கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுக்கத் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. இதிலிருந்து மீண்டுவர, பணப் புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிதியுதவித் திட்டங்களை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பணியாளர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்) தொகையை 12 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக மத்திய நிதி அமைச்சகம் குறைத்திருக்கிறது.
`இதன் மூலம் நிறுவனங்கள் பணியாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளத்தில் 2% குறையும். அதேநேரத்தில், பணியாளருக்கு 2% சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும்’ என்பது மத்திய அரசின் கணக்கு. `இதன் மூலம் ரூ.6,750 கோடி புழக்கத்துக்கு வரும்’ என மத்திய அரசு கணித்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் 6.5 லட்சம் தொழில் நிறுவனங்கள் மற்றும் 4.3 கோடி பி.எஃப் உறுப்பினர்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியாவைப் பொறுத்தவரை, பி.எஃப் என்பது பிரபலமான ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப்-ஆக பணியாளரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவனமும் தொழிலாளர் கணக்கில் செலுத்தும். உதாரணமாக, ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000 என்று வைத்துக்கொள்வோம். இந்த 25,000 ரூபாயில் 12% தொகையான ரூ.3,000 பணியாளர் சம்பளத்தில் பிடிக்கப்படும், இதே அளவு தொகையை நிறுவனம் தன் பங்காகச் செலுத்தும். ஆக மொத்தம், ரூ.6,000 பணியாளர் பி.எஃப் கணக்கில் சேரும். இப்போது 2% குறைக்கப் பட்டிருப்பதால், இனி பணியாளர் கணக்கில் 5,000 ரூபாய்தான் சேரும். பணியாளருக்குக் கூடுதலாக ரூ.500 செலவுக்குக் கிடைக்கும். நிறுவனத்தின் கையிலிருந்து செல்லும் தொகையும் மாதம் ரூ.500 குறையும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம். ‘`இந்த 2% பி.எஃப் தொகை குறைப்பு என்பது அடுத்த மூன்று மாதங்களுக்குத்தான் (2020 ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) என்பதால், பணியாளர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை; பெரிய அளவில் நன்மையும் இல்லை. எப்படி என்கிறீர்களா... பி.எஃப் தொகை 2% குறைத்துப் பிடிக்கப்படுவதால், ரூ.25,000 அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி உள்ளவர்களுக்குக் கூடுதலாக ரூ.500 கையில் கிடைக்கும். மூன்று மாதங்கள் என்கிறபோது ரூ.1,500 அதிகமாகக் கிடைக்கும். இது சம்பளக் கணக்கில் வருவதால், மொத்தச் சம்பளத்துடன் இந்த ரூ.1,500-க்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டும். ஒருவரின் அடிப்படை வரி வரம்புக்கேற்ப 5%-30% வரை வரி செலுத்த வேண்டும்” என்றவர், அதை உதாரணத்துடன் விளக்கிச் சொன்னார்.

‘‘ஒருவர் 30% வரி வரம்பில் வந்தால், ரூ.1,500-க்கு ரூ.450 வரி கட்ட வேண்டும். இந்த ரூ.450 வரியை மிச்சப்படுத்த வேண்டுமென்றால், அவர் 1,500 ரூபாயை வரிச் சலுகை அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் அல்லது ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தேசிய சேமிப்புப் பத்திரம் (என்.எஸ்.சி) போன்ற ஏதாவது ஒரு வரிச் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதுவே ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி ரூ.50,000 என்றால், அவர் வரிச் சலுகை பெற ரூ.3,000 முதலீடு செய்ய வேண்டும். இத்துடன் பாதிப்பு முடிந்துவிடவில்லை. இந்த பி.எஃப் 2% குறைப்பு சலுகைபோல் தோன்றினாலும், உண்மையில் சம்பளக் குறைப்பு போன்றதுதான். ஒரு பணியாளரின் சம்பளம் என்பது அவரின் நிறுவனம் போடும் பி.எஃப் பங்களிப்பையும் சேர்த்தது. இங்கே நிறுவனத்தின் பி.எஃப் பங்களிப்பு குறைக்கப்படுவதால், ஊழியருக்குக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமலேயே போகிறது. ஏற்கெனவே பல நிறுவனங்கள் 10%-50% வரை சம்பளத்தைக் குறைத்துள்ள நிலையில், மத்திய அரசும் தன் பங்குக்கு ஊழியர்களின் வருமானத்தைக் குறைத்திருக்கிறது’’ என்றவர், இதையும் ஓர் உதாரணத்துடன் விளக்கினார்.

‘‘ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000 என்றால், பணியாளர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு சேர்த்து மாதந்தோறும் சுமார் ரூ.1,000 பணியாளரின் பி.எஃப் கணக்கில் குறையும். தற்போதுள்ள 8.5% வட்டிக் கணக்கில் ஒரு பணியாளர் 25 ஆண்டுகள் கழித்து பணி ஓய்வு பெறுகிறார் என்றால், அவரின் ஓய்வூதியத் தொகுப்பு நிதியில் சுமார் ரூ.23,000 வரை குறையும். இதுவே 20 ஆண்டுகள் என்றால், ஓய்வூதியப் பலன் கிட்டத்தட்ட ரூ.15,300 குறையும். சம்பளம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும்” என்றார்.
பி.எஃப் 2% தொகை குறைப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால், ஊழியர்களுக்குச் சலுகை அளிப்பது போல் தெரியும். ஆனால், இதனால் ஊழியர்களுக்குக் கூடுதல் சுமை என்பதே உண்மை!
இந்த 2% பி.எஃப் குறைப்பு யாருக்கு இல்லை?
இந்த 2% குறைப்பு என்பது, அரசு ஊழியர்கள் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) கீழ் அரசே மொத்த பி.எஃப் பணமான 24 சதவிகித்தைச் செலுத்தும் பணியாளர்களுக்குப் பொருந்தாது.
பி.எம்.ஜி.கே.ஒய்–யின்கீழ் ஏற்கெனவே மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு பி.எஃப் பணத்தைச் செலுத்தியிருக்கிறது. இது இன்னும் மூன்று மாதங்களுக்கு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. 100 பணியாளர்களுக்குக் குறைவாக உள்ள 90 சதவிகிதப் பணியாளர்களின் மாதச் சம்பளம் ரூ.15,000-க்குக்கீழ் இருக்கும்பட்சத்தில் பி.எஃப் பணத்தை மத்திய அரசு செலுத்துகிறது. அந்த வகையில், மத்திய அரசுக்கு ரூ.2,500 கோடி செலவாகிறது. இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்களைச் சேர்ந்த 72.20 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், உண்மையில் எவ்வளவு பேருக்கு பயன் கிடைக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்!