Published:Updated:

கேங் வாரில் கொல்லப்பட்ட பாடகர்... என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?

பக்வந்த் மான் - கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
பக்வந்த் மான் - கெஜ்ரிவால்

இந்தக் கொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னாய் இப்போது டெல்லியிலுள்ள திகார் சிறையிலிருக்கிறார்.

கேங் வாரில் கொல்லப்பட்ட பாடகர்... என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?

இந்தக் கொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னாய் இப்போது டெல்லியிலுள்ள திகார் சிறையிலிருக்கிறார்.

Published:Updated:
பக்வந்த் மான் - கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
பக்வந்த் மான் - கெஜ்ரிவால்

பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா கேங் வாரில் கொல்லப்பட, பஞ்சாப்பில் அடுத்தடுத்து கேங் வார்கள் மூளும் என்கிற அச்சத்திலிருக்கிறது காவல்துறை. சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க, நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது ஆம் ஆத்மி அரசு. என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?

பிஷ்னாய் கேங் Vs பாம்பிஹா கேங்!

மே 29-ம் தேதி, மாலை 5:30 மணிக்கு பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்திலுள்ள தனது சொந்த கிராமத்துக்கு நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார் சித்து. இரண்டு கார்களில் வந்து அவரது காரை மறித்த கும்பல் ஒன்று, சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 30 குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார் சித்து. அவருடன் பயணித்த நண்பர்கள் காயமடைந்தனர். இந்தக் கொலையில் லாரன்ஸ் பிஷ்னாய் என்பவருக்குத் தொடர்பிருப்பதாகவும், அவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான கோல்டி பிரார் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக ஃபேஸ்புக்கில் சொல்லியிருப்பதாகவும் பஞ்சாப் காவல்துறை கூறியது.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

பஞ்சாப்பில், லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலுக்கும், தாவிந்தர் பாம்பிஹா கும்பலுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் நிகழும். கொள்ளை, செயின் பறிப்பு, பைக் திருட்டு தொடங்கி போதைப்பொருள் கடத்தல், கள்ளத் துப்பாக்கி விற்பனை உள்ளிட்ட அனைத்து கிரிமினல் வேலைகளிலும் இந்த இரு கும்பல்களும் ஈடுபடுகின்றன. தொழில் போட்டியில், `யார் பெரியவர்?’ என்பதில் தொடங்கிய கும்பல் தகராறுகள் தொடர்கதையாகிக்கொண்டிருக் கின்றன. இந்த இரு கும்பல்களுக்குமிடையேயான தகராறில் பல கொலைகளும் நடந்திருக்கின்றன. ``2021 ஆகஸ்ட்டில், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவரும் பிஷ்னாய் கும்பலுக்கு நெருக்கமானவருமான விக்ரம்ஜித் சிங் என்பவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், சித்து மூஸ்வாலாவின் மேலாளர் பெயரும், பாம்பிஹா கும்பலைச் சேர்ந்தவர்களின் பெயரும் இருந்தன. இதன் மூலம் பாம்பிஹா கும்பலுடன் சித்து மூஸ்வாலாவுக்கு ஏதோவொரு தொடர்பிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான், பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த கோல்டி இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். தங்கள் கேங்கைச் சேர்ந்தவரின் மரணத்துக்குப் பழிதீர்க்கும் வகையில்கூட இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்’’ என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

திகார் சிறையில் தீட்டப்பட்ட திட்டம்?

இது கேங் வார் கொலை என்பதை மறுத்துள்ள சித்துவின் தந்தை பால்கூர் சிங், முதல்வர் பக்வந்த் மானுக்கு எழுதிய கடிதத்தில், ``இந்தப் படுகொலை தொடர்பாக சி.பி.ஐ., என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ``இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது’’ என்று சொல்லி, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார் பக்வந்த் மான்.

இந்தக் கொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னாய் இப்போது டெல்லியிலுள்ள திகார் சிறையிலிருக்கிறார். அவர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், `இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. சிறையில் இருந்துகொண்டு இவ்வளவு பெரிய கொலைக்கு எப்படித் திட்டம் தீட்டியிருக்க முடியும்... என்னை விசாரணைக்காக பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது. அவர்கள் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்கள்’ என்று முறையிட்டிருக்கிறார்.

பக்வந்த் மான் - கெஜ்ரிவால்
பக்வந்த் மான் - கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி!

வி.ஐ.பி கலாசாரத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தச் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில்தான் 424 வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதில் சிலரது பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதில் சித்து மூஸ்வாலாவும் ஒருவர். அடுத்த நாளே அவர் கொலை செய்யப்பட்டதால், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.

``ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), பகவந்த் மான் குடும்பத்தினருக்குத் தீவிர பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையில், எதன் அடிப்படையில் மூஸ்வாலாவின் பாதுகாப்பு குறைத்துக்கொள்ளப்பட்டது?’’ என்றும், ``மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆம் ஆத்மி அரசால் பஞ்சாப் போன்ற பெரிய மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது என்பது நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது’’ என்றும் கொந்தளிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

லாரன்ஸ் பிஷ்னாய்
லாரன்ஸ் பிஷ்னாய்
கோல்டி பிரார்
கோல்டி பிரார்

காவல்துறையினரோ, ``மேலும் இரண்டு பாடகர்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. பாம்பிஹா கும்பலைச் சேர்ந்தவர்கள் சித்துவின் கொலைக்குப் பழிதீர்ப்போம் என்று கிளம்பியிருக்கிறார்கள். இனிமேல் இந்த கேங் வார் அடுத்தகட்டத்துக்குச் செல்லும். இது போன்ற கொலைகளுக்குத் திட்டம் தீட்டிக் கொடுக்கும் மாஸ்டர் மைண்டுகளை கைதுசெய்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால், இது போன்ற வழக்குகளில் திட்டம் தீட்டுபவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வசிக்கிறார்கள்’’ என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

இந்தக் கும்பல் மோதல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பக்வந்த் மான் அரசிடம் என்ன திட்டமிருக்கிறது என்று தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த விவகாரத்தில் ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிகிறது. என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

யார் இந்த சித்து?

சித்து மூஸ்வாலாவின் (28) இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து. பஞ்சாப் மாவட்டம், மான்சாவிலுள்ள மூஸா கிராமத்தில் பிறந்தவர், பல இண்டிபெண்டன்ட் பாடல்களை எழுதிப் பாடியதன் மூலம் பஞ்சாப் முழுவதும் பிரபலமடைந்தார். பாடகராகப் பிரபலமான பின்னர், தனது பெயரை, `சித்து மூஸ்வாலா’ என்று மாற்றிக்கொண்டவர், சில பஞ்சாபிப் படங்களிலும் நடித்திருக்கிறார். 2021 இறுதியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், 2022 சட்டமன்றத் தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்டு, படுதோல்வியடைந்தார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் சில காலம் இவர் கனடாவிலிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக `தி லாஸ்ட் ரைடு’ என்ற பாடலைப் பாடியிருந்தார். அந்தப் பாடல்போலவே சித்துவின் இறுதிப் பயணமும் காரிலேயே முடிந்துவிட்டதை எண்ணி அவருடைய ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism