Published:Updated:

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை... உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் என்னென்ன?

பூரி ஜெகநாதர்
News
பூரி ஜெகநாதர்

உலகமே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகலை கடைப்பிடித்து வருகிறது. இந்த சூழலில் 1,000 நபர்களுக்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூடும் விழாவினை நடத்துவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் வருடா வருடம் ஜுன், ஜுலை மாதங்களில் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். இதுதான், உலகிலேயே மிகப் பழமையான ரத யாத்திரையாகக் கருதப்படுகிறது. சந்திர நாள்காட்டியின்படி, ஒவ்வொரு வருடமும் மூன்றாவது மாதத்தில் இரண்டாவது வளர்பிறை சுழற்சியின் போதுதான் இங்கு ரத யாத்திரை நடைபெறும். ஒவ்வொரு முறையும், பூரி ஜகநாதர் கூண்டிச்சா கோயிலுக்குச் செல்லும் முன் மவுசி மா கோயிலுக்குச் சென்றுவிட்டு செல்வது வழக்கம். கூண்டிச்சா கோயில்தான் பூரியில் உள்ள கடவுள்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இதற்காக ஜகநாதர், அவரின் அண்ணன் பாலாபத்ரா மற்றும் தங்கை தேவி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேரில் பூரியின் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வர். ஏழு நாள்களுக்குப் பிறகே இவர்கள் பூரியில் உள்ள கோயிலுக்குத் திரும்புவர். இதைக் காண உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பூரிக்கு வந்துவிடுவர்.

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த வருடம் ரத யாத்திரை நடத்துவது, சந்தேகமான ஒன்றாகவே இருந்து வந்தது. ஒடிசாவின் பாரம்பர்யம் மற்றும் ஐதிகம்படி இந்த வருடம் பூரி ஜகநாதர் தேரில் பவனி வரவில்லை என்றால், அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வர முடியாது என்று சொல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த விழாவினை நடத்தக்கூடாது எனக் கடந்த ஜூன் 18-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஒடிசா விகாச் பரிஷத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை முறையே தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபன்னா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அமர்வு விசாரித்தது. இதில் ஜூன் 18-ம் தேதி வழங்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றது. அதற்குக் காரணமாக, ஒடிசா அரசு கூட்ட நெரிசல் இல்லாமல் தேர்த் திருவிழாவினை நடத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனை, பூரி ஜகநாதர் கோயில் நிர்வாகத்தின் தலைவர் கஜபதி மகாராஜா முன்மொழிந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள்:

இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருவிழா நேரத்தில் பூரிக்குள் விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத யாத்திரை நடைபெறும் எல்லா நாள்களிலும் பூரியில் ஊரடங்கு அறிவிக்கப்படும். மக்கள் யாரும் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதி இல்லை. இந்த ஊரடங்கை ஒடிசா அரசு விழா நாள்களில் எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தலாம். அதோடு ஒவ்வொரு தேரையும் ஐந்நூறு நபர்களைக்கொண்டே இழுக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தொற்று இல்லை எனும் பட்சத்திலேயே தேர் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை

அந்த 500 நபர்களில் அதிகாரிகளும் காவல் துறையினரும் அடங்குவர். இரண்டு தேர்களுக்கு இடையில் ஒரு மணி நேர இடைவேளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேர்களை இழுக்கும் போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ரத யாத்திரையை ஊடகங்கள் எப்போதும் போல படம்பிடிக்கலாம். ஒடிசா அரசானது ரத யாத்திரையில் பங்கு பெறுபவர்களின் விவரங்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இவர்களின் மருத்துவ நிலையையும் பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளை கடைப்பிடித்து விழாவினை நடத்த வேண்டிய பொறுப்பு, பூரி ஜெகநாதர் கோயிலின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில், நடத்தப்பட்ட ரத யாத்திரை மூலமாகத்தான், காலரா மற்றும் ப்ளேக் வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியான சம்பவம் இப்போது நிகழந்துவிடக் கூடாது என்றுதான் பல கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் நிலைமை இன்னும் மோசமடைந்துவிடும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பூரியில் ஊரடங்கானது கடந்த திங்கள்கிழமை, இரவு 8 மணி முதலே அமலுக்கு வந்தது. நேற்று தொடங்கப்பட்ட ரத யாத்திரையில் சேவகர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனப் பூரி மாவட்டத்தின் ஆட்சியாளர் பல்வந்த் சிங் கூறியுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 1,143 சேவகர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லாத பட்சத்திலேயே விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவைப் பொறுத்தவரை தற்போது வரை கொரோனா தொற்று 6,000-க்கும் அதிகமாகத்தான் உள்ளது. 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

உலகமே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகலை கடைப்பிடித்து வருகிறது. இந்த சூழலில் 1,000 நபர்களுக்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூடும் விழாவினை நடத்துவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனி வரும் நாள்களில் ஒடிசாவில் கொரோனா பாதிப்பு அதிகமானால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.