Published:Updated:

சொந்த காரா... வாடகை காரா?

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

என்ன சொல்கிறார்கள் மக்கள்?

சொந்த காரா... வாடகை காரா?

என்ன சொல்கிறார்கள் மக்கள்?

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

‘‘இளம் தலைமுறையினர், இ.எம்.ஐ-யில் கார் வாங்கத் தயங்குகிறார்கள். தொடர்ந்து இ.எம்.ஐ கட்டவேண்டும் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக ஓலா, ஊபர், மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’’ - ஆட்டோமொபைல் துறை பின்னடைவுக்குக் காரணமாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படிச் சொல்லி ஒரு மாதம் கடந்துவிட்டது. இருப்பினும், அதுகுறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. எதுதான் சரியானது என்று பல்வேறு தரப்பினரிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பைக் இருக்கு. ஆனால், கார் தேவை!

ஆல்ட்டோ காரில் தி.நகர் சிக்னலில் நின்றுகொண்டிருந்த கௌதமை ஓரங்கட்டிப் பேசினோம். ‘‘எனக்கு 25 வயசு. விவசாயம் சார்ந்து ஒரு நிறுவனத்தை நடத்திட்டு இருக்கேன். என்கிட்ட கார், பைக் ரெண்டுமே இருக்கு. தி.நகர்ல இருந்து ஓ.எம்.ஆர் வரை தினமும் போய்க்கிட்டு இருக்கேன். பைக்னா 45 நிமிஷம் போதும். கார்ல ஒன்றரை மணி நேரம் ஆகுது. கார்ல போகக் காரணம், இதுல நிறைய பொருள் களைக் கொண்டுபோகலாம். கிளம்பும் நேரத்துக்கு வண்டி கிடைக்கலையேங்கிற கடைசி நிமிஷ டென்ஷன் இருக்காது. என் கார்ல சில நேரம் பெரிய பெட்டி, கடப்பாரை, மண்வெட்டி எல்லாம்கூட எடுத்துட்டுப் போவேன். அதையெல்லாம் வாடகை கார், பஸ், ஆட்டோ, மெட்ரோ மாதிரி பொதுப் போக்குவரத்துல ஏத்த மாட்டாங்க. அவசரமா வெளியூர் போக வேண்டியிருந்தா பஸ், ரயில்ல எல்லாம் சீட் கிடைக்க சிரமமா இருக்கும். கார்னா உடனே எடுத்துக்கிட்டுக் கிளம்பிடலாம்.

சொந்த காரா... வாடகை காரா?

இப்போ, அடுத்த கார் வாங்க முடிவு பண்ணியிருக்கேன். காஸ்ட்லியான கார் வாங்குறதுல விருப்பம் கிடையாது. வாங்கினா அஞ்சு லட்சம் ரூபாய் கார்தான். அதிகபட்சம் ஏழு லட்சத்துக்கு மேல ஒரு காருக்கு செலவு செய்ய மாட்டேன். இ.எம்.ஐ போட்டுதான் வாங்க முடியும். கடை ரோட்டேஷன் தொகையில மாசம் ஒரு சின்ன தொகை கட்டுறதுல எந்தப் பிரச்னையும் இல்லை” என்றபடி காரைக் கிளப்பினார்.

எனக்கு காரே வேண்டாம் பாஸ்!

ஓலா டாக்ஸியில் வந்து இறங்கிய 27 வயது ஃபேஷன் டிசைனர் ப்ரியா, ‘‘எனக்கு கார் வாங்க ஆசையே இல்லை’’ என்றார். ‘‘வீட்டுக்கும் ஆபீஸுக்கும் எட்டு கிலோமீட்டர் தொலைவு. தினமும் ஓலா, ஊபர்லதான் போயிட்டு இருந்தேன். இப்போ ஆபீஸ்கிட்ட மெட்ரோ வந்ததால, அதைப் பயன்படுத்துறேன். மெட்ரோ இல்லாத இடங்களுக்கு ஓலா, ஊபர்தான் பெஸ்ட்.

எனக்கு இதுவரைக்கும் கார் தேவைப்பட்டதே இல்லை. டாக்ஸியில் போறப்போ, ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலவாகும். இப்போ எனக்கு 75 ரூபாய்தான் செலவு. கார் வாங்கினா நிச்சயமா 250 ரூபாய் வரை செலவு செய்யணும். எனக்குத் தேவைனா அதிகபட்சம் ஒரு ஸ்கூட்டி வாங்குவேன். இ.எம்.ஐ போட்டா, வாங்குற சம்பளம் கையிலேயே இருக்காது. சேமிக்கவும் முடியாது. அதனால முழுத்தொகை கொடுத்துதான் வாங்குவேன். இரவு நேரங்கள்ல டாக்ஸியில் போறது பாதுகாப்பா இருக்கு’’ என்றார்.

என்ன சொல்கிறார் ஹைதராபாத் நபர்?

ஹைதராபாத்தில் கார் வாங்கும் முடிவில் இருக்கும் வாசகர் ஒருவரிடம் விசாரித்தோம். ‘‘என் பெயர் வாசுதேவன் வரதராஜன். நான் ஹைதராபாத்தில் ஒரு லிஃப்ட் நிறுவனத்தில் மேனேஜரா இருக்கேன். தினமும் ஆபீஸ் வேலையா 80 கிலோமீட்டர் பயணிக்கிறேன். அலைச்சல் இல்லாம பயணம் பண்ண கார்தான் பெஸ்ட். கம்பெனியில எனக்கு கார் கொடுத்திருந்தாலும், பர்சனலா பயன்படுத்தவும் கார் தேவைப்படுது. அதனால, கார் வாங்க முடிவு செஞ்சிருக்கேன். என்னால முழு விலை கொடுத்து ஒரு காரை எடுக்க முடியாது. இ.எம்.ஐ போட்டு தான் வாங்குறேன். மாசாமாசம் பணம் கட்டுறதுல எனக்கு எந்தச் சிரமமும் இல்லை’’ என்கிறார்.

கௌதமன்,  இராமன் இலட்சுமணன், வாசுதேவன் வரதராஜன்
கௌதமன், இராமன் இலட்சுமணன், வாசுதேவன் வரதராஜன்

நான் பி.எம்.டபிள்யூ வெச்சிருக்கேன்!

சென்னையில் தொழில் நடத்திவரும் கார்த்திக் மகேந்திரன், ‘‘என் தொழிலுக்கு கார் ரொம்பவே முக்கியம்’’ என்கிறார். ‘‘எனக்கு 28 வயசாகுது. நான் சொந்த தொழில் செய்றேன். ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் கார்ல போறேன். நான் வெச்சிருக்கிறது பி.எம்.டபிள்யூ கார். அதிக தொலைவு பயணிக்க கார்தான் வசதியா இருக்கு. அதுமட்டுமல்ல... கார் எனக்கு ஒரு சமூக மதிப்பைக் கொடுக்குது. நான் லோன் போட்டுதான் கார் வாங்கினேன். வாங்கிய பிறகு `எக்ஸ்ட்ரா கமிட்மென்ட் எடுத்துட்டோமோ!’னு கொஞ்சம் வருத்தமா இருந்தது. அப்புறம் சரியாபோச்சு. இப்போதைக்கு புது கார் வாங்குற ஐடியா இல்லை. ஆனா, அடுத்த கார் எடுக்கிற மாதிரி இருந்தா, அதுவும் கண்டிப்பா லோன்லதான் எடுப்பேன்’’ என்றார்.

ஓலா, ஊபருக்கு கார் ஓட்டினேன்... நஷ்டம்தான் மிஞ்சியது!

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது இராமன் இலட்சுமணனை போரூர் அருகே ஷேர் ஆட்டோவில் சந்தித்தோம். ‘‘நான் ரெண்டு கார் வெச்சிருக்கேன். ஆனா, எதுவுமே பர்சனல் பயன்பாட்டுக்கு இல்லை’’ என்றவரிடம், ‘‘கார் இருந்தும் எதுக்கு பாஸ் ஷேர் ஆட்டோ?’’ என்று கேட்டோம்.

‘‘கார் வாங்குறது பெரிய விஷயம் இல்லை. ஆனா, எனக்கு கார் தேவைப்படவேயில்லை. சென்னையில ரொம்ப வருஷமா இருக்கிறதால ரயில், ஆட்டோ, ஷேர் ஆட்டோதான் அதிகமா பயன்படுத்துறேன். சாஃப்ட்வேர் இன்ஜினீயரா நல்லா சம்பாதிக்கிறேன். கூடுதலா கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு ரெண்டு கார் லோன் போட்டு வாங்கி, ஓலா, ஊபர்ல டிரைவர் வெச்சு ஓட்டினேன்.

சொந்த காரா... வாடகை காரா?

நான் ஆரம்பிச்சப்போ டீசல் விலை 56 ரூபாய். இப்போ 75 ரூபாய். ஆரம்பத்துல நல்லா சம்பாதிச்சேன். இப்போ கட்டுப்படியாகல. அந்த கார் சும்மாதான் இருக்கு. எலெக்ட்ரிக் கார் வந்த உடனே, இதை எக்ஸ்சேஞ்ல போட்டு ஒரு எலெக்ட்ரிக் கார் வாங்கி ஓலா, ஊபர்ல விடலாம்னு காத்துட்டு இருக்கேன்’’ என்றார்.

இ.எம்.ஐ ஒரு சுமைதான்! ஆனால்...

இதேபோல 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கும் பல தரப்பினரிடம் பேசினோம். பெரும்பாலும் சென்னை, கோவை போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு காருக்கான தேவை மிகவும் குறைவாக இருக்கிறது. ஓலா, ஊபர், ஆட்டோ, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தையே இவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், புறநகர்ப் பகுதிகளில் இருப்பவர்கள் காருக்கான தேவை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘இ.எம்.ஐ ஒரு சுமை என்றாலும் கார் வாங்க அதைவிட சிறந்த வழியில்லை’ என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

எல்லோரிடமும், ‘‘நீங்கள் என்ன கார் வாங்கப்போகிறீர்கள்?’’ என்று பொதுவான ஒரு கேள்வியைக் கேட்டோம். ‘‘எலெக்ட்ரிக் கார், பி.எஸ்-6 கார் வரட்டும் பார்க்கலாம்’’ என்பதே பதிலாக வந்தது.

‘‘முன்பெல்லாம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஒரு காரைப் பயன்படுத்துவார்கள். இப்போது அந்தக் கால அளவு வெறும் மூன்று ஆண்டு களாகக் குறைந்துவிட்டது. இதனால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்து பவர்களும், ஓலா, ஊபர் பயன்படுத்து பவர்களும் அதிகரித்து விட்டனர்.

ஓலா, ஊபர் போன்ற நவீன டாக்ஸி நிறுவனங்கள் ஆட்டோமொபைல் விற்பனையை பாதிப்பது உண்மைதான். ஆனால், மந்தநிலைக்கு முக்கிய காரணம் அது கிடையாது’’ என்பதே துறைசார்ந்த நிபுணர்களின் கருத்து.