Published:Updated:

சிறையில்தான் சதித்திட்டம்... துணைபோகும் அதிகாரிகளுக்கு ‘விசேஷ’ ஏற்பாடு!

புதுச்சேரி மத்திய சிறை
பிரீமியம் ஸ்டோரி
News
புதுச்சேரி மத்திய சிறை

பதறவைக்கும் புதுச்சேரி மத்திய சிறைக்கைதிகள்

‘‘சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களைத் திருத்துவதற்காக உருவாக்கப்பட்டவைதான் சிறைச்சாலைகள். ஆனால் புதுச்சேரி மத்திய சிறைச் சாலை, குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் கூடமாக மாறிவருகிறது” என்று கதறுகின்றனர் புதுச்சேரி மக்கள்.

‘புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருக்கிறது’ என்று புதுச்சேரி சிறைக்குள் இருந்தபடி தினேஷ் சர்மா என்கிற விசாரணைக்கைதி மிரட்டல்விடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைத்துறையும் காவல் துறையும் அதிரடி சோதனையை நடத்தியதில், சிறைக்கைதிகளிடம் இருந்து 30 செல்போன்கள் சிம்கார்டுகளுடன் கைப்பற்றப்பட்டன. கைதிகளுக்கு உதவியதாக ஏழு வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில், புதுச்சேரி மத்திய சிறைச்சாலைக்குள் நடக்கும் அத்துமீறல்கள்குறித்து விசாரணையில் இறங்கினோம். இதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ‘‘புதுச்சேரியில் நிகழும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுக்கான திட்டமிடுதலில் 90 சதவிகிதம் சிறைக்குள்தான் வகுக்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு காவல்துறை பாதுகாப்பில் சென்ற ஜெகன் என்கிற கைதி படுகொலை செய்யப் பட்டார். சில மாதங்களுக்கு முன்பு அன்பு ரஜினி என்கிற ரெளடி கொலை செய்யப்பட்டார். பிப்ரவரி 5-ம் தேதி பட்டப்பகலில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வேல்முருகனை வெட்டிச் சாய்த்தார்கள் கூலிப்படையினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அதேநாளில் புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரெளடி ஜெயபால் என்பவரும் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

புதுச்சேரி மத்திய சிறை
புதுச்சேரி மத்திய சிறை

மேற்குறிப்பிட்ட கொலைகள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறைக்குள் இருந்தவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதே அதற்கு சாட்சி. சிறைக்குள் செல்போன் புழக்கத்தைத் தடுக்க முடியாமல், 2012-ம் ஆண்டு 75 லட்சம் ரூபாய் செலவில் செல்போன் ஜாமர் கருவியைப் பொருத்தியது காவல்துறை. சிறைக்குள்ளிருந்து இவ்வளவு செல்போன்கள் கைப்பற்றப்படுவதைப் பார்க்கும்போது, ஜாமர் கருவி பொருத்தப்பட்டதே கணக்குக்காட்டத்தான் என்பது தெளிவாகிறது’’ என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலத்த பாதுகாப்புடன் இருக்கும் சிறைக்குள் செல்போன்கள் எப்படிச் செல்கின்றன? அடிதடி வழக்குகளில் சிறை சென்று வந்த ஒருவரிடம் பேசினோம். ‘‘கஞ்சா, பீடி, செல்போன் என சிறைக்குள் புழங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் மொத்த விற்பனைதாரர்களே தண்டனைக் கைதிகள்தான். விசாரணைக்கைதிகள் தான் சிறை வார்டன்கள் சப்ளை செய்யும் சாதாரண செல்போன்களை பணம் கொடுத்து வாங்குவார்கள். ஆனால், தண்டனைக்கைதிகளுக்கு அப்படியல்ல. அவர்களுக்கு ஆண்ட்ராய்டுபோன்தான். அது உள்ளே வரும் முறையே வேறு.

புதுச்சேரி மத்திய சிறை
புதுச்சேரி மத்திய சிறை

உயிருடன் உள்ள பூனையின் தோலைக் கிழித்து அதற்குள் செல்போன், கஞ்சா பொட்டலங்கள், பீடிக்கட்டுகளை வைத்து கயிற்றால் கட்டி வெளியிலிருந்து தூக்கிப்போடு வார்கள். கீழே விழும்போது பூனை வலியில் அலறும். அந்தச் சத்தம்தான் சிக்னல். சமையல், தோட்ட வேலை களில் இருக்கும் தண்டனைக்கைதிகள் அந்தப் பூனையின் உடலில் வைத்து அனுப்பப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு பூனையின் உடலை வெளியில் தூக்கி வீசிவிடுவார்கள். இப்படி வரும் செல்போன்களை சிறை வளாகத்துக்குள்ளேயே புதைத்து வைத்து, தேவையானபோது எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் அதிகாரி களுக்கு வெளியே சொகுசு பங்களாவில் சில ‘விசேஷ’ ஏற்பாடுகளையும் செய்து தருவார்கள்’’ என்றார்.

சிறைத்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் இதுகுறித்து நம்மிடம், ‘‘எல்லா சிறைச்சாலைகளிலும் பணத்துக்காக மட்டுமே கைதிகளுக்கு செல்போன் விற்பது கிடையாது. கைதிகள் செல்போன் கேட்டு நாம் கொடுக்க வில்லையென்றால், ‘உன் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவோம்’ என்று எங்களையே மிரட்டு வார்கள். தற்போது நடைமுறையில் உள்ள சிறைத்துறை சட்டத்தின்படி செல்போன் பயன்படுத்தும் கைதி களுக்கு, வெறும் 200 ரூபாய் அபராதம் விதிப்பதுதான் நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை. அந்த வழக்கைக்கூட நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் போட வேண்டும். ஏற்கெனவே அவர்கள்மீது இருக்கும் வழக்குகளுடன் ஒப்பிட்டால் இது அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ஆகையால், சிறையில் செல்போன் வைத்திருப்பவர்களைக் கண்டித்தால், ‘தேவையில்லாமப் பேசாதீங்க... கேஸ் போடுங்க, நாங்க பாத்துக்குறோம்’ என்று திமிராகப் பேசுவார்கள். நாம் வழக்கு பதிவுசெய்தால், ‘ஆமாம், சிறைக்குள் செல்போன் வைத்திருந்தேன்’ என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு அபராதத்தைக் கட்டிவிட்டு கூலாக வருவார்கள். சட்டம் இப்படி இருக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள்குறித்து விளக்கம் கேட்க புதுச்சேரி மத்திய சிறை கண்காணிப்பாளர் கோபிநாத்தைத் தொடர்புகொண்டோம். ‘‘உயரதிகாரிகள் உத்தரவில்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன்’’ என்று தொடர்பை கட் செய்துவிட்டார்.