Published:Updated:

"எல்லோரும் படிச்சு முன்னேறணும்"- புதுக்கோட்டை நூலகத்துக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் தனிநபர்#MyVikatan

``பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர். நூலகத்தைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் படிச்சு முன்னேறணும்.''

நூலகம் கட்ட அடிக்கல்
நூலகம் கட்ட அடிக்கல்

அறிவுலகின் ஆலயம் நூலகம். அந்த நூலகத்தை நோக்கி வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினால் அந்தச் சமூகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது என அர்த்தம். எனவே, நூலகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்துக்குக் கூடுதலாக புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பழனியப்பன் என்ற தனிநபர் ஒருவர் தனது சொந்தப் பணத்திலிருந்து 25 லட்ச ரூபாயை வழங்க முன்வந்திருக்கிறார். அவருடைய இந்த நல்ல காரியம் பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

நூலகம்
நூலகம்

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக அதிகாரி (கூடுதல் பொறுப்பு) சிவகுமாரை தொடர்புகொண்டு பேசினேன். ``மனித சமூகத்துக்கும் புத்தகங்களுக்குமான உறவு என்பது ரொம்ப அவசியம். அப்படி உயர்வுமிக்க நூலகங்களை மேம்படுத்தி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கினாலே ஒரு நல்ல சமூகத்தை நாம் உருவாக்க முடியும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. தினசரி முன்னூறு முதல் நானூறு வாசகர்கள்வரை இங்கு வந்து படித்துச் செல்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. இப்படி சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நூலகத்துக்கு கவிஞர்.தங்கம் மூர்த்தி தலைமையிலான வாசகர் வட்டம் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தை இன்னும் தனித்துவமிக்க ஒரு நூலகமாக உருவாக்க வேண்டும். அதற்கு கட்டட வசதி கூடுதலாக இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்ற என் விருப்பத்தை வாசகர் வட்டத்திடம் தெரிவித்தேன். அவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதுதான் பழனியப்பன் என்ற நல்லெண்ணம் கொண்ட கொடையாளர் நமக்கு கிடைத்தார். அவருடைய முழு உதவியால் 25 லட்ச ரூபாய் செலவில் 1500 சதுரஅடி அளவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நன்கொடையாளர் பழனியப்பன் பிறந்த தினமான செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.

நூலகத்துக்கு அடிக்கல்
நூலகத்துக்கு அடிக்கல்

குழந்தைகள் முதல் மூத்தோர்வரை அனைவரும் வந்து வாசித்துச் செல்லக்கூடிய வகையில் தரமான நூலகம் என்பது மிகமுக்கியம். அதேபோல் மாற்றுத் திறனாளிகளும் சிரமம் இல்லாமல் புத்தகங்களை வாசித்துச் செல்லும் வகையில் சில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதற்கு மிகப்பெரும் உதவியாக இந்தப் புதிய கட்டடம் அமையும். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தையும் எழுத்தாற்றலையும் நாங்கள் வாசகர் வட்டத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறோம். இன்றைய சமூகம் புத்தகங்களைத் தாண்டி வெவ்வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அந்த டைவர்சனிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும். என்னதான் ஆன்லைனில் வாசித்தாலும் அச்சடிக்கப்பட்ட புத்தக வாசிப்பின் அனுபவம் என்பது வேறு.

புத்தகங்கள் என்பவை வெறும் தகவல் சேகரிப்புக்கு மட்டுமல்ல. அது நமது வாழ்க்கையைப் பண்படுத்தக்கூடியது. ஆன்லைன் என்பது `இன்பர்மஷேன் பொல்யூஷன்’ என்று சொல்லக்கூடிய புரட்டுத் தகவல்களும், பொய்யான செய்திகளும் பரப்பும் களமாக உருவாகி இருக்கிறது. இதனால் எது உண்மை, எது பொய்? என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. ஆனால், புத்தகங்களில் அதற்கான வாய்ப்பில்லை.

sivakumar
sivakumar

வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைனில் வாசிப்பவர்கள் 50 சதவிகிதம் பேர்தான். நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் ஆன்லைன் வாசிப்பு என்பது எந்த அளவுக்கு சாத்தியம் எனச் சொல்ல முடியவில்லை. அறிவை விருத்தி செய்யவும், மனித குலம் மேம்படவும் புத்தகங்களை நோக்கிச் செல்வதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். அதற்காக இந்தப் பெரிய உதவியைச் செய்திருக்கும் கொடையாளர் பழனியப்பனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்கிறார்.

இந்த நிதி உதவியை பழனியப்பனிடமிருந்து பெற்றுத் தருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வாசகர் வட்டத்தின் பொருளாளர் திருப்பதி. அவர் நம்மிடம், ``புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டியைச் சேர்ந்த பழனியப்பன் சிங்கப்பூரில் தொழில் செய்துவருகிறார். வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர். இளவயதில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தவர். அதிக அளவில் படிக்கவில்லை என்றாலும் ஆன்மிகம் மற்றும் பொதுச் சேவைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர். நூலகத்தைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் படிச்சு முன்னேறணும்.

thirupathy
thirupathy

அரசாங்கத்தின் உயர் பதவிகளைப் பெற வேண்டும் என்ற கருத்து உடையவர். அவரிடம் இந்த நூலகத்துக்கான கூடுதல் கட்டடத் தேவை பற்றி சொன்னோம். உடனே எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இதற்கு உதவ முன்வந்தார். முதலில் 15 லட்ச ரூபாயில் ஆயிரம் சதுர அடி பரப்பில்தான் இந்தக் கட்டடம் கட்ட நினைத்தோம். ஆனால், இங்கு வந்து பார்த்த பழனியப்பன் கட்டடத்தை இன்னும் பெரிதாக்கி ஆயிரத்து ஐநூறு அடியில் அதாவது 25 லட்ச ரூபாயில் கட்டித் தருகிறேன் எனச் சொன்னார். அதற்கான பூமி பூஜை செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக கட்டடப் பணிகள் ஆரம்பமாகும்" எனத் தெரிவித்தார்.

இந்த நூலகத்தின் அழியாப் புத்தகமாக என்றென்றும் நிலைத்து நிற்பார்.. பழனியப்பன். பாராட்டுகள் சார்..!

-பழ.அசோக்குமார்

"எல்லோரும் படிச்சு முன்னேறணும்"- புதுக்கோட்டை நூலகத்துக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் தனிநபர்#MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/