Published:Updated:

டெல்லி: போராடும் விவசாயிகளுக்கு 20,000 குளிர்தாங்கும் ஆடைகளை அனுப்பிய பஞ்சாப் வணிகர்கள்!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்குக் குளிர்கால ஆடைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் என அனைத்தையும் லாரி மூலம் டெல்லி திக்ரி எல்லைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், போராட்டம் தொடங்கி 22 நாள்களாகியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகளும் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு பெருகிவருகிறது. பஞ்சாப் டி.ஐ.ஜி தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தார், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் சிலர் தங்கள் விருதுகளை அரசுக்குத் திருப்பி அளித்து விவசாயிகளுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாகச் சீக்கிய மதகுரு ஒருவர் போராட்ட களத்துக்கு அருகிலேயே தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாயிகள்
விவசாயிகள்

இந்தநிலையில், நவம்பர் 26-ம் தேதி தொடங்கிய இந்த விவசாயிகளின் போராட்டத்தில் தற்போது வரை பல விவசாயிகள் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் கடும் குளிரை எதிர்கொள்ள முடியாமல் இறப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு 20,000 குளிர் தாங்கும் ஆடைகளை அனுப்பியிருக்கிறார்கள் பஞ்சாப் வணிகர்கள்.

பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட வணிகர்கள் இணைந்து டெல்லியில் மத்திய அரசின் வேளாண் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்குக் குளிர்கால ஆடைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் என அனைத்தையும் லாரி மூலம் டெல்லி திக்ரி எல்லைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

போராட்டம்
போராட்டம்

பஞ்சாப், லூதியானாவிலிருந்து திக்ரி எல்லைக்கு விவசாயிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்ட ட்ரக்கில், 500 கம்பளி தொப்பிகள், 1,000 உள்ளாடைகள், 2,000 போர்வைகள், 5,000 வார்மர்கள், 6,000 சாக்ஸ், 10,000 மப்ளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அனுப்பியிருப்பதாக பஞ்சாப் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு