Published:Updated:

புதுச்சேரி: `கண்ணியத்துடன் வாழுங்கள்!' - சிறைக் கைதிகளின் `அட்வைஸ் விநாயகர்!’

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

புதுச்சேரி சிறைக் கைதிகள் வடிவமைத்த விநாயகர் சிலைகள், ரூ.150 முதல் ரூ.1,000 வரை வரை விற்பனை ஆகின.

நாளை செப்டம்பர் 10-ம் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதற்காக மக்கள் தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போல் சிறிதும் பெரிதுமாக வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்க சந்தைகளில் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகள் 10 பேர் முடிவெடுத்தார்கள். அவர்கள் ஒன்றிணைந்து காகிதக் கலவையைக்கொண்டு அழகிய வண்ண விநாயகர் சிலைகளை வடிவமைத்திருக்கின்றனர். உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலைகளுக்கு ரூ.150 முதல் ரூ.1,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 'இரண்டாம் வாய்ப்பு | வாழ்வை கண்ணியத்துடன் வாழுங்கள்' என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

இது குறித்து நம்முடன் பேசிய சிறையின் தலைமைக் கண்காணிப்பாளர் குமார், ``சிறையிலிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் பல்வேறு நல்ல விஷயங்களை நாங்கள் செய்துவருகிறோம். குறிப்பாக யோகா பயிற்சி, தியானம், மருத்துவப் பரிசோதனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். உணர்ச்சி வேகத்தில் தவறுகள் செய்துவிட்டு சிறைக்குள் வரும் ஒவ்வொருவருக்கும் திரும்பி வெளியே செல்லும்போது இரண்டாம் வாய்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கிறது. திரும்பி அவர்கள் சிறைக்குள் வரக் கூடாது என்ற நோக்கத்தில் சிறை வளாகத்தில் கோ சாலை, பேக்கரி யூனிட் போன்றவற்றைச் செயல்படுத்தி அவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறோம். குறிப்பாக, கைதிகள் ஒவ்வொருவரின் தனித்திறமையைக் கண்டறிந்து அதற்கான பயிற்சிகளையும் அளிக்கிறோம். அதன் அடிப்படையில்தான் இந்த அழகிய விநாயகர் சிலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விற்பனையில் கிடைக்கும் வருவாய் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கப்படும்" என்றார்.

``விநாயகர் சதுர்த்தி ஊர்வலத் தடை !  முதல்வர் சொன்ன விளக்கம்" - சட்டசபை ஹைலைட்ஸ்!

'லூர்து மேரி வாங்கிச் சென்ற விநாயகர் சிலை!'

புதுச்சேரி: `கண்ணியத்துடன் வாழுங்கள்!' - சிறைக் கைதிகளின் `அட்வைஸ் விநாயகர்!’

``என் பெயர் லூர்து மேரி. தட்டாஞ்சாவடிப் பகுதியில் குடியிருக்கிறேன். காய்கறிகள் வாங்குவதற்காக மார்க்கெட்டுக்குச் சென்றேன். அப்போது உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் சிறைக்கைதிகள் விநாயகர் சிலைகளைச் செய்து விற்பனை செய்துவருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது தத்ரூபமாக விநாயகர் சிலைகளை வடிவமைத்திருந்தனர். நான் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது இல்லை என்றாலும், சிறைக் கைதிகள் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைத்திருந்த ஒரு விநாயகர் சிலையை என் வீட்டில் வைத்துக்கொள்ள வாங்கிச் செல்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு