Published:Updated:

“கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் காப்பாத்தியிருக்கேன்!”

ரகுபதி
பிரீமியம் ஸ்டோரி
ரகுபதி

அப்பா பெரியசாமி பாரதிதாசனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் நடத்திய ‘குயில்’ பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

“கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் காப்பாத்தியிருக்கேன்!”

அப்பா பெரியசாமி பாரதிதாசனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் நடத்திய ‘குயில்’ பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

Published:Updated:
ரகுபதி
பிரீமியம் ஸ்டோரி
ரகுபதி

“நாம் செல்லும் பாதை நேர்மையானதாக இருந்தால் நமது போராட்டங்கள் அரசை அச்சப்பட வைக்கும்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த செயல்பாட்டாளர் ரகுபதி. அரசு எந்திரம் இழைத்த பல்வேறு முறைகேடுகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் துணையுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் போராளி. `ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு’ என்ற லெட்டர்பேடில் இவரின் கேள்விகளைத் தாங்கிச் செல்லும் கடிதங்கள் அரசு அலுவலகங்களைக் கலவரமடைய வைக்கின்றன. ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் கல்வெட்டு செய்யும் சிறிய கடையை நடத்திவரும் இவர், தனது சொற்ப வருவாயின் ஒரு பகுதியை இந்தச் செயற்பாடுகளுக்காகவே செலவு செய்கிறார்.

புதுச்சேரியில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நேரம். தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமிதான் அப்போதும் முதல்வர். ‘அமைச்சர்கள் தங்களின் சொந்த வீடுகளுக்கே அரசிடமிருந்து மாத வாடகை பெறுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை வைத்தார் ரகுபதி. அமைச்சர் வைத்திலிங்கம் (தற்போது புதுச்சேரி எம்.பி) மகள் அபிராமி பெயரில் இருந்த தனது வீட்டிற்கு மாதம் 23,700 ரூபாயும், அமைச்சர் ஷாஜகான் அவரின் அப்பா எம்.ஓ.ஹெச்.பாரூக் பெயரில் இருக்கும் சொந்த வீட்டிற்கு மாதம் 69,940 ரூபாயும், அமைச்சர் கந்தசாமி அவரின் மனைவி விஜயா பெயரில் இருந்த வீட்டிற்கு 16,270 ரூபாயும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தன் உறவினர் பைரவசாமியின் வீட்டிற்கு 14.400 ரூபாயையும் வாடகையாகப் பெறுகிறார்கள்’ என்று ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட ஆவணங்களை இவர் எடுத்துப் போட, அமைச்சரவையே ஆடிப் போனது.

“கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் காப்பாத்தியிருக்கேன்!”

புதுச்சேரியில் ஒருகாலத்தில் 40 வாரியங்கள் உயிருடன் இருந்தன. ஆட்சிக்கு வரும் கட்சிகள் அவற்றிற்கு தங்கள் கட்சியினரைத் தலைவர்களாக நியமிக்கும். அவர்கள் பதவிக்கு வந்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் சொகுசுக் கார் வாங்குவார்கள். தங்களின் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் செலவு வைப்பார்கள். நிறைய பேரை அரசு வேலைக்கு வைப்பார்கள். இதை எதிர்த்து ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரகுபதி தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் வாரியப் பதவிகளுக்கு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ‘மக்கள் பிரதிநிதிகள்தான் வாரியத் தலைவர்களாக இருக்க வேண்டும்’ என்று அதை நடைமுறைப்படுத்தினார் முன்னாள் கவர்னர் கிரண் பேடி.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 16 மாதங்களில் அமைச்சர்கள் 457 முறை விமானத்தில் பறந்ததற்காகச் செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் 66.7 லட்சம். ’சர்வீஸ் பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு வேலையே செய்யாமல் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களைச் சுற்றிக்கொண்டிருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரையும் ஒரே நாளில் அவர்களது அலுவலகங்களுக்குத் திரும்ப வைத்தது இவரின் ஆர்.டி.ஐ மனு.

பட்டியலின மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டிய வாரியமான `பாட்கோ’ 6.5 கோடி ரூபாய்க்கு ஹைமாஸ் விளக்கு முறைகேட்டில் ஈடுபட்டது, பல ஆண்டுகளாகப் பழுதாகி மக்கிப் போன காவல்துறை புல்லட்டுக்கு 21 லட்சத்திற்கு பெட்ரோல் போட்டதாகக் கணக்கு காட்டியது என இவர் ஆர்.டி.ஐ மூலம் அம்பலப்படுத்திய முறைகேடுகள் ஏராளம். இதுவரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டு பதிலைப் பெற்றிருப்பதாகக் கூறும் இவருக்கு ‘சிறந்த முன்னோடியாளர்’ என்ற விருதைக் கொடுத்து கௌரவித்திருக்கிறார் புதுச்சேரியின் முன்னாள் கவர்னர் கிரண் பேடி.

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் இருக்கும் சிறிய கடையில் ரகுபதியைச் சந்திக்கச் சென்றபோது சுகாதாரத்துறைக்கான ஆர்.டி.ஐ மனு ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். “அப்பா பெரியசாமி பாரதிதாசனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் நடத்திய ‘குயில்’ பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். எனக்குப் பெயர் வைத்ததே பாரதிதாசன்தான். நேர்மையானவர் என்பதால் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்பட்டு அரசு அச்சகப் பணியிலிருந்து வெளி யேறினார். குயில் பத்திரிகையை நடத்துவதில் ஏற்பட்ட சிரமத்தில் வீடு உள்ளிட்ட அனைத்துச் சொத்துகளையும் விற்றார் அப்பா. அதன்பிறகான வறுமையால் என் படிப்பும் ஓல்டு எஸ்.எஸ்.எல்.சியுடன் முடிவுக்கு வந்தது. 16 வயதில் வேலைக்குச் சென்றேன். ரப்பர் ஸ்டாம்பு செய்வது, போர்டு எழுதுவது போன்ற வற்றைக் கற்று க்கொண்டு கடையை வைத்தேன்.

“கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் காப்பாத்தியிருக்கேன்!”

எங்கள் பகுதியில் சாலை போட்டார்கள். அதுகுறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்றேன். அதில் குறிப்பிட்டிருந்ததில் 30% வழிமுறைகளைக்கூட ஒப்பந்தக்காரர் கடைப்பிடிக்கவில்லை என்பதால் சாலை போடும் பணியைத் தடுத்து நிறுத்தினேன். அப்போது அந்த ஒப்பந்தக்காரர், ‘நீங்கள் கேட்பது சரிதான். ஆனால் ஒப்பந்தத் தொகையில் 40 சதவிகிதத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பறித்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?” என்று புலம்பினார். அப்போது தொடங்கியதுதான் இந்த ஆர்.டி.ஐ பணி. அப்போதைய காலட்டத்தில் ஆர்.டி.ஐ போட்டு அதற்கு பதில் பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் பத்து ரூபாய் பணம் செலுத்த வேண்டும். அந்த ரசீதைக் காட்டினால்தான் மனுவை வாங்குவார்கள். ஆனால் அவ்வளவு சுலபமாக பணத்தை வாங்க மாட்டார்கள். அரை நாள் காக்க வைத்துவிட்டு ’நாளைக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு கேஷியர் போய்விடுவார். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அலைய வைப்பார்கள். ஆனாலும் நான் சோர்ந்துபோனதில்லை.

வெறும் 480 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள புதுச்சேரியில் 26 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் குடியிருப்புகளுக்கு 2010 முதல் 2019 வரை பராமரிப்பு மற்றும் டி.வி, வாஷிங்மெஷின், சோபாக்கள் வாங்குவதற்காக 2,97,70,718 ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதைச் செய்கிறார்கள் என்பது ஆர்.டி.ஐ மூலம்தான் தெரிய வந்தது.

2009-ல் புதுச்சேரி கவர்னராக இக்பால்சிங் இருந்தபோது கவர்னர் மாளிகைக்கு ஒரு மாதத்திற்கு 1.5 லட்சம் ரூபாய்க்குக் காய்கறி வாங்கியதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தேன். அந்தத் தகவல் அனைத்துச் செய்தித்தாள்களிலும் வெளியான அடுத்த நிமிடமே திபுதிபுவெனக் காவல்துறையினர் என் வீட்டில் குவிந்தனர். நான் காட்டிய ஆவணங்களைப் பார்த்ததும் மௌனமாகச் சென்றுவிட்டனர். தற்போது ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சந்திரமௌலி, மகேஸ்வரி என இரண்டு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். அவர்களுக்கு இரண்டு மாதத்திற்கான சம்பளம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியது என ரூ.24.05 லட்சம் செலவிட்டி ருக்கிறார்கள். இதை நான் வெளியிட்டதும் என்னைத் தொடர்புகொண்ட கவர்னர் தமிழிசை, ‘அவர்கள் இருவருக்கும் அறைகளைத் தான் ஒதுக்கச் சொன்னேன். இவ்வளவு செலவு செய்திருப்பது எனக்குத் தெரியாது’ என்றார்.

நான் ஒவ்வொரு நாளும் கடைக்குக் கிளம்பும்போது பயத்துடன்தான் என்னை வீட்டிலிருந்து அனுப்புகிறார் என் மனைவி. பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் சேவையாகவே இதனைப் பார்க்கிறேன். ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் கல்வெட்டு செய்யும் வேலைகள் அரசுத் துறைகளிடம் இருந்துதான் வரும். ஆனால் இப்போது யாரும் எனக்கு வேலை தருவதில்லை. அதனால் நான் கவலைப்படவும் இல்லை. குடும்பத்தைப் பிள்ளைகள் கவனித்துக்கொள்கிறார்கள். இதுவரை நான் போட்ட ஆர்.டி.ஐ மனுக்களால் மக்களின் வரிப்பண்த்தைக் கோடிக் கணக்கில் காப்பாத்தி யிருக்கேன். அந்த மன நிறைவு எனக்குப் போதும்” என்கிறார் எளிமையான புன்னகையுடன்.