புதுவை பெண் தாதா எழிலரசி - வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது மடக்கிப் பிடித்தது போலீஸ்!

தேடப்படும் குற்றவாளியான புதுவை பெண் தாதா எழிலரசி வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது மடக்கிப் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
புதுவை மாநிலத்தின் பிரபல பெண் தாதா எழிலரசி காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். தேடப்படும் குற்றவாளியான எழிலரசியை நீண்ட நாள்களாக அவரைத் தேடிவந்த காவல்துறை, தகவலறிந்ததும் அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் பிரபல சாராய வியாபாரியும், கோடீஸ்வரருமான ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி. ராமுவின் முதல் மனைவி வினோதா ஏவுதலின் பேரில் ராமு சில ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். எழிலரசி படுகாயத்துடன் உயிர்பிழைத்தார். கணவர் கொலைக்குப் பழிக்குப் பழியாக ஐயப்பன், வினோதா மற்றும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எம்.சி.சிவகுமார் உட்பட மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர். கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், கொள்ளை வழக்குகள் என எழிலரசி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தலைமறைவாக உள்ள எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் .
இந்தநிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதனை எழிலரசி சந்தித்து பா.ஜ.க-வில் இணைந்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எழிலரசி காரைக்கால் மாவட்டத்திலுள்ள நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.

அவருடைய ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட எழிலரசி நேற்று காலை காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இது பற்றி தாமதமாகத் தகவலறிந்த போலீஸார் எழிலரசி சென்ற காரை நாகூர் அருகே மடக்கி எழிலரசியைக் கைதுசெய்தனர்.