Published:Updated:

பகலையும் இருட்டாக்குகிறது இரவு ஊரடங்கு!

இரவு ஊரடங்கு!
பிரீமியம் ஸ்டோரி
இரவு ஊரடங்கு!

புயல், வெள்ளம்ன்னு என் வயசுக்கு பல அழிவுகளைப் பாத்திருக்கேன். இதுமாதிரி பசி, பட்டினியால சாகுற அழிவை இப்பத்தான் பாக்குறேன்

பகலையும் இருட்டாக்குகிறது இரவு ஊரடங்கு!

புயல், வெள்ளம்ன்னு என் வயசுக்கு பல அழிவுகளைப் பாத்திருக்கேன். இதுமாதிரி பசி, பட்டினியால சாகுற அழிவை இப்பத்தான் பாக்குறேன்

Published:Updated:
இரவு ஊரடங்கு!
பிரீமியம் ஸ்டோரி
இரவு ஊரடங்கு!

உலகத்தை நிலைகுலையச் செய்துகொண்டிருக்கிறது கொரோனா. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் மக்கள் அல்லாடுகிறார்கள். இன்னொரு பக்கம் தடுப்பூசித் தட்டுப்பாடு. ஆக்சிஜனும், மருந்துகளும்கூட கிடைக்கவில்லை என்கிறார்கள். நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேபோகிறது. மிகவும் இக்கட்டான சூழலில், தமிழக அரசு, ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கை அறிவித்திருக்கிறது. “கொரோனா பற்றிய அச்சம் சிறிதும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்ட நிலையில், ஊரடங்கு ஒன்றே தீர்வு” என்கிறது அரசு. அதேநேரத்தில் இந்த இரவு ஊரடங்கு, பலநூறு எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

வினோத்
வினோத்

சென்னை, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகே கவலை தோய்ந்த முகத்தோடு ஆட்டோவில் அமர்ந்திருக்கிறார் வினோத். வழக்கமாக மாலை 4 மணிக்கு மடிப்பாக்கத்திலிருந்து கிளம்பி வருபவர், மறுநாள் காலை 8 மணிவரை ஆட்டோ ஓட்டுவார். குறைந்தது ஆயிரம் ரூபாய் கையில் நிற்கும். இப்போது வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது.

“எங்க அப்பா கூத்துக்கலைஞர். நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது இறந்துட்டார். ஆனாலும் அவர் பேரை இன்னைக்கும் சொல்லுவாங்க. அப்பா கூத்துல இருந்ததாலயோ என்னவோ எனக்கும் சினிமாவுல நடிக்கணும்னு ஆசையிருந்துச்சு. பகல்ல வாய்ப்புத் தேடுவேன்... இரவுல ஆட்டோ ஓட்டுவேன். என் மனைவி டெய்லர். வீட்டிலயே தையல் மெஷின் போட்டு தைப்பாங்க. ரெண்டு பிள்ளைங்க. வீட்டு வாடகை, பிள்ளைகளுக்கான படிப்புன்னு கைக்கு வர்றதும் போறதும் சரியா இருக்கும். போனவருஷம் லாக்டௌன் போட்டப்போ, பிள்ளைகளைக் கொண்டுபோய் மாமனார் வீட்டுல விட்டுட்டு நாங்க இங்கே முடங்கிக்கிடந்தோம். எனக்கு சுத்தமா வேலையில்லை. என் மனைவி மாஸ்க் தச்சு ஓரளவுக்கு பட்டினி இல்லாமப் பாத்துக்கிட்டாங்க. கொஞ்சம் மீண்டு இப்பத்தான் வெளியில வந்தோம். பகல்ல கடுமையான போட்டி இருக்கும். ஸ்டாண்ட்காரங்க வேற தொந்தரவு செய்வாங்க. ராத்திரியில நிம்மதியா ஓட்டலாம். இப்போ நைட் லாக்டௌன் போட்டுட்டதால அந்த வருமானம் சுத்தமா காலி. காலையில அஞ்சு மணிக்குக் கிளம்பிவந்தேன். நைட்டு எட்டு மணிக்குள்ள அறுநூறு ரூபாய்க்கு ஓட்டுனா பெரிசு. நூத்தம்பது ரூபா எரிவாயுவுக்குப் போயிரும். நாலு டீ, அம்மா ஓட்டல் சாப்பாடுன்னு நம்ம செலவு கொஞ்சம்... முன்னூத்தம்பது ரூபா கையில நின்னா பெரிசு. இனிமே இந்த வாழ்க்கைக்குப் பழகணும்...”- சோகம் ததும்பச் சிரிக்கிறார் வினோத்.

வினோத்தின் சினிமா கனவு, பல்லாண்டு போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில்தான் நிறைவேறியிருக்கிறது. மறைந்த இயக்குநர் ஜனநாதனின் பார்வையில் பட்டு, ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதியோடு நடித்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியைக்கூட கொண்டாட முடியாத அளவுக்கு தவிக்க வைத்திருக்கிறது இந்த லாக்டௌன்.

ராஜா
ராஜா
குடும்பத்துடன் ராஜா
குடும்பத்துடன் ராஜா

ராஜாவுக்கு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமகளூர்தான் சொந்த ஊர். 22 வருடமாக பேருந்து ஓட்டுகிறார். இரண்டு குழந்தைகள். சென்னை- பேராவூரணி வழித்தடத்தில் ஆம்னி பேருந்து ஓட்டிவந்த ராஜாவுக்கு இப்போது வேலையில்லை.

“புயல், வெள்ளம்ன்னு என் வயசுக்கு பல அழிவுகளைப் பாத்திருக்கேன். இதுமாதிரி பசி, பட்டினியால சாகுற அழிவை இப்பத்தான் பாக்குறேன். வழக்கமா, நைட் எட்டு மணிக்கு பஸ்ஸெடுப்பேன். 5.30க்கு நிறுத்துவேன். மாசத்துக்கு 15 டூட்டி இருக்கும். ஒரு டூட்டிக்கு 1,400 ரூபா சம்பளம் கிடைக்கும். குழந்தைகளைப் படிக்கவச்சு, பட்டினியில்லாம கொஞ்சம் கௌரவத்தோட வாழ இது போதும். போன வருஷம் கொரோனா வந்து ஏழெட்டு மாசம் வேலையே இல்லை. நகைகளை அடகுவச்சு ஓட்டுனோம். அந்த வகையில 3 லட்சம் கடனாகிப்போச்சு. லாக்டௌன் முடிஞ்சபிறகு பஸ்ஸெடுத்தாலும் பெரிசா டிக்கெட் இல்லை. ஆனாலும் மாசத்துக்கு அஞ்சாறு டூட்டியாவது கிடைச்சுச்சு. இப்போ, நைட் லாக்டௌன்ல அதுவும் போச்சு. பகல்ல பஸ் போட்டுப் பாத்தோம். அஞ்சு டிக்கெட்கூட வரலே. இப்போதைக்கு நிலைமை சீராகாது போல... அதனால வீட்டுக்கு முன்னால பஜ்ஜிக்கடை போடலாமான்னு பாத்துக்கிட்டிருக்கேன்...” என்கிறார் ராஜா.

பெருமாள்
பெருமாள்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய முகப்பில் ஒவ்வொரு முகத்தையும் எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு நிற்கிறார் பெருமாள். ராமநாதபுரம் அருகேயுள்ள கள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. தொடர்ந்த வறட்சி, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னைக்கு விரட்டியிருக்கிறது.

“விவசாயம் ஒண்ணும் வேலைக்காகலே. ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுன்னு பெரிய குடும்பம். எல்லாத்துக்கும் பசியாத்தணுமே... தங்கச்சி குடும்பம் சென்னைக்கு வந்து இந்தப்பகுதியில செருப்புக்கடை வச்சிருந்தாங்க. ‘இந்தப்பக்கம் வந்திருன்னே பிழைச்சுக்கலாம்’ன்னு தங்கச்சி அழைச்சுச்சு. ஏதோவொரு தைரியத்துல வந்துட்டோம். பிளாட்பாரத்துல செருப்புக்கடை போட்டேன். மூணு பிள்ளைகளுக்குக் கல்யாணத்தையும் முடிச்சுட்டேன். என் செலவெல்லாம் போக ஒருநாளைக்கு குறைஞ்சது ஐநூறாவது கையில நிக்கும்.

முதல்முறை லாக்டௌன் போட்டபிறகு கடை போடமுடியலே. சரக்கையெல்லாம் மூட்டையா கட்டி போட்டுட்டு எட்டுமாசம் வீட்டுக்குள்ளயே கிடந்தேன். இருந்த நகைநட்டையெல்லாம் அடகு வச்சு இத்தனை நாள் சாப்பிட்டாச்சு. இதுக்குமேல சும்மா இருந்தா சரியாவராதுன்னு, ரிப்பேராகி கிடந்த சைக்கிளை சரி பண்ணி டீ விக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த ரெண்டு பிளாஸ்க்லயும் 50 டீ பிடிக்கும். பத்து வாட்டர் பாட்டில், ரெண்டு பிஸ்கட் டப்பாவோட நைட்டு 7 மணிக்குக் கிளம்புவேன். 12 மணி வரைக்கும் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் வாசல்ல நிப்பேன். அதுக்குப்பிறகு மார்க்கெட் போயிருவேன். வித்துட்டா, திரும்பவும் போட்டு எடுத்துக்கிட்டு வருவேன். அதிகாலை மூணு மணிக்குள்ள எப்படியும் 80 டீ வித்திடும். வாட்டர் பாட்டில், பிஸ்கட்ன்னு எல்லாம் சேர்த்தா, செலவு போக ஐநூறு ரூபா மிஞ்சும். இப்போ நைட் லாக்டவுனால பகல் வியாபாரம்... பகல்ல வழக்கமா சிலபேரு இந்தப்பகுதியில விக்குறவங்க இருக்காங்க. ஏகப்பட்ட டீக்கடைங்க வேற இருக்கு. நமக்கிட்ட யாரு வாங்கிக் குடிப்பா... காலையில 5 மணிக்கு வந்தேன்... 7 மணிக்கு கிளம்பிட்டேன். 2 மணி நேரத்துல பதினைஞ்சு டீகூட விக்கலே. நாள் முழுதும் நின்னாக்கூட இருநூறு ரூபா கிடைச்சாப் பெரிசு. இன்னுமொரு பொண்ணைக் கரையேத்தனும். மூணு ஜீவன்கள் மூணு வேளை சாப்பிடனும்... இந்தக் கொரோனா என்னச் செய்யக்காத்திருக்கோ”- கலக்கமாகப் பேசுகிறார் பெருமாள்.

பிரித்திஷா - பிரேம்குமரன்
பிரித்திஷா - பிரேம்குமரன்

கோயம்பேட்டில் விரைவுப்பேருந்துகள் வெளியேறும் ஆர்ச்சை ஒட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது ‘மகிழம்’ வாகனம். வாகனத்தில் நின்று டீ போட்டுக்கொண்டிருக்கிற பிரித்திஷா, திருநங்கை. சமோசா தயாரித்துக்கொண்டிருக்கிற பிரேம்குமரன், திருநம்பி. வழக்கமாக இரவு 10மணிக்கு தொடங்கும் இந்த மொபைல் டீக்கடை, அதிகாலை 5 மணிக்கு முடியும். தேடிவந்து டீ, பிஸ்கெட் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

“நாங்க ரெண்டு பேரும் ஃபேஸ்புக்லதான் சந்திச்சோம். பிரேம் அவங்க அப்பாவோட மளிகைக்கடையில வேலை பார்த்துக்கிட்டிருந்தார். நான் தியேட்டர் ஆர்டிஸ்ட். நிறைய நாடகங்கள் பண்ணியிருக்கேன். திரைப்படங்கள்லயும் நடிச்சிருக்கேன். ரெண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போச்சு. திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு யோசிச்சோம். அநேகமா, இந்தியாவுல திருநங்கைக்கும் திருநம்பிக்கும் நடந்த முதல் திருமணம் எங்களோடதுதான். ஆனா, எங்களால நிம்மதியா பிழைக்க முடியலே. சொந்தமா ஏதாவது செய்யலாம்ன்னு நாங்க வச்சிருந்த நகைகளையெல்லாம் வித்து 5 லட்சம் முதலீட்டுல ஒரு டீக்கடை ஆரம்பிச்சோம். முதல் அலை லாக்டவுனால கடையைத் திறக்கவேமுடியலே. 5 லட்சத்துல வெறும் 22 ஆயிரம்தான் திரும்ப கிடைச்சுச்சு. சாப்பாட்டுக்கே சிரமமாப் போச்சு. நாங்க மட்டுமில்லாம எங்களை நம்பி ரெண்டுபேர் கூட இருக்காங்க. அவங்களையும் பாத்துக்கனும். போன ஜூலை மாதத்துல இருந்து, ராத்திரி சைக்கிள்ல டீ போட்டு எடுத்துக்கிட்டு கோயம்பேடு மார்க்கெட், பஸ்ஸ்டாண்ட்ல விக்க ஆரம்பிச்சோம். அதுலயும் பல பிரச்னை. வழக்கமா அந்தந்தப்பகுதிகள்ல டீ விக்கிறவங்க ஆள்களை வச்சு மிரட்டி விரட்டுவாங்க. ரவுடிங்க சைக்கிளை தள்ளி விடுவாங்க. மேல கை வைப்பாங்க. இன்னொரு பக்கம் போலீஸ் தொல்லை. திருநங்கை, திருநம்பின்னு தெரிஞ்சா இன்னும் இளக்காரமாப் போயிரும். நாங்கள்லாம் பிச்சையெடுக்கனும், இல்லேன்னா பாலியல் தொழில் செய்யனும்... நேர்மையா பிழைக்கனும்ன்னு நினைச்சா விடமாட்டாங்க... சமீபத்துல நண்பர்கள் உதவியோட இந்த அபே வண்டியை வாங்கி ‘மகிழம்’னு பேரு வச்சு மொபைல் டீக்கடை ஆரம்பிச்சோம். டீ, காபி, பிஸ்கட், சமோசான்னு எல்லாம் இருக்கும். ராத்திரி 10 மணிக்கு கோயம்பேடு ஆர்ச்கிட்ட கொண்டு போய் நிறுத்துவோம். 5 மணி வரைக்கும் வியாபாரம் போகும். 2000 ரூபாய்க்கு வித்தா 700 ரூபா நிக்கும். அதிலயும் ‘அங்கே நிறுத்தாதே, இங்கே நிறுத்தாதே’ன்னு ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து வரும். இப்போ லாக்டவுனால அதுவும் போச்சு. பகல்ல வண்டிய எங்கே கொண்டுபோய் நிறுத்தினாலும் ரெண்டு பேர் வந்து வண்டியை எடுன்னு விரட்டுறாங்க. வாழ்றதா சாகுறதான்னே தெரியலே...” - கண் கலங்குகிறார் பிரித்திஷா.

ராகுல்
ராகுல்

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஓர் உணவகத்தின் வாசலில் மொபைல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் ராகுல். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். இங்கு ஒரு பொறியியல் கல்லூரியில் நான்காமாண்டு படிக்கிறார். இரவு மட்டும் ஸ்விக்கி டெலிவரி பாயாக பணியாற்றுகிறார்.

“அப்பா விவசாயம் பாக்குறார். விவசாயத்துல போட்ட முதலை எடுக்கிறதே பெரிய விஷயமாயிருக்கு. சாப்பிட, தங்கன்னு அவர்கிட்ட பணம் கேட்க சங்கடமாயிருக்கு. நம் தேவைக்காவது தேத்திக்கலாமேன்னு இந்த வேலையில சேந்தேன். இரவு 7 மணியில இருந்து 1 மணி வரைக்கும். அரும்பாக்கம் மண்டலத்துல ஏதாவது ஒரு ரெஸ்ட்ராண்ட் வாசல்ல இருப்பேன். 700ல இருந்து 800 ரூபா வரைக்கும் கிடைக்கும். சனி, ஞாயிறுன்னா 1000 ரூபாய் வரைக்கும் சம்பாதிப்பேன். தள்ளுவண்டிக் கடையில சாப்பிட்டுக்குவேன். ரூம் வாடகை 1300 ரூபாய் போக அப்பாவுக்கு மாசம் மூவாயிரமாவது அனுப்பிருவேன். நைட் லாக்டவுன்... ஞாயிற்றுக்கிழமை முழுசா லாக்டவுன்... இப்போ சாயங்காலம் 6 டூ 10 ஷிப்ட் போட்ருக்காங்க. இந்த டைம்ல பெரிசா ஆர்டர் விழாது. நேத்து 250 ரூபா கிடைச்சுச்சு. இன்னைக்கு என்ன கிடைக்கும்னு தெரியலே... அப்பாகிட்ட பணம் கேட்கவும் வெக்கமாயிருக்கு...”- கலங்குகிறார் ராகுல்.

இன்னும் சொல்லப்படாத கதைகள் ஏராளம். நோயில் இருந்து வாழ்தலுக்கான போராட்டம் மனிதர்களை அச்சுறுத்துகிறது என்றால் வாழ்க்கைக்கான போராட்டம் இன்னொருபுறம் அச்சுறுத்துகிறது.

பகலையும் இருட்டாக்குகிறது இரவு ஊரடங்கு!
பகலையும் இருட்டாக்குகிறது இரவு ஊரடங்கு!
பகலையும் இருட்டாக்குகிறது இரவு ஊரடங்கு!