Published:Updated:

ஆன்லைன் வகுப்பில் நடனம் மூலம் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியை... `வைரல்' சம்பவம்!

ஆசிரியை மீனா
News
ஆசிரியை மீனா

``அந்த டான்ஸ் வீடியோ, எங்கள் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காகப் போட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெய்யெழுத்தை க், ங், ச், ஞ்னு ஒவ்வொண்ணா சொல்லிக்கொடுத்தா அவங்களுக்குக் கொஞ்ச நேரம்கூட மனசுல நிக்காது."

அரசுப் பள்ளி ஆசிரியை மீனா, மெய்யெழுத்துகளை தன் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் சுவாரஸ்யமாகக் கற்றுத் தர பாடி, ஆடி பகிர்ந்துள்ள வீடியோ, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான தடை தொடர்கிறது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் இந்த வருடத்துக்கான மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டிருப்பதால், தொடர் விடுமுறையால் சலிப்படைந்திருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது உற்சாகமடைந்திருக்கின்றனர். 

இதற்கிடையே, புதுக்கோட்டை அருகே கவரப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன், ஊரடங்கு நேரத்திலும் `சின்னக்குயில்' என்ற வாட்ஸ்அப் குழுவை ஆரம்பித்து, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தன் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறார்.

ஆசிரியை மீனா மாணவர்களுடன்
ஆசிரியை மீனா மாணவர்களுடன்

வாட்ஸ் அப் குழு மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியை மீனா குறித்து ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறோம். இந்நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில தினங்களுக்கு முன் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக, மெய்யெழுத்துகளைப் பாடலாகப் பாடி, அதற்கேற்ப அவரே நடனமும் ஆடி, அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார் மீனா. அதைப் பெற்றோர்கள் பல்வேறு குரூப்களில் பகிர, ஆசிரியையின் புதுமையான கற்றல் முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியையின் முயற்சிக்குப் பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆசிரியை மீனா ராமநாதனிடம் பேசினோம். ``விராலிமலை அருகே கவரப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 14 வருஷமாக ஆசிரியையாகப் பணியாற்றிட்டு இருக்கேன். நான்காம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கேன். பொதுவாகவே, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் பாடத்தைத் தாண்டி வேறு ஏதேனும் ஒரு திறமை நிச்சயமா இருக்கும். அதை வெளிக்கொண்டு வரணும். அதைத்தான் 14 வருஷமா செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

மெய்யெழுத்து நடனம்
மெய்யெழுத்து நடனம்

என் வகுப்புல படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்தளவுக்குப் பாடுவது, நடனமாடுவது, ஓவியம் வரையுறதுன்னு மற்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.  தொடக்கப்பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை வெறும் பாடமாக இல்லாமல், ஒரு கதாபாத்திரமா மாறி பாடம் நடத்தினாதான் அவங்களுக்கு அப்படியே மனசுல பதியும். அதனால எல்லா பாடங்களையுமே மாணவர்களுக்குக் கதை, நடிப்பு மூலம் கற்பிக்க முயல்வேன்.

அந்த டான்ஸ் வீடியோ, எங்கள் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காகப் போட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெய்யெழுத்தை க், ங், ச், ஞ்னு ஒவ்வொண்ணா சொல்லிக்கொடுத்தா அவங்களுக்குக் கொஞ்ச நேரம்கூட மனசுல நிக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால, பாட்டுப்பாடி, நடனமாடி சொல்லிக்கொடுக்கலாம்னு நெனச்சேன். என்னைப் பார்த்து அவங்களும் அதைப் பாட்டா பாடி, டான்ஸ் ஆடி கத்துக்கும்போது, ரெண்டு, மூணு முறை செஞ்சாங்கன்னா ஓரளவு மனசுல நிற்கும். பொதுவா, பள்ளியில என்னோட வகுப்புல ஏ, பி, சி, டி உயிரெழுத்துகள், வாய்ப்பாடுன்னு எல்லாத்தையும் இதுமாதிரிதான் சொல்லிக்கொடுப்பேன்.

"மாணவர்களுக்கு வெறும் பாடமாக இல்லாமல், ஒரு கதாபாத்திரமா மாறி பாடம் நடத்தினா அவங்களுக்கு அப்படியே மனசுல பதியும். அதனால...

Posted by Aval Vikatan on Thursday, September 3, 2020

வகுப்புல மாணவர்கள் மத்தியில நடனமாடிச் சொல்லிக்கொடுக்கும்போது வித்தியாசமா எதுவும் தெரியாது. இப்போ அதை வீடியோ எடுத்து மாணவர்களுக்கு அனுப்பும்போது, பெற்றோர்கள் மற்றும் பலரும் பார்ப்பாங்களேனு, மொதல்ல சின்ன தயக்கம் இருந்துச்சு. அதற்கப்புறம், நல்ல விஷயத்துக்காகத்தானே செய்றோம்னு நெனச்சு, வீடியோவை வாட்ஸ்அப் குரூப்ல மாணவர்களுக்கு ஷேர் பண்ணினேன். சக ஆசிரியர்கள் பலரும் அழைத்துப் பாராட்டினாங்க.

ஆசிரியை மீனா வகுப்பில்
ஆசிரியை மீனா வகுப்பில்

என்னோட இந்த வீடியோவைப் பார்த்துட்டு, என் மாணவியின் 4 வயசு தம்பி, அப்படியே என்னை மாதிரியே பாடிக்கிட்டு ஆடியிருக்கான். இன்னும் ஸ்கூல்லகூட சேர்க்காத குழந்தை அது. இப்படி நடனம், பாட்டுனு சுவாரஸ்யமா சொல்லிக்கொடுக்கும்போது, அதுக்குக்கூட மெய்யெழுத்து சுலபமா மனசுல ஆழப் பதிஞ்சு போச்சு. என் மாணவி அதை வீடியோவாக்கி எனக்கு அனுப்பியிருக்கிறார். அதைப் பார்த்ததும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பெற்றோர்களும், `இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க டீச்சர்'னு சொல்றாங்க. ரொம்ப உற்சாகமா இருக்கு.

இத்தனைக்கும் காரணமான எங்களோட `சின்னக்குயில்' வாட்ஸ்அப் குழு, மாணவர்களோடு பக்கத்துல இருக்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்திக்கிட்டே இருக்கு. வாட்ஸ்அப் குழுவில் இப்போ 40 மாணவர்கள் இருக்காங்க. தினசரி வீட்டுப்பாடம் கொடுப்பேன். அதை முடிச்சு குழுவில் அனுப்புவாங்க.

மாணவர்களுக்காகத் தொடர்ந்து இயங்கணும். அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி பாடம் சொல்லிகொடுக்க என்னவெல்லாம் பண்ணலாம்னு தொடர்ந்து யோசிச்சுக்கிட்டே இருக்கணும்" என்கிறார் மீனா.