட்சியில் மிகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நிலையில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்’ என 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன்படி அமல்படுத்தப் படவில்லை. மேலும், சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய தமிழக அரசு வல்லுநர்குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பரிசீலித்துவருவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலுள்ள ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விவகாரத்தில், நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஜூன் 16 அன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிரடியாக அறிவித்திருக்கின்றன!

போராட்டம் இது போராட்டம்!

செவிலியர்கள் போராட்டம்!

மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிபெற்று, கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவருவதாகவும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும், கடந்த பல மாதங்களாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஜூன் 7-ம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே, 480-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கைதுசெய்த போலீஸார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட, தற்காலிகமாகப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், ‘உறுதியளித்தபடி பணி நிரந்தரம் செய்யப்படவில்லையெனில், போராட்டம் தொடரும்’ என அறிவித்திருக்கின்றனர்!

போராட்டம் இது போராட்டம்!

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

தமிழக அரசுப் பள்ளிகளில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் 12,500 பகுதிநேர ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாகப் போராடிவந்தனர். அந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க தேர்தல் அறிக்கையில் `பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படாததால், கடந்த அக்டோபர் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிப்ரவரியில் நடந்த தருமபுரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், `ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என உறுதியளித்தார். ஆனாலும் அது சம்பந்தமாக நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால், மே மாதம் தி.மு.க ஆட்சி ஓராண்டு நிறைவுநாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, பரபரப்பை ஏற்படுத்தினர். ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்த பகுதிநேர ஆசிரியர்கள், அடுத்தகட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகிவருகின்றனர்!

போராட்டம் இது போராட்டம்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

`பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக, தற்காலிகப் பணிகளில் இருக்கும் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும். கொரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும்’ என 28 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மே மாதம் சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மே 30-ம் தேதி மதுரையைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், இரண்டு நாள்களில் சுமார் 1,700 டன் குப்பைகள் தேங்கி மதுரை மாநகராட்சியே ஸ்தம்பித்தது. இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்புக்குழு, மேயர் என நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தை ஒத்திவைத்திருக்கின்றனர்!

போராட்டம் இது போராட்டம்!

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்!

பொது விநியோகத் திட்டத்துக்கென்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 17 சதவிகித அகவிலைப்படியுடன் சேர்த்து, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவிகித அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 7-ம் தேதி முதல் மூன்று நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய, கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. ‘கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என ரேஷன் கடை ஊழியர்களும் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்!

இவை தவிர தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி போக்குவரத்து ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதேபோல, நீலகிரி, குன்னூர், கோவை, வால்பாறை பகுதிகளைச் சேர்ந்த அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் ரூ.340-ஆக இருக்கும் தினக்கூலியை ரூ.425-ஆக உயர்த்த வேண்டும் எனவும், பணி நிரந்தரம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism