Published:Updated:

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடப் போறீங்களா?! - கட்டுப்பாடுகளைத் தெரிஞ்சிக்கோங்க மக்களே...

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்
News
புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் ஏற்பாடு தொடர்பாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர். அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின் மேற்கொள்ளவிருக்கும் வழிமுறைகள் குறித்து புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு...

 • பொது இடங்களில் கூடும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 • தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களை மட்டுமே விடுதிகள், ஹோட்டல்கள், புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அனுமதிக்க வேண்டும்.

 • புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம்!
புத்தாண்டு கொண்டாட்டம்!
 • புத்தாண்டு நிகழ்ச்சிகளில் உரிய‌ முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

 • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்க வேண்டும்.

 • அனைத்துவிதமான மதுபான கடைகளிலும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கக் கூடாது.

 • புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும்.

 • கடற்கரை சாலையில் மக்கள் கூடும் கூட்டத்தைப் பொறுத்து அதற்கேற்ப போக்குவரத்து மாற்று வழிகள் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 • புத்தாண்டு கொண்டாட்டத்தை, 31-ம் தேதி இரவு 12:30 மணிக்குப் பின்னர் முழுமையாக முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • இரவு ஊரடங்கு அன்று இரவு 2 மணி முதல் காலை 5 மணி அமலில் இருப்பதால் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை குறிபிட்ட நேரத்துக்கு முன்பு முடித்துக்கொள்ள வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள மக்களின் பொருளாதார நலன், வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதிக்க வழங்கியிருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் கொரேனா பரவல் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்வது, கண்காணிப்பில்வைப்பது போன்ற நடைமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்துறை மாதிரி பரிசோதனைகளை நடத்த வேண்டும். தொற்று அறிகுறி காணப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நள்ளிரவில் மதுபானம் விற்கத் தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தைக் கருத்தில்கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே புதுச்சேரியில் இருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரியில் குவிந்துவருகின்றனர். இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளனர்.

இந்த வழக்கில் புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதித்திருப்பதாகவும், இரவு 12:30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது. பொது இடங்களில் மதுபானம் அருந்த அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். மதுபானம் விற்கப்படாமல் இருந்தாலே பல ஆபத்துகள் தவிர்க்கப்படும்" எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் புத்தாண்டு நள்ளிரவு நேரத்தில் 3 மணி நேரம் மதுபானம் விற்கத் தடைவிதித்தனர். அதன்படி, டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் இரவு 1 மணி வரை மதுபானம் விற்கவும், பொது இடங்களில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் இரவு 10 முதல் 1 மணி வரை மதுபானம் விற்பனை கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.