Published:Updated:

`இந்தக் காலத்திலும் `அன்னபூரணிகள்' உருவாவது எப்படி?' - விளக்கும் மனநல மருத்துவர் ஷாலினி

அன்னபூரணி

செங்கல்பட்டில் கடையை விரித்து, தற்போது தலைமறைவாகியிருப்பதாகக் கூறப்படும் அன்னபூரணி, கடந்த சில தினங்களாக இணையத்தில் டிரெண்டாகியுள்ளார். இதுபோன்ற போலிகளிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன தீர்வு? உளவியல் கண்ணோட்டத்துடன் பதில் தேடி, மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம்.

`இந்தக் காலத்திலும் `அன்னபூரணிகள்' உருவாவது எப்படி?' - விளக்கும் மனநல மருத்துவர் ஷாலினி

செங்கல்பட்டில் கடையை விரித்து, தற்போது தலைமறைவாகியிருப்பதாகக் கூறப்படும் அன்னபூரணி, கடந்த சில தினங்களாக இணையத்தில் டிரெண்டாகியுள்ளார். இதுபோன்ற போலிகளிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன தீர்வு? உளவியல் கண்ணோட்டத்துடன் பதில் தேடி, மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம்.

Published:Updated:
அன்னபூரணி

வெகுஜன மக்களிடமிருக்கும் அவரவர் மதம் சார்ந்த இறை நம்பிக்கையை, தவறான வழியில் பயன்படுத்தி, பணம், புகழ், செல்வாக்கு போன்று தங்களுக்குத் தேவையானவற்றைக் குறுக்கு வழியில் அடைய நினைக்கும் போலி சாமியார்களின் கும்பல் புற்றீசல்போல முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. பகுத்தறிவு மற்றும் அறிவியல் உண்மைகளை உணராமல், இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளைக் கணிசமான மக்கள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அதுவே, இத்தகைய கயவர்களைத் தைரியமாக நடமாடச் செய்கிறது. அந்த வரிசையில் புதுவரவாக உருவெடுத்திருக்கிறார் அன்னபூரணி.

அன்னபூரணி
அன்னபூரணி

செங்கல்பட்டில் கடையை விரித்து, தற்போது தலைமறைவாகியிருப்பதாகக் கூறப்படும் அன்னபூரணி, கடந்த சில தினங்களாக இணையத்தில் பேசுபொருளாகி, டிரெண்டாகியுள்ளார். கூடவே, இவரின் முந்தைய காலப் பின்னணியை (தனியார் தொலைக்காட்சியின் குடும்ப விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்ச்சை) சிலர் தூசு தட்டி எடுத்துப் பரப்பி வருகின்றனர். சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சியால், `தவறு செய்பவர்கள் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது’ என்றாகிவிட்ட காலத்திலும், `திடீர் அவதாரமாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற போலி சாமியார்களெல்லாம் எந்த தைரியத்தில் சமூகத்தில் நடமாடுகிறார்கள்?' என்ற கேள்வி பெரும்பாலானோருக்கும் எழாமல் இல்லை. அன்னபூரணியைப் போலவே கடந்த காலங்களில் கடவுளின் அவதாரமாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அப்பாவி மக்களைத் தங்கள் பக்கம் திருப்பிய பலரும், குற்றப்பின்னணிக் கொண்டவர்களாக இருந்தும், பெரும் செல்வாக்குடன் சமூகத்தில் நடமாடுகிறார்கள். எனவே, இவர்களைப் போன்றோர்மீது ஆரம்பகாலம் முதலே காவல்துறையின் பார்வை எப்போதும் இருப்பது நலம் என்பது நடுநிலையாளர்களின் வாதம்.

புதுப்புது பிராண்டிங் பெயர்களில் உருவெடுக்கும் இத்தகைய போலி சாமியார்கள் எத்தகைய மனநிலையில் உருவாகிறார்கள்? அவர்களைக் கடவுளின் தூதுவர்களாக மக்களை நினைக்கச் செய்யும் எண்ணம் எதனால் ஏற்படுகிறது? இதுபோன்ற போலிகளிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன தீர்வு? இதற்கெல்லாம் உளவியல் கண்ணோட்டத்துடன் பதில் தேடும் வகையில் மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம்.

அன்னபூரணி
அன்னபூரணி

``மக்கள் மூட நம்பிக்கையுடன் இருக்கும்வரை, அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தவறான வழியில் ஆதாயம் பெற இதுபோன்ற திடீர் சாமியார்கள் அவதாரம் எடுப்பதைத் தடுக்க முடியாது. `ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றும் செயலைச் செய்வது தவறல்ல’ என்று அறத்துக்கு எதிரான மனநிலையில் (Anti Social Mind) சிந்திப்பவர்களே இதுபோன்ற காரியங்களைக் கூச்சமின்றி செய்வார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தில் குற்ற உணர்வின்றி மகிழ்வார்கள். இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பெருவாரியான துறைகளில் பலர் இயங்கினாலும், ஆன்மிக வட்டாரத்தில்தான் அதிக அளவிலான போலிகள் உலவுகின்றனர்.

`சம்பாதிக்கவும் புகழ்பெறவும் எந்த ரூட்ல வேணா போகலாம்... தப்பில்ல!’ என்ற மனநிலையில் குற்றம் செய்யத் துணிந்தவர்களின் பிரதான தேர்வாக ஆன்மிகத்துறை மாறியிருப்பது பெரிய துரதிர்ஷ்டம். அத்தகைய முடிவெடுத்தவர்கள், அதிக கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கும் அப்பாவி மக்களைத்தான் முதலில் தங்கள் பக்கம் இழுக்க நினைப்பார்கள். தங்களுக்குச் சிறப்பு வாய்ந்த ஆற்றல் / சக்தி இருப்பதுபோல, வித்தியாசமான ஒலியில் கூச்சல் இடுவது, நடனமாடுவது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, கையில் விபூதி வரவைப்பது போன்று மக்களை ஏமாறச் செய்யும் வகையில் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார்கள்.

போலி சாமியார்
போலி சாமியார்

அதன் மூலம் மக்களைத் தங்கள் வழிக்குத் திருப்பி, பணம் மற்றும் நகை போன்ற செல்வங்களை அபகரிப்பது, பாலியல் ரீதியான தவறுகள் செய்வது எனக் கடந்த காலத்தில் ஏராளமான `மோசடி சாமியார்'களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும், இதுபோன்ற போலிகளை நம்பி, அவர்கள் சொல்வதை வேதவாக்காக நினைக்கும் கூட்டம் பெருகிவருவதுதான், தாங்கள் செய்யும் தவற்றைத் துணிந்து செய்யும் ஊக்கத்தை இந்தப் போலி சாமியார்களுக்கு ஏற்படுத்துகிறது. எந்த மதத்திலாவது, `தன்னை வருத்திக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினால்தான் பக்தர்களுக்குப் பலன் கொடுப்பேன்’ என்று கடவுள் கூறுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறதா?

`நான் என்னை வருத்தி வேண்டுதலை நிறைவேத்துறேன். கைம்மாறா என் வேண்டுதலை நிறைவேத்து. கஷ்டப்பட்டு வேண்டினா நிச்சயமா கடவுளின் அருள் கிடைக்கும்' என்ற அறியாமையில்தானே பலரும் தங்களை வருத்திக்கொண்டு வேண்டுதல்களை முன்வைக்கின்றனர்? கஷ்டங்களும் வருத்தங்களும் இல்லாத மனிதர்கள் யாராவது உண்டா? தனக்கு ஒரு பிரச்னை என்றால், அதற்குத் தான் எந்த வகையில் காரணம், பிரச்னையைச் சரிசெய்ய என்ன வழி, இதுபோன்று தங்கள் தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான தீர்வைத் தேடுவதைவிடுத்து, எல்லாப் பிரச்னைக்கும் கடவுளை நிந்திப்பதும் / கைகாட்டுவதும் / துணைக்கு அழைப்பதும் எப்படி நியாயமாகும் அல்லது தீர்வாகும்?

அன்னபூரணி
அன்னபூரணி

அறிவியல் உண்மைப்படி எதுவுமே `மேஜிக்'போல உடனடியாகவெல்லாம் நிகழ்ந்துவிடாது. ஆனால், கடவுளை வேண்டினால் மட்டுமே அப்படி நிகழ்ந்துவிடும் என்று ஆழ்மனதில் பெரும் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கும்வரை, போலிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்லும். அவரவரின் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் யாருமே தவறாகச் சொல்லப்போவதில்லை. ஆனால், உண்மையான இறை நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்குமான வேறுபாட்டைப் பலரும் உணராதிருப்பதுதான் மிகப்பெரிய மடமை. இதுபோன்ற கூட்டத்தினரில் படித்தவர்களும் பெருமளவில் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இதனால்தான், எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் வேரூன்றி வளர்கின்றன. அதையே தங்களுக்கான முதலீடாக வைத்து போலி அவதாரங்கள் பெருகிவருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரும் கல்வி கற்கிறோம். ஆனால், அந்த அறிவு... நல்லது, கெட்டதைச் சரியான கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்மானிக்க உதவுகிறதா? தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் படித்தவர்கள்தானே? எதற்காகப் படிக்கிறோம், எதற்காக அறத்தின் வழியில் செயல்பட வேண்டும் என்ற தெளிவு இல்லாதவர்களில் படித்தவர்களும் அதிகளவில் இருக்கும்போது, படிக்காத, வெளியுலக அனுபவம் பெரிதும் இல்லாத சாமானிய மக்களை இதுபோன்ற போலி சாமியார்களிடமிருந்து மீட்பது சவாலான பணியே...” என்று ஆதங்கத்துடன் கூறும் ஷாலினி, போலி சாமியார்களின் வளர்ச்சியில் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் பங்கு குறித்தும் பேசினார்.

டாக்டர் ஷாலினி
டாக்டர் ஷாலினி

``எங்கும் போலி, எதிலும் போலி என்றாகிவிட்ட காலத்தில், ஒவ்வொரு விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்புதான். போலி சாமியார்கள், தங்களின் எதிர்காலம் மற்றும் சமூகத்தின் இழிவுப் பேச்சுகளுக்கெல்லாம் கவலைப்படமாட்டார்கள். குற்றப் பின்னணியில் சிக்கி, கடந்த காலங்களில் சிறைக்குச் சென்று, சில காலத்திலேயே விடுதலை பெற்று, மீண்டும் சுதந்திரமாக உலவும் போலி சாமியார்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்? `பண பலம், அதிகார பலம் இருந்தால், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடலாம். எத்தகைய குற்றப் பின்னணி இருந்தாலும், சமூகத்தில் நமக்கான செல்வாக்கு உயர்ந்ததும் நம் மீதான கடந்த கால அவதூறுகள், குற்றச் சுவடுகள் எல்லாமே மக்கள் மனதிலிருந்து மறைந்துவிடும்' என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்து வேரூன்றச் செய்வது யார்?

சாமியார்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் போலிகள் சிலரிடம் ஆட்சியாளர்கள் நேரில் சென்று ஆசி பெறுவதும், அவர்கள் நடத்தும் ஆன்மிக நிகழ்வுகளில் விருந்தினர்களாகக் கலந்துகொள்வதும்கூட, அந்தச் சாமியார்கள்மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தேர்தல் வாக்குகளுக்காகவும், தேர்தல் செலவினங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயங்களுக்காகவுமே போலி சாமியார்களை ஆட்சியாளர்கள் பலரும் நாடிச் செல்கின்றனர். இந்த இரு தரப்புக்கும் இடையில் இணக்கமான போக்கு அதிகரித்துவருவதால், போலிகளின் உருவாக்கத்தைத் தடைசெய்யும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றாமலும், தண்டனை பெற்றுக்கொடுக்கும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் ஆட்சியாளர்கள் மெளனம் மட்டுமே காக்கின்றனர். இதில் மக்களுக்குத்தான் தெளிவு ஏற்பட வேண்டும்.

அன்னபூரணி
அன்னபூரணி

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடையில் சொத்துகளைக் குவிக்கும் போலிகளைக் கண்கூடாகப் பார்த்தும் மக்கள் திருந்துவதில்லை என்பதுதான் பெரும் ஆதங்கமாக இருக்கிறது. வரும் முன் காக்க வேண்டிய அரசு, பல விஷயங்களில் மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுப்பதுடன், சுயநலவாதிகளுக்குச் சேவகம் செய்யும் போக்கையே கடைப்பிடிக்கும் சூழலில், நம்மை நாம்தான் முதலில் காத்துக்கொள்ள வேண்டும். மக்கள் விழிப்படைந்தால், இதுபோன்ற திடீர் சாமியார்கள் உருவாவது கட்டுப்படும். போலி சாமியார்களின் செயல்பாடுகளைப்போல, அறிவியல் உண்மைகளுக்குக் கவர்ச்சிகரமான சாயம் இல்லாததால், பகுத்தறிவு உண்மைகள் பலருக்கும் தாமதமாகவே போய்ச் சேர்கின்றன. ஆனாலும், அந்தப் பகுத்தறிவு மக்களிடம் ஏற்படும்வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மில் பலருக்கும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்” என்று முடித்தார்.