Published:Updated:

மிஸ்டர் பொதுநலம்!

ராம்குமார் ஆதித்தன்
பிரீமியம் ஸ்டோரி
ராம்குமார் ஆதித்தன்

அன்றாடம் பாதையில் பார்வையில் படுகிற அல்லது தான் எதிர்கொள்கிற பிரச்னைகளைப் பொதுநல வழக்குகள் மூலம் நீதிமன்றத்தின் காதுகளுக்குக் கொண்டு செல்வதுதான் ராம்குமார் ஆதித்தனின் வேலை.

மிஸ்டர் பொதுநலம்!

அன்றாடம் பாதையில் பார்வையில் படுகிற அல்லது தான் எதிர்கொள்கிற பிரச்னைகளைப் பொதுநல வழக்குகள் மூலம் நீதிமன்றத்தின் காதுகளுக்குக் கொண்டு செல்வதுதான் ராம்குமார் ஆதித்தனின் வேலை.

Published:Updated:
ராம்குமார் ஆதித்தன்
பிரீமியம் ஸ்டோரி
ராம்குமார் ஆதித்தன்

சாலையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். ஓர் உணவகத்தில், சாம்பார் கவரை வாயில் வைத்து ஊதிப் பிரிக்கிறார் வேலை செய்யும் ஊழியர். என்ன செய்வீர்கள்... ஒன்று, ‘கொரோனா பரவும் நேரத்தில் இப்படி கவரை வாயில் வைத்தெல்லாம் ஊதக்கூடாது’ என்று அவரைக் கண்டிப்பீர்கள். அல்லது, மனதுக்குள் திட்டிவிட்டு நகர்வீர்கள். ராம்குமார் ஆதித்தன், நேராக நீதிமன்றத்துக்குச் செல்வார். ‘அப்படிச் செய்யக்கூடாது என்று எல்லா உணவகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புங்கள்’ என்று நீதிபதிகள் உத்தரவிடுவார்கள்.

பைக்கில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் பைக்கில் இருபக்கமும் கண்ணாடி இல்லை. பின்னால் வரும் உங்கள் வாகனத்தைக் கவனிக்காமல் அவர் திடீரென பிரேக் பிடித்து நிற்கிறார். நீங்கள் தடுமாறி அவரது பைக்கில் மோதுகிறீர்கள். என்ன செய்வீர்கள்? கோபத்தில் திட்டுவீர்கள்; அல்லது வண்டிக்குச் சேதாரம் என்றால் அடித்துப் பிடித்து அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு கிளம்புவீர்கள். ராம்குமார் ஆதித்தன் நீதிமன்றம் செல்வார். ‘பின்னால் வரும் வாகனங்களைக் கவனிப்பதற்காக உள்ள கண்ணாடிகள் இல்லாமல் பைக் ஓட்டுவது சட்டப்படி குற்றம். அப்படிச் செல்பவர்களுக்கு 300 ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.

அன்றாடம் பாதையில் பார்வையில் படுகிற அல்லது தான் எதிர்கொள்கிற பிரச்னைகளைப் பொதுநல வழக்குகள் மூலம் நீதிமன்றத்தின் காதுகளுக்குக் கொண்டு செல்வதுதான் ராம்குமார் ஆதித்தனின் வேலை. திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழியைச் சேர்ந்த ராம்குமார், வழக்கறிஞர். கடந்த 6 ஆண்டுகளில் 72 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருக்கிறார். தள்ளுபடிகள், கண்டனங்கள், பாராட்டுகள் எதையும் மனதுக்குக் கொண்டுசெல்லாமல் தன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறார் ராம்குமார்.

மிஸ்டர் பொதுநலம்!

``எங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம்?’’

“இருட்டு பார்க்க பெரிசாத் தெரியும். சின்னதா ஒரு தீக்குச்சியைக் கொளுத்திப் பாருங்க... விலகியோடி ‘பளிச்’னு பார்வை பிடிபடும். இருட்டு இருட்டுன்னு தயங்கி நிக்காம நான் தீக்குச்சியைக் கொளுத்த முயல்கிறேன். இதுக்குப் பெரிய பின்புலமெல்லாம் இல்லை... சில பேர் செய்யவேண்டிய வேலையை சரியா செய்யமாட்டேங்கிறாங்க. நான் பாதிக்கப்படுறேன். இங்கே தவறுகளைக் கண்டிச்சு சரி பண்ண நீதிமன்றங்கள் இருக்கு. அங்கே போய் முறையிடுறேன். இந்த ஆறு வருஷத்தில நானே எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கு...” - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் ராம்குமார்.

ராம்குமாரின் அப்பா, வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா இல்லத்தரசி. 5 சகோதரர்கள்... எல்லோரும் மென்பொருள் பொறியாளர்கள். ராம்குமார் மட்டும் வழக்கறிஞர்... ஏன்?

“பி.பி.ஏ முடிச்சுட்டு வங்கித்தேர்வு எழுதினேன். டெல்லியில வேலை கிடைச்சுது. ஆனாலும் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வுதான் கனவு. வேலை பாத்துக்கிட்டே ரெண்டு தடவை தேர்வு எழுதினேன். முடியலே. வங்கி வேலையும் மனசுக்கு ஒட்டலே. எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்குப் போய் சுயமா ஏதாவது செஞ்சுக்கலாம்னு வந்துட்டேன்.

நண்பர்களோட சேர்ந்து சில தொழில்கள் செஞ்சேன். நிறைய இழப்புகள், ஏமாற்றங்கள்... நம்பிக்கையா இருந்தவங்க ஏமாத்தினாங்க. பெரும்பணத்தை இழந்து நின்னேன். அப்போதான் சட்டம் படிக்கணும்னு ஆர்வம் வந்துச்சு. கர்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழகத்துல எல்.எல்.பி முடிச்சேன். படிப்பை முடிச்சதும்தான் தெரிஞ்சுச்சு, ஒரு வழக்கறிஞருக்கு சட்டமும் நீதியும் எவ்வளவு அதிகாரம் குடுத்து வச்சிருக்குன்னு. சத்தம், சலசலப்பு இல்லாம, தெருவுல இறங்கி மோதாம, சட்டபூர்வமா தீர்வு காணக்கூடிய சக்தி வழக்கறிஞருக்கு இருக்கு.

முதல் பொதுநல வழக்கு 2014-ல போட்டேன். வெளிமாநிலங்கள்ல எல்.எல்.பி படிச்சவங்களை இங்கே வழக்கறிஞரா பதிவு செய்யணும்... இதுதான் முதல் வழக்கு. சுபமா முடிஞ்சது.

நம்மூர்ல ஒரு நடைமுறை இருக்கு... கல்யாணப் பத்திரிகைகள்ல அப்பா- அம்மா பேரைச் சேர்த்துப் போடுவோம். ஆனா, பத்திரம், பதிவேடுகள்னு சட்டபூர்வ ஆவணங்கள்ல அப்பா பேரை மட்டும்தான் போடுவோம். பெண்ணுக்கு எல்லாக் காலத்திலயும் அடையாளமா கணவன் பேரோ அப்பா பேரோதான் இருக்கு. டைவர்ஸ் வழக்குகள்லகூட, பெண்ணை நீதிமன்றத்துக்கு அழைக்கும்போது இவரோட மனைவின்னுதான் கூப்பிடுவாங்க. ‘இதை மாத்தணும், தாய் பேரையும் சட்டபூர்வ ஆவணங்கள்ல போடணும்’னு சொல்லி ஒரு வழக்குப் போட்டேன். ‘இதுக்கு சட்டரீதியா வழிமுறைகள் இல்லே’ன்னு தள்ளுபடி பண்ணிட்டாங்க.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருத்தர் ரெண்டு தொகுதியில போட்டியிடலாம். குஜராத் முதல்வரா மோடி இருந்தப்போ வதோதரா, வாரணாசின்னு ரெண்டு நாடாளுமன்றத் தொகுதிகள்ல போட்டியிட்டார். மோடி ஏற்கெனவே குஜராத் எம்.எல்.ஏவா நின்னு ஜெயிச்சிருக்கார். அதுக்கு மேல ரெண்டு தொகுதிகள்ல நிக்குறது தப்பு. அதேமாதிரி சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ரெண்டு பேரும் மேயரா இருந்துக்கிட்டே எம்.பியாவும் ஆனாங்க. ‘இதுமாதிரி தனிப்பட்ட காரணங்களுக்காக வகிக்கிற பொறுப்புகளை ராஜினாமா பண்றவங்க, அந்தப் பதவிக்காலம் முடியறவரைக்கும் வேறெந்தத் தேர்தலிலும் போட்டியிக்கூடாது’ன்னு ஒரு வழக்குப் போட்டேன். இதுக்கும், ‘சட்ட வரையறையில்லை... நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கணும்’னு தீர்ப்பு வந்துச்சு.

மிஸ்டர் பொதுநலம்!

தேர்தல்ல போட்டியிடுறவங்க மேல கிரிமினல் வழக்குகள் இருந்தா அதைப் பத்திரிகைகள்ல வெளியிடணும்னு 2016-லயே வழக்குப் போட்டேன். அப்போ அது தள்ளுபடியாகிடுச்சு. 2018-ல வேறொரு வழக்குல அதைக் கட்டாயமாக்கணும்னு தீர்ப்பு வந்துச்சு. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால, இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி, சசிகலா தரப்பும் தேர்தல் கமிஷனுக்குப் போனாங்க. அதேநேரத்துல முலாயம் சிங் யாதவும் அவரோட மகனும் அவங்க கட்சிச் சின்னத்துக்கு உரிமை கோரிப் போனாங்க. அந்த வழக்கை 7 நாள்ல விசாரணை நடத்தித் தீர்ப்பு சொன்ன தேர்தல் கமிஷன், இரட்டை இலையை முடக்கிக் கிடப்புல போட்டுருச்சு. இங்கிருந்து கட்சிக்காரங்களும் நெருக்கடி தரலே. நான், ‘சீக்கிரமே விசாரிச்சுத் தீர்ப்பு சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடணும்’னு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைல வழக்குப் போட்டேன். நீதிமன்றம் ‘குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ள தீர்ப்பு தரணும்’னு உத்தரவு போட்டுச்சு. அதுக்கப்புறம்தான் தினகரன் வழக்குல இன்வால்வ் ஆனாரு.

கொரோனாவால வருமான இழப்பு ஏற்பட்டதால மக்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கிறதா தமிழக அரசு சொல்லுது. இந்தக் காலகட்டத்துல அரசு ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முழுச் சம்பளம் கிடைக்குது. லட்சக்கணக்கான மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அரசு கொடுக்கிற இந்த 4,000 ரூபாயை வாங்குறாங்க. எடப்பாடி முதல்வரா இருந்தப்போ 1,000 ரூபா கொடுத்தார். அப்போ ‘இந்த 1,000 ரூபாய் வேண்டாங்கிறவங்க விட்டுக் கொடுக்கலாம்’ன்னு அறிவிச்சார். வெறும் 563 பேர்தான் விட்டுக்கொடுத்தாங்க. இதையும் பொதுநல வழக்கா எடுத்திட்டுப் போனேன். வழக்கு நிலுவையில் இருக்கு.

இப்படி நிறைய வழக்குகள்... அரசுப் பேருந்தை ஜப்தி பண்ணிக் கொண்டுபோறது தொடங்கி, 2 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு ஸ்கூட்டிக்கு மானியம் கொடுத்தது வரைக்கும் எதெல்லாம் தப்புன்னு படுதோ அதையெல்லாம் நீதிமன்றத்துக்குக் கொண்டுபோயிருக்கேன். முதல்முறை லாக்டௌன் போட்டப்போ டாஸ்மாக்கைத் திறக்கக்கூடாதுன்னு வழக்கு போட்டது நான்தான். கொரோனா தொடர்பாவும் நிறைய வழக்குகள் போட்டிருக்கேன். பல வழக்குகள் நிலுவையில இருக்கு...” என்ற ராம்குமாரிடம் “தொடர்ந்து பொதுநல வழக்குகள் போட்டா நீதிபதிகள் எரிச்சலடைய மாட்டாங்களா?” என்றேன்.

“பாராட்டத்தான் செய்வாங்க. ‘மது நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கணும்’னு ஒரு வழக்குப் போட்டப்போ நீதிபதி கிருபாகரன் பாராட்டினார். தாமிரபரணி தொடர்பான ஒரு வழக்குல நீதிபதி சத்யநாராயணா பாராட்டியிருக்கார். ஒரே ஒருமுறை அபராதம் விதிச்சிருக்காங்க. முதல்முறை லாக்டௌன் போட்டப்போ மூணு மாதம் இ.எம்.ஐயெல்லாம் தள்ளி வச்சாங்க. லாக்டௌன்ன் நீட்டிச்சதால மேலும் மூணு மாதம் தள்ளி வைக்கணும்னு ஒரு வழக்குப் போட்டேன். போதிய ஆவணங்கள் இணைக்காததால 10,000 ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்குக் கட்டச் சொன்னாங்க. அதைத் தவிர வேறெந்தப் பிரச்னையும் வந்ததில்லை.”

``வழக்குக்கான செலவுகள்..?’’

“சொந்தக்காசுதான். வழக்காட சங்கர், கிருஷ்ணன், அந்தோணி சீசஸ், ராஜசேகர், மாரியப்ப பாபுன்னு ஒரு வழக்கறிஞர் குழு இருக்கு. நீதிமன்றக் கட்டணம், ஜெராக்ஸ்னு ஒரு வழக்குக்கு அதிகபட்சமா 3,000 ரூபா செலவாகும். வழக்கறிஞர் தொழில்ல எனக்குக் கிடைக்கிற பணத்துல ஒரு தொகையை இதுக்குச் செலவு பண்ணுவேன்...” என்கிறார் ராம்குமார்.

ராம்குமாரின் மனைவி இந்துமதி கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறார். “பெரிசா தேவைகள் இல்லை சார். நான் போடுற வழக்குகள்ல சொந்த ஆதாயம் இருக்காது. சட்டத்தை மீறமாட்டேன். தனிநபர்கள் யாருக்கும் பாதிப்பு இருக்காது. சிஸ்டத்தை மாத்தணும்னு நினைக்கிறேன். குறிப்பா, நம்ம தேர்தல் நடைமுறைகள்ல பல பிரச்னைகள் இருக்கு. அரசு நிர்வாகத்துல ஒரு பொறுப்பற்ற தன்மை இருக்கு. ஆக்கிரமிப்புகள்ல கட்டுற கட்டங்களை இடிக்கச் சொல்றாங்க. அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் கொடுத்த, தண்ணீர் கொடுத்த, கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் மேல நடவடிக்கை எடுக்கப்படுறதேயில்லை. இதையும் கேள்விக்குள்ளாக்கணும்...”

அடுத்தடுத்து நிறைய வேலைகள் வைத்திருக்கிறார் ராம்குமார்!