Published:Updated:

மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை... போதை ஊசிக்கு அடிமையான மாணவர்கள்... அதிரவைக்கும் புதுக்கோட்டை!

கஞ்சா விற்பனை
பிரீமியம் ஸ்டோரி
News
கஞ்சா விற்பனை

கஞ்சா போதை ஒரு பக்கம் என்றால், வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி இளைஞர்கள் பலரும் சீரழிந்து வருகிறார்கள்

புதுக்கோட்டையில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த சில கொலைச் சம்பவங்கள் கஞ்சா, போதை ஊசியை மையப்படுத்தியே நடந்திருக்கின்றன. இன்னொரு பக்கம், பள்ளி மாணவர்களும் போதை ஊசிகளுக்கு அடிமையாகிவரும் சம்பவங்கள் திடுக்கிடவைக்கின்றன. இது தொடர்பாகப் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை முழுவதும் சோதனை நடத்திய போலீஸார், கஞ்சா விற்பனை செய்த 19 பேரை டிசம்பர் 12-ம் தேதி கைதுசெய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த 22 வயது விஜய் என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் செந்தில் ராஜா, வெள்ளைச்சாமி, வீரமணி, விமல்ராஜ் ஆகிய நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர் போலீஸார். இது தொடர்பாக, மேலும் 11 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவருமே 20-25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்கும் போட்டியில் நண்பனையே கொலை செய்தது தெரியவந்தது. இதேபோல், அறந்தாங்கி அருகே எல்.என்.புரத்தைச் சேர்ந்த 38 வயது தீபராஜ், செப்டம்பர் 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறந்தாங்கியைச் சேர்ந்த சூர்யா, ஜேசுராஜா, அன்பரசன் ஆகியோர் கைதுசெய்யப் பட்டார்கள். இந்த விவகாரத்திலும் கஞ்சா தொழில் போட்டியே கொலைக்குக் காரணமாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை... போதை ஊசிக்கு அடிமையான மாணவர்கள்... அதிரவைக்கும் புதுக்கோட்டை!

கஞ்சா போதை ஒரு பக்கம் என்றால், வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி இளைஞர்கள் பலரும் சீரழிந்து வருகிறார்கள். குறிப்பாக, பள்ளி மாணவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது தான் அதிர்ச்சி. கடந்த அக்டோபரில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்ட அடப்பன்வயலைச் சேர்ந்த ஹக்கீம், தனசேகர், சக்திவேல் ஆகிய மூன்று இளைஞர்கள், போதை மாத்திரை, ஊசிகளுடன் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஏராளமான பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை, ஊசிகளை விநியோகித்தது கண்டறியப்பட்டது.

போதை ஊசிக்கு அடிமையாகி, உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குச் சென்ற அறந்தாங்கியைச் சேர்ந்த ப்ளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவன் ஒருவனை, படாதபாடுபட்டு ஓரளவு மீட்டிருக்கிறார் அவரின் தாய். அவர் படும் துயரங்களைக் கேட்டால், மனம் பதறுகிறது... ‘‘புதுக்கோட்டையில இருக்குற தனியார் பள்ளியிலதான் பையனைச் சேர்த்திருந்தேன். அவனுக்காகவே அறந்தாங்கியை விட்டுட்டு புதுக்கோட்டையிலயே வீடு எடுத்து தங்கிட்டேன். நானும் ஸ்கூல் டீச்சராத்தான் வேலை பார்த்தேன். ஆரம்பத்துல ஸ்கூல்விட்டதும் சரியான நேரத்துக்கு வந்தவன், ரெண்டொரு வாரத்துலயே லேட்டா வர ஆரம்பிச்சான். கொஞ்ச நாள்ல அவன்கிட்ட பெரிய மாற்றம் தெரிஞ்சுது. வீட்டுல பணத்தைத் திருடுறது, பொய் சொல்றது, கை நடுங்குறதுன்னு அவன்கிட்ட ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியா இருந்துச்சு. அடிக்கடி கோபப்படுவான், கேட்ட காசைக் கொடுக்கலைன்னா பொருள்களையெல்லாம் உடைப்பான். ஒருமுறை என் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனவன், அங்கேயிருந்த நகைகளைத் திருடுற அளவுக்குப் போயிட்டான். அப்பதான் அவன் போதை ஊசிக்கு அடிமையாகிட்டான்கிறது தெரிஞ்சு, நிலைகுலைஞ்சு போயிட்டேன்.

நிஷா பார்த்திபன்
நிஷா பார்த்திபன்

ஒரு கட்டத்துல வேற வழியில்லாம போதை ஊசி வாங்க நானே காசு கொடுத்துவிடுற சூழ்நிலை ஏற்பட்டுச்சு. இப்படியேவிட்டா சரிப்படாதுன்னு, டீச்சர் வேலையை விட்டுட்டு அவனை கவனிக்கத் தொடங்கினேன். கேரளாவுல இருக்குற ஒரு போதை மறுவாழ்வு மையத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போய் ஆறு மாசம் போராடி, லட்சக்கணக்குல செலவு செஞ்சு பையனை மீட்டுட்டு வந்தேன். திரும்பவும் ஒரு மாசத்துக்கு முன்னாடி போதை ஊசியைத் தேடிப் போயிட்டான். இவனை நாலு சுவத்துக்குள்ள வெச்சு பாதுகாக்கிறதுதான் என் வேலையா இருக்கு. இவனோட படிச்ச இன்னும் சில பசங்களும், போதை ஊசிப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்காங்க. பல பெற்றோர்கள் வெளியே சொல்ல முடியாம குமுறிக்கிட்டு இருக்காங்க. எப்படியாவது இதையெல்லாம் தடை பண்ணச் சொல்லுங்க...’’ என்றவர் வேதனை தாங்காமல் கதறி அழுதார்.

மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை... போதை ஊசிக்கு அடிமையான மாணவர்கள்... அதிரவைக்கும் புதுக்கோட்டை!

புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபனிடம் இது பற்றிக் கேட்டபோது, ‘‘மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக வரும் புகார்கள்மீது தனிக்கவனம் செலுத்திவருகிறோம். கடந்த ஆறு மாதங்களில் கஞ்சா தொடர்பாக 42 வழக்குகள் பதியப்பட்டு, 56 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். டிசம்பர் 8-ம் தேதி போதை ஊசி விற்ற நான்கு இளைஞர்களைக் கைது செய்திருக்கிறோம். பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆய்வாளரும் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களைக் கண்காணித்துவருகிறார்கள். மருத்துவர் எழுதித் தராமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்கக் கூடாது என்று மருந்துக் கடைகளுக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன” என்றார்.

போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது. மாணவர்கள் திசை மாறாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. போதையிலிருந்து இளம் தலைமுறையை மீட்கவேண்டியது நம் சமூகத்தின் கடமை!