அலசல்
சமூகம்
Published:Updated:

“எனக்கும் வயிறு இருக்குதுல்ல சார்?” - ஐந்து வருடங்களாகக் கூலி இல்லை…

சந்திரகுரு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரகுரு

மயான ஊழியரை வஞ்சிக்கும் புதுச்சேரி அரசு

புழுப்பூத்து, துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் வீதிகளில் கிடக்கும் ஆதரவற்றவர்களின் சடலங்களைக் காவல்துறையின் உத்தரவின் பேரில் அடக்கம் செய்துவரும் சந்திரகுருவுக்கு, கடந்த ஐந்து வருடங்களாக அதற்கான கூலியைத் தராமல் இழுத்தடித்து அநியாயம் செய்துவருகிறது புதுச்சேரி அரசு.

சுற்றுலாப் பகுதியான புதுச்சேரியில், வருடம் முழுவதும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலத்தவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், மருத்துவச் சிகிச்சைக்காகத் தமிழகப் பகுதிகளில் இருந்துவரும் முதியவர்கள் உள்ளிட்டவர்கள் யாசகர்களாக மாறி, வீதிகளில் தஞ்சமடைந்து விடுகிறார்கள். வயோதிகம், நாள்பட்ட நோய்களால் அவர்கள் உயிரிழந்து கிடக்கும்போது, அந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, பின்னர் அடக்கம் செய்கிறது காவல்துறை. கடந்த 25 வருடங்களாகக் காவல்துறைக்காக அடக்கம் செய்யும் பணியைச் செய்துவருபவர், புதுச்சேரியைச் சேர்ந்த மயான ஊழியர் சந்திரகுரு.

அதுமட்டுமன்றி, கொலை, தற்கொலை, தீக்குளிப்பு என அழுகி, சிதைந்துபோன சடலங்களை மீட்பதற்குக் காவல்துறை முதலில் அழைப்பது சந்திரகுருவைத்தான். ஒரு சடலத்தை எடுத்துச் செல்ல 750 ரூபாயும், அதை அடக்கம் செய்ய 250 ரூபாயும் நிர்ணயித்திருக்கிறது புதுச்சேரி அரசு. நேரம் காலம் பார்க்காமல் இந்த வேலையைச் செய்துவரும் சந்திரகுருவுக்கு, கடந்த ஐந்து வருடங்களாக நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அவருக்கான கூலியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடும் வறுமையில் தவித்துவரும் சந்திரகுரு, சடலங்களை அடக்கம் செய்ததற்கான ரசீதுகளுடன் நகராட்சி அலுவலகத்துக்குப் பலமுறை அலைந்தும் பலனில்லை.

சந்திரகுரு
சந்திரகுரு

திப்புராயப்பேட்டை மயானத்தில், சடலங்களை எரியூட்டும் மேடைக்கு அருகில் படுத்திருந்த சந்திரகுருவைச் சந்தித்தோம். ‘‘படிப்பு ஏறாததால அஞ்சாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டேன். கொஞ்சநாள் சும்மா சுத்திட்டு இருந்தேன். வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்குற இந்த மயானத்துல விளையாட்டா இந்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் இதுவே தொழிலா மாறிப்போயிடுச்சி.

சந்திரகுரு
சந்திரகுரு

புதுச்சேரியில எங்கே பொணம் கெடந்தாலும் என்னைத்தான் தூக்கக் கூப்பிடுவாங்க. ஆரம்பத்துல ஒரு பொணத்துக்கு 100 ரூபா கொடுத்தாங்க. அப்போல்லாம் தள்ளுவண்டியிலதான் எடுத்துட்டு வருவேன். அரசு ஆஸ்பத்திரி கதிர்காமத்துக்குப் போயிட்டதால, அவ்ளோ தூரம் என்னால வண்டி தள்ள முடியாதுனு சொன்னேன். அதுக்கப்புறம்தான் 750+250 ரூபாய் தர்றேன்னு சொன்னாங்க. கையில இருந்த பணத்தைப் போட்டு, 10 பைசா வட்டிக்குக் கொஞ்சம் கடன் வாங்கி, ஒன்றரை லட்சம் ரூபாய்ல செகண்ட் ஹேண்ட்ல ஆம்னி ஆம்புலன்ஸ் வாங்கினேன். கொஞ்ச நாள்தான் ஒழுங்கா கூலி கொடுத்தாங்க. அப்புறம் `ஃபண்ட் இல்லை, ஃபண்ட் இல்லை’னு சொல்லி 2015-லருந்து கூலி கொடுக்கறதைச் சுத்தமா நிறுத்திட்டாங்க. அதனால, ரிப்பேரான ஆம்புலன்ஸைக் கூட சரிசெய்ய முடியாம அப்படியே போட்டுவெச்சுட்டேன்.

நைட் ஒரு மணிக்கெல்லாம் கூட போலீஸ்காரங்க அதிகாரமா வந்து வீட்டுக் கதவைத் தட்டுவாங்க. நம்மால குடும்பத்துக்குக் கஷ்டம் வரக் கூடாதுனு தான் சுடுகாட்டுலயே தங்கிக்கிறேன். ‘கூலி வரலை, அதனால பொணம் எடுக்க வரலை’னு சொன்னா, ‘உன் மேல கேஸ் போட்ருவேன்’னு மிரட்டி கூட்டிட்டுப் போயிடுவாங்க. துண்டு துண்டா நறுக்கி சாக்கடையில போட்ட பாடியைக்கூட நான் தேடி எடுத்து அடுக்கி வெச்சிருக்கேன். ஆக்ஸிடென்ட்லயும், கொலை செய்யப்பட்டும் சிதைஞ்சுபோன பாடிங்களையெல்லாம் வழிச்சு அள்ளிப்போட்டுக்கிட்டு வந்திருக்கேன். அழுகி, புழுப்பூத்து, குடலைப் புடுங்குற நாத்தத்தோட இருக்குற பாடியைக்கூட தூக்கி, சாமிக்கு செய்யிற சேவையா அடக்கம் செஞ்சிட்டுவர்றேன். ஆனா, எனக்கும் வயிறு இருக்குதுல்ல சார்?

“எனக்கும் வயிறு இருக்குதுல்ல சார்?” - ஐந்து வருடங்களாகக் கூலி இல்லை…

இப்போ கொரோனா பாடிகளையும் நான்தான் அடக்கம் பண்றேன். மயானத்துக்கு வர்ற மத்த பாடிகளை அடக்கம் பண்றதுக்குக் கிடைக்கிற கூலியிலதான் இப்போ குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு எட்டு லட்ச ரூபாய் வரை எனக்குக் கூலி பாக்கி இருக்குது. அதைக் கேட்கப் போனா என்னை உள்ளயே விடாம கேட்டுலயே நிறுத்துறாங்க’’ என்று கலங்குகிறார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமாரைத் தொடர்புகொண்டபோது, ‘‘அப்படியா?’’ என்று அலட்சியமாகக் கேட்டவர், ‘‘தவறான தகவல். நகராட்சி சுகாதார அலுவலரிடம் கேளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

நகராட்சி சுகாதார அலுவலரான மருத்துவர் குமரனைத் தொடர்புகொண்டபோது, ‘‘அந்த பில்களை எங்களிடம் சமர்ப்பித்தால், நிலுவைத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்றார்.

குமரன்
குமரன்

இந்தத் தகவலை சந்திரகுருவிடம் தெரிவித்தபோது, ‘‘அத்தனை பில்களையும் ஜெராக்ஸ் எடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லையே சார்...’’ என்றார் பரிதாபமாக. பில்களை ஜெராக்ஸ் எடுக்க ஏற்பாடு செய்து, அவற்றை நகராட்சி சுகாதார அலுவலரிடம் கொடுக்கவைத்தோம். நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறோம்!

‘எனக்கும் வயிறு இருக்குதுல்ல சார்?’ - என்ற சந்திரகுருவின் வார்த்தைகள் மட்டும் காதில் ஒலித்துக்கொண்டே யிருக்கின்றன!